கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது.
இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
அரசு நடத்திய நிகழ்ச்சிகளாக இருந்த உலக தமிழ் மாநாடுகளில் கவிதைகள் படிப்பதும் கூட அவர் பகுத்தறிவை விடாமல் முழங்கி வந்தார். எந்த மேடையிலும் தனது கொள்கையை அவர் சமரசம் செய்து கொண்டதே இல்லை.
‘பெரியார் பெருங்காவியம்’ ஒன்றை எழுதுகின்ற முயற்சியில் அவர் இறங்கினார். ஆனால் அந்தப் பணி முற்றுப் பெறாமலே போய் விட்டது. பெரியாரைப் பற்றி ஏராளமான கவிதைகளை அவர் எழுதி குவித்திருக்கிறார்.
“ஆயிரம் ஆண்டாய் சிறையே கோயிலாய் எண்ணிய குருட்டு மாந்தர் விழிக்கு விடுதலை வெளிச்சம் கொடுத்த அறிவுக் கோமகன் தான் நம் பெரியார்” என்று அவர் எழுதினார்.
“ஊனப்படுத்திய உளுத்தர்கள் மீது மான நட்ட வழக்கு தொடுக்க கருப்பாடை தரித்த முதல் வழக்கறிஞன், தருப்பைகள் போட்ட சதித்திட்டத்தை சுட்டுப் பொசுக்கிய துப்பாக்கி” என்று அவருடைய கவிதைகள் பெரியாருக்காக வெடித்துக் கொண்டிருந்தன.
பெரியார் குறித்து அவர் எழுதிய கவிதையில் இப்படி எழுதியிருந்தார்…
அள்ளப் பழுத்த
அழகு முகத்தில்
வெள்ளைத் தாடி
விரிந்து கிடப்ப
கறுப்புடை போர்த்த
சிவப்பு ஞாயிறே!
செருப்பாய் கிடந்த
செந்தமிழ் இனத்துக்கு
அரியணை ஏறி
துரைத்தனம் நடத்தும்
உரிமை பெற்றுத் தந்தவனே!
தமிழ்நாட்டு இலையுதிர் காலத்து
எழுந்த வசந்தமே!
தத்துவ மூலதனமே!
தமிழர்க்கு மொத்தமாய்
கிடைத்த முகவரியே!
நீ ஒருவன் மட்டும் உதித்திருக்காவிடில்
தர்ப்பைப் புல்லினால்
தமிழனின் கழுத்தைச்
சுருக்குப்போட்டு
தொங்க வைத்திருப்பர்!
நன்றி: முகநூல் பதிவு