இப்படி ஒரு ரசிக மனோபாவம் தேவையா?

‘மாஸ்டர்’ படத்தின் இமாலய வெற்றியை அடுத்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள லியோ வரும் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடல் வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலை அனிருத் இசையில் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடி இருந்தனர். பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், ரசிகர்கள் முன்னிலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

‘ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது’ என கை விரித்த காவல் துறையினர் விழாவுக்கு அனுமதி மறுத்தனர்.

லியோ படத்தின் விநியோக உரிமையை அமைச்சர் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பாளர் மறுத்ததால், விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விஜய் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் டிரெய்லர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

திரையரங்கு முன்பு மதியத்தில் இருந்தே விஜய் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் திரையரங்குக்குள் நுழைந்தனர்

டிரெய்லர் திரையிடப்பட்டபோது விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். உற்சாக மிகுதியால் தியேட்டர் இருக்கைகளை உடைத்தனர். ரசிகர்கள் ரகளையால் தியேட்டரின் உள்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

காஷ்மீர் அழகு லியோ படத்தின் ட்ரெய்லர், விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் பேசும் வசனங்களே அதிகம்.

‘இதுக்கு மேல உண்மைய சொல்லனும்னா லியோ தான் உயிரோடு வரணும்’ என்ற வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

அனிருத்தின் பின்னணி இசை, வழக்கம் போல், நெஞ்சை தடதடக்க வைக்கிறது. ‘லியோ’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.

You might also like