“தொலைந்துபோயிருந்த நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது, தொலைபேசியில் உன் குரல் பூத்தவுடன், கீர்த்திமிகு கருவி கண்டுபிடித்த கிரஹாம்பெல்லுக்கு நன்றி”.
பல நாட்களாய் பேசாமல் இருந்த காதலி தொலைபேசியில் அழைத்தவுடன் மனதில் எழுந்த கவிதையை, வார்த்தைகளில் வடித்தான் கவிஞன் ஒருவன். ஆனால், மேலே இவரின் பாடல் கேட்கும்போது,
“வறண்டு கிடந்த மனதில் பதிந்திருந்த வருத்தங்கள், வானொலியில் உன் வசந்த குரலாக பூத்தவுடன்” வருத்தங்கள் இடம் மாறுகின்றன, வசந்தங்கள் இடத்தை பூர்த்தி செய்து விடுகின்றன.
உணர்வுகளில் ஊஞ்சலாடிவிட்டுப் போகும் இந்தக் குயிலின் குரல், பழைய ஈரமான நினைவுகளை எழுதி வைத்திருக்கும் புத்தகத்தை, நெஞ்ச நூலகத்திலிருந்து எடுத்து ஒருமுறை படித்துவிட்டு, மீண்டும் நெஞ்சுக்குள்ளேயே வைத்துவிடுகிறது.
வசந்தங்களை வாரி இறைத்துவிட்டுப் போன இந்த இசை தேவதை யார்?. இசை ரசிகர்களை தன் குரலால் கவர்ந்திழுக்கும் அந்த காந்தக் குயிலின் பெயர்தான் லதா மங்கேஷ்கர்.
லதா மங்கேஷ்கர் – ஒரு பெயரல்ல, திரை ரசிகர்களின் 70 ஆண்டுகால வரம். மொழியின் ஆதிக்கங்களை தரைமட்டமாக்கி, குரலால் கோலோச்ச முடியும் என நிரூபித்துக் காட்டிய ஒரு குயிலின் பாட்டுத்தவம்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி பிறந்த இந்த இசை தேவதை, இசை உலகை ஆளப்போகும் இசை அரசி என்பது அப்போது தெரியாது.
தந்தை பண்டிட் தீன நாத் மங்கேஷ்கர் இசை மேதை. அதனால் இசை ஆர்வம் லதாவுக்கு உணவோடு ஊட்டப்பட்ட உணர்வானது. தந்தை மேடை நாடக நடிகர் என்பதால், கவின்மிகு கலைகள் சிறுவயது முதலே லதாவின் கைப்பிடித்து நடந்தன. கட்டியணைத்துக் கொண்டன.
13 வயதில் தந்தையைப் பறிகொடுத்த லதா மங்கேஷ்கரின் குடும்பத்தை வறுமை பற்றிக்கொண்டது.
பற்றில்லாமல் பற்றிக்கொண்ட வறுமையை விரட்ட மேடைகள் ஏறினார். பாடல்கள் பாடினார். நாடகங்களில் நடித்தார்.
இதனால் அடுக்களையில் குடியிருந்த வறுமை, அடுத்த வீடு பார்க்கத் தொடங்கியது. லதா மங்கேஷ்கரின் வளமையான குரலால் அவரது வாழ்க்கையில் வசித்துக் கொண்டிருந்த வறுமையின் சாயம் வெளுக்கத் தொடங்கியது.
1942-ம் ஆண்டு ”கிதி ஹசால்” என்ற மராத்திப் பாடலைப் பாடினார். மராத்தியிலிருந்து 1948-ல் ஹிந்திக்கு மாறிய லதா மங்கேஷ்கருக்கு மஜ்பூர் திரைப்படம் மங்காத புகழைத் தந்தது.
‘பர்சாத்’, ‘அந்தாஸ்’, ‘துலாரி’ ‘மகால்’ உள்ளிட்ட திரைப்படங்கள் லதாவின் குரல் மூலம் வெற்றி கண்டன. ஹிந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத பின்னணி பாடகியானார் லதா மங்கேஷ்கர்.
நவ்ஷத், எஸ்.டி. பர்மன், மதன்மோகன், சங்கர் ஜெய்கிஷன் உள்ளிட்ட திரை இசை மேதைகளின் திறமைகளை, தீர்மான நகலாக ரசிகர்களுக்கு வழங்கின, லதாவின் பாடல்கள்.
எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் உச்சரிப்பு லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம். அதனால் அத்தனைப் பாடல்களிலும் பதிவானது, ரசிகர்களின் நேசம்.
இசை ஞானி இளையராஜாவின் இசையில் லதாவின் குரலில் குலுங்கிய “வளையோசை…”, காதலை கவுரவமாக மொழி பெயர்த்துச் சொன்னது.
தாயின் மடியில் தலை வைத்திருக்கும் குழந்தைக்கு கிடைத்த “ஆராரோ…” என்ற அழகான, ஆறுதலான தாலாட்டை நினைவுப்படுத்தியது ஒரு பாடல்.
மராத்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, அசாமி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் லதாவின் தேன் குரல் தெளிக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் அதிகமான பாடல்கள் பாடியதால், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள லதாமங்கேஷ்கர், காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களில் ராஜ்ஜியம் அமைத்து, கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார்.
மீரா பஜன், பகவத் கீதை, சூஃபி பாடல்கள், வந்தே மாதரம் என லதா மங்கேஷ்கரின் குரல் அகலமானதால், லதா மங்கேஷ்கர் வெறும் திரைப் பாடகியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் ஈடு, இணையில்லாத இசை சொத்தானார்.
பாரத் ரத்னா, தாதா சாஹேப் பால்கே விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகள் லதா மங்கேஷ்ரின் புகழ் கிரீடத்தில் வைரக்கற்களாய் மின்னுகின்றன.
லதா மங்கேஷ்கர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். எத்தனைப் பதவி வகித்தால் என்ன? இந்தியாவின் இசை தேவதை இவர்தான் என அறுதியிட்டுக் கிடைத்துள்ள அங்கீகாரம் போலாகுமா?.
லதா மங்கேஷ்கர் உடலளவில் மறைந்துவிட்டார். ஆனால் அவரது குரலுக்கு மறைவேது?
✍️ லாரன்ஸ் விஜயன்