ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் உலகின் சிறந்த கல்வியாளர்களை பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களை கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதிலும் நோக்கமாக கொண்டு உள்ளது.
நமது வாழ்வியல் நடைமுறையில் ஆசிரியர் தொழிலுக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நமக்கு கற்பித்து தரப்பட்டு இருக்கிறது.
தாய், தந்தையருக்கு அடுத்த இடத்தில் ஆசிரியர் இருக்கிறார். இதிலிருந்தே ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லையென்றால் கல்வியை கற்பித்து கொடுப்பது என்பது இயலாத காரியம் ஆகிவிடும்.
பண்டைக் காலத்தில் நமது நாட்டைப் பொறுத்தவரை குருகுல கல்வி முறை அமலில் இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில்தான் குருகுல கல்வி முறைக்கு விடை கொடுக்கப்பட்டு மெக்காலே கல்வி முறை மூலம் இப்போது நாம் கற்றுக் கொண்டிருக்கும் கல்வி திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய ஆசிரியர் தின விழாவில் அகில இந்திய அளவில் ஆசிரியர் பணிக்கு சிறப்பாக சேவை செய்தவர்களுக்காக மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது.
அதே நாளில் மாநில அரசும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் என அறிவித்ததற்கு காரணம் ஆசிரியராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து மறைந்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் சுமார் 200 நாடுகள் சர்வதேச ஆசிரியர் தின விழாவை கடைப்பிடித்து வருகின்றன.
மாவட்ட மாநில தேசிய அளவில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஆர்மீனியா நாட்டின் தலைநகரமான யெரெவான் நகரில் ஹ்ராஸ்டன் நதி கரையில் ஆசிரியர் பணியை போற்றும் வகையில் எழுத்துக்களை கற்றுத் தருதலின் அடையாளமாக மெசுரப் மசுடாட்சு என்கிற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆசிரியர் நாளினை கொண்டாடுவதற்காக யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.
அதன் மூலம் ஆசிரியர்களை பற்றிய சிறந்த புரிதலையும் மாணவர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கையும் உலகிற்கு வழங்க இது உதவுகிறது.
இந்த நோக்கத்தை அடைய இந்த அமைப்பு ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.
எந்த ஒரு தொழிலிலும் பணியிலும் இல்லாத ஒரு சிறப்பு ஆசிரியர் பணிக்கு உண்டு. அதுதான் பணி திருப்தி என்கிற சொல்.
லாப நோக்கில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கு இடையே ஆசிரியர் பணி மட்டும்தான் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யப்படும் ஒரு பணியாகும்.
ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களை ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் வளர்ப்பதற்காக அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக நாள் முழுவதும் உழைக்கிறார்கள். இதுவே அர்ப்பணிப்பு உணர்விற்கு எடுத்துக்காட்டாகும்.
அதனால் தான் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் ஆசிரியர்களை மறக்காத தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.
இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தில் தன்னை வடிவமைத்த ஆசிரியர்கள் பற்றியும், வறுமையில் வாடிய காலத்தில் தனக்கு உதவிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி பற்றியும் பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி பயின்றபோது ஆசிரியர் பணி செய்த பாதிரியார்களை பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால் தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது என்பதை பெருமையுடன் குறிப்பிட்டு இருப்பதோடு தனக்கு கல்வி பயின்ற ஆசிரியர்களை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவர் சந்தித்து வாழ்த்து பெற தயங்கியதும் இல்லை.
அதனால்தான் எந்த ஒரு குடியரசுத் தலைவரும் செய்யாத பணியை அவர் தான் பதவி வகித்த காலத்தில் செய்தார். அதாவது பள்ளிகளையும் கல்லூரிகளையும் தேடிச் சென்று கனவு காணுங்கள் மாணவர்களே வருங்கால இந்தியா உங்கள் கையில் என்று கூறினார்.
அதற்கான வழிமுறைகளையும் தொகுத்து உரையாற்றினார். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவர் தேர்ந்தெடுத்த பணி மாணவர்களுக்கு கல்வி பயில்வது சம்பந்தமாக செய்த பிரச்சாரங்கள் தான்.
அப்படி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த போதே மேடையில் நின்று கொண்டிருந்த போது மாணவர்கள் மத்தியில்அவர் உயிர் பிரிந்ததும் ஆசிரியர் பணி மேல் அவர் வைத்திருந்த பற்றிற்கு ஒரு காரணமாக அமைந்தது.