‘தி வாக்சின் வார்’ சாதராண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?

கோவிட் – 19 நோய்த்தொற்று காலத்தை மிகக்கொடுமையானதாகக் கருதுகிறீர்களா?

அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று விரும்புனீர்களா?

அந்த நோய்த்தொற்றுக்குப் பின்னால் சர்வதேச மருந்து மாஃபியாவின் கைவரிசை இருக்கிறதென்று நம்புகிறீர்களா? அது போன்ற பல விஷயங்களைப் பேசுகிறது இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் ‘தி வாக்சின் வார்’.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னிருந்து, அதற்கான தீர்வாக கோவேக்சின் பலருக்குச் செலுத்தப்பட்டது ஊடகங்களில் வெளியானது வரை வெறுமனே தடுப்பூசிச் செயல்பாட்டை மட்டுமே இப்படம் பேசுகிறது.

சரி, படம் எப்படியிருக்கிறது? சாதாரண ரசிகர்களுக்கும் புரியும்படியாக, இதில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதா?

தினசரித் தகவல்கள்!

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தலைவரான டாக்டர். பலராம் பார்கவா, 2020 ஜனவரி 1ஆம் தேதியன்று டெல்லியிலுள்ள தனது அலுவலகத்துக்குச் செல்வதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.

சக பணியாளர்களிடம் கெடுபிடியாகப் பேசும் வழக்கமுள்ளவர் பலராம் பார்கவா (நானா படேகர்).

சீனாவின் வுகான் நகரில் சில நோயாளிகள் நிமோனியா போன்ற ஒரு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தில் இருந்து அவருக்குத் தகவல் வருகிறது.

அதையடுத்து, இந்தியா அதனை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்ற ஆய்வில் அவர் இறங்குகிறார்.

புனே நகரிலுள்ள இந்திய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரியா ஆபிரகாமிடம் (பல்லவி ஜோஷி) பேசுகிறார். அந்த வைரஸ் குறித்து தகவல் திரட்டுமாறு கூறுகிறார்.

சில நாட்கள் கழித்து, கேரளாவில் முதன்முறையாக ஒரு இளம்பெண் கோவிட் -19 பாதிப்புக்கு உள்ளாகிறார். அவர் வுகானில் இருந்து இந்தியா வந்தவர்.

அதன்பிறகு நோய்பரவல் அதிகமாக, மெல்ல அந்த கிருமியைத் தனியே பிரித்தெடுக்கும் முயற்சியில் வைரஸ் ஆய்வு நிறுவனம் இறங்குகிறது.

அதன் தொடர்ச்சியாக, அந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

அதன்பின்னரே, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் ஆலோசனையின் பேரில் கோவிட் -19யைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை இந்திய அரசு அமல்படுத்துகிறது.

நோய்க்குத் தீர்வு காண்பதில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். கொரோனா கிருமியை மரணிக்கச் செய்து, அதையே மருந்தாகப் பயன்படுத்தும் யோசனையில் இறங்குகின்றனர்.

அதற்காக வெள்ளெலி முதல் குரங்குகள் வரை சில உயிரினங்களில் அந்த தடுப்பு மருந்தைப் பரிசோதித்துப் பார்க்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

அதேநேரத்தில், இண்டியன் வயர் எனும் பத்திரிகையைச் சேர்ந்த ரோகிணி சிங் தூலியா (ரெய்மா சென்) எனும் பத்திரிகையாளர், தொடர்ந்து கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா ஈடுபடுவதற்கு எதிராகத் தனது கருத்துகளைத் தெரிவித்தவாறே இருக்கிறார்.

அம்மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பலருக்குச் செலுத்தப்பட்டு நோய் பாதிப்பு குறைந்தபிறகும், அவர் தனது கருத்து தெறிப்புகளை நிறுத்துவதாக இல்லை.

’வெளிநாட்டில் இருந்து தடுப்பு மருந்தைத் தருவிப்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டாதது ஏன்’ என்பதே அவரது கேள்வியாக இருக்கிறது.

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுக்கு எதிரான தனது கருத்து யுத்தத்தைப் பத்திரிகையாளர் ரோகிணி நிறுத்தினாரா? கோவேக்சின் தடுப்பூசியை இந்த உலகம் எவ்வாறு எதிர்கொண்டது?

அதனைத் தயாரிப்பதில் இந்திய விஞ்ஞானிகள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன என்று விலாவாரியாகச் சொல்கிறது இந்த ‘தி வாக்சின் வார்’.

மிக முக்கியமாக, வுகானில் செயல்பட்ட சீனாவின் மருத்துவ ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கிருமி செயற்கையாக உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது.

திரும்பத் திரும்ப, ஒரு சில கதாபாத்திரங்களில் கணிப்புகளாக மட்டுமே திரையில் வெளிப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரும் பல காட்சிகள், அவற்றின் ஊடாகச் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் நாம் ஏற்கனவே தினசரிகளில் படித்த தகவல்கள் தான்.

ஆனாலும், அவற்றை ஒரு நேர்த்தியான திரைக்கதையாக மாற்றியிருப்பதில் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரியின் உழைப்பு தெரிகிறது.

தவிர்க்க முனைகிறது.

கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது, எந்த இடத்தில் பிரமாண்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிந்திருப்பது, விஎஃப்எக்ஸை எந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்பது இயக்குனருக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது.

மிக முக்கியமாக, கலைப்படங்கள் போல பின்னணி இசை இல்லாமல் நகரும் பெரும்பாலான உரையாடல்களுக்கு நடுவே உணர்வுப்பூர்வமான தருணங்களை மட்டும் அடிக்கோடிடுவது போலப் பின்னணி இசை அமைக்கும் உத்தியை அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தின் திரைக்கதை எந்த இடங்களில் எல்லாம் மேலெழுகிறதோ அதனை ஒரு வரைபடமாக வரைந்தால், காஷ்மீர் பைல்ஸ் திரைக்கதைக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

மிக முக்கியமாக, இதில் வரும் ரெய்மா சென் பாத்திரத்திற்கும் அப்படத்தில் இடம்பெற்ற பல்லவியின் பாத்திரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. கிளைமேக்ஸ் காட்சி கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான்.

ஆனால், அதனை நாம் யோசிக்கவிடாமல் வைப்பதே ஒரு இயக்குனராக விவேக் ரஞ்சம் பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி.

முழுக்க முழுக்க கோவிட் – 19 தொடர்பான மருத்துவத் தகவல்கள், ஆய்வுச் செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளதால் இப்படத்தைப் பார்க்கும் சாதாரண ரசிகர்கள் அயர்ச்சி அடையக் கூடும்.

அதையும் மீறிப் படம் பார்க்கத் தயாராக இருப்பவர்களை ‘தி வாக்சின் வார்’ நிச்சயம் திருப்திப்படுத்தும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like