கோவில் உட்பட எங்கும் தமிழ் வேண்டும்!

– ம.பொ.சிவஞானம்

ஜெயகாந்தன் : (ம.பொ.சிவஞானத்திடம்) “நீங்கள் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”

ம.பொ.சி பதில் : இன்று அல்ல, 1948-லிலேயே புரசைவாக்கம் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில் இதற்காக, கோவில் சீர்திருத்த மாநாட்டைக் கூட்டினேன்.

அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களை அதற்குத் தலைமை தாங்கச் செய்தேன். ஒரு மலரும் வெளியிட்டோம். அதில் ஒரு கட்டுரை எழுதினேன்.

ஆட்சிபீடம், இறைவன் கோவில், பல்கலைக்கழகம் என்பதாகத் தமிழ் எல்லா இடத்திலும் வரவேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.

இது தமிழ்நாடு. பெருவாரியான மக்கள் தமிழ் பேசுகிறார்கள். தமிழில் அர்ச்சனை கூடாது என்றால் எத்தனையோ பேர்களுடைய மனம் புண்படாதா?

ஜெயகாந்தன் : சமஸ்கிருதத்தில் அர்ச்சனை கூடாது என்றால் புண்படுகிற மனமும் இருக்கும் அல்லவா?

ம.பொ.சி : ‘தமிழில் வேண்டாம்’ என்றால் புண்படாது, சமஸ்கிருதம் வேண்டாம் என்றால் புண்படும்’ என்றால், அந்த மனம் தவறான மனம்.

ஜெயகாந்தன் : வடக்கேயுள்ள வைணவ கோவில்கள் பலவற்றில் ராமானுஜ கூடங்களில் தமிழைப் பற்றி எதுவுமே தெரியாத வைணவர்கள், திவ்ய பிரபந்தத்தை அவர்கள் மொழியில் எழுதி அர்ச்சனை செய்வது உங்களுக்குத் தெரியுமா?

ம.பொ.சி : ஏன், திருப்பதியில் திவ்யபிரபந்தத்தை அப்படியே தெலுங்கு ஸ்கிரிப்டில் எழுதி வைத்துக் கொண்டு சொல்கிறார்கள்”

– மூத்த பத்திரிகையாளர் பால்யூ எழுதித் தொகுத்த “பிரபலமானவர்கள் சந்திப்பு” என்ற நூலில், எழுத்தாளர் ஜெயகாந்தனும், ம.பொ.சிவஞானமும் சந்தித்து உரையாடியதின் ஒரு பகுதி.

You might also like