கூகுள் வயது 25!

‘எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கூகுளாண்டவா’ என்று வேண்டிக்கொள்ளும் அளவுக்கு கூகுள் கைங்கர்யங்கள் பயனாளிகளுக்குக் கிடைத்து வருகின்றன.

வெறுமனே தேடல் எந்திரமாக மட்டுமல்லாமல் பல்வேறு சேவைகளையும் தயாரிப்புகளையும் அது வழங்குகிறது.

1998 செப்டம்பர் 4 அன்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்கே ப்ரின் மற்றும் லேரி பேஜ் என்ற இரு ஆய்வு மாணவர்களால் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட ஒரு இணையதளம், இப்படியொரு பேருருவைப் பெறும் என அக்காலகட்டத்தில் எவரும் நினைத்துப் பார்க்க முடியாது.

அதே ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று, கூகுள் ஒரு நிறுவனமாக இயங்க ஆரம்பித்தது. அந்த நாளே கூகுள் நிறுவன பிறந்ததினமாகத் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது.

அப்படிப் பார்த்தால், இன்றோடு கூகுளுக்கு வயது 25. அதனைக் கொண்டாடும் விதமாக, இன்று கூகுள் தளத்தில் ‘G25gle’ எனும் டூடில் ஒளிர்கிறது.

பிரமாண்டமான தேடல் தளம்!

இரண்டாயிரமாவது ஆண்டில் பல தேடல் எந்திரங்கள் இணையத்தில் காணக் கிடைத்தன. அவற்றில் பல அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் வரவேற்பைப் பெற்றன.

அப்போது, அவற்றில் ஒன்றாக இருந்தது கூகுள். ஆனால், அதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே அடுத்த தலைமுறை இணையவாசிகளின் ஆதரவை எப்படியெல்லாம் பெறுவது என்ற திட்டமிடுதல்களிலும் செயல்பாடுகளிலும் இறங்கியது; தற்போது அதற்கான பலனைத் அறுவடை செய்து வருகிறது.

‘இந்த உலகம் விரும்புகிற, பயனடைகிற தகவல்களை எளிதாகக் கிடைக்கச் செய்வதிலும், ஒட்டுமொத்தமாகத் தொகுத்து தருவதிலும் சிறப்பாக இயங்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை ஒரேநேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்’.

இதனையே முதன்மையாகக் கொண்டு கூகுள் செயல்படத் தொடங்கியது. அன்று தொடங்கி இன்றுவரை அந்தச் செயல்முறையில் பின்னேற்றம் ஏற்படவே இல்லை.

இப்போது, கூகுளில் எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற நிலை வந்துவிட்டது.

உங்கள் மனதில் தனித்துவமாகத் தோன்றிய ஒரு சிந்தனையைக் கூட, உலகின் வேறொரு மூலையில் இருக்கும் இன்னொருவருக்குத் தோன்றியதா இல்லையா என்பதைச் சோதித்து அறிய முடியும்.

தினசரி வாழ்வில் பலவாறு அலைக்கழிக்கும் சந்தேகங்களுக்கும் கூட விடை காண முடியும்.

எவ்வாறு நீச்சலடிப்பது? பைக் ஓட்டுவது தொடங்கி டைனோசர் முட்டையை மீண்டும் உயிர்ப்பிப்பது வரை எதற்கும் பதில் பெற முடியும்.

அந்த அளவுக்கு, நுணுக்கமான கூறுகளைப் பிரித்துப் பார்த்து, மைக்ரோ நொடிகளில் பதில்களைத் திரட்டும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறது கூகுளின் ஆதிக்கம்.

அதற்காக, எத்தனை பணியாளர்கள், எவ்வளவு மணி நேரம் உழைத்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே மலைப்பு பெருகுகிறது.

எங்கும் எதிலும்..!

சீனா, ஜப்பான் போன்ற சில நாடுகள் தவிர்த்து உலகம் முழுக்கப் பெரும்பாலும் கூகுள் பரவியிருக்கிறது. அதற்குப் பல்வேறு மொழிகளில் அதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகளைத் தேடிப் பிடித்ததும் காரணம்.

அதேபோல, இணைய உலகில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பலன்களைப் பெறுவதிலும் கூகுள் ஒரு முன்னோடி.

இருபதாண்டுகளுக்கு முன்னர், ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்குள் ‘தாவு’ தீர்ந்துவிடும். இன்று, அந்தச் செயல்முறை இயல்பானதாக மாறியபிறகு உலகம் நம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

“அந்த காலத்தில் எனது தந்தைக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, அதை அவர் பெற்றாரா இல்லையாரா என்பதை நான் அறிய இரண்டு நாட்கள் ஆனது.

இன்று, எனது மகன் மிகச்சில நிமிடங்களில் தன்னைச் சுற்றியிருப்பதைப் படம்பிடித்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார்.

இவ்விரு தலைமுறைக்கு இடையிலான மாற்றம் மிக முக்கியம்” என்று கூகுளின் பயணம் குறித்த பதிவில் தனது எண்ணங்களை பகிர்ந்திருக்கிறார் அதன் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை.

கூகுள் வாட்ச் மூலமாக, நமக்கு வரும் ஒரு அழைப்பை ஏற்க முடியும்; நமக்குப் பிடித்த பாடலை உரக்கச் சொல்வதன் மூலமாக, காரில் அதனை ‘ப்ளே’ செய்து கேட்டு ரசிக்க முடியும்.

இப்படியொரு முன்னேற்றம் வருமென்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா என்பது சுந்தர் பிச்சையின் கேள்வி. நிச்சயமாக, அதற்கு ‘இல்லை’ என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

தற்போது கூகுள் தளத்தில் மின்னஞ்சல், படங்கள், வரைபடங்கள், செய்திகள், மொழியாக்கம், யூடியூப், புகைப்படங்கள், விவாதம், ப்ளே ஸ்டோர், கூகுள் சந்திப்பு உட்படப் பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன.

இதுபோக ப்ளாக்கர் உட்படப் பல்வேறு பயன்பாட்டுச் செயலிகளைப் பெறவும் வழியமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 133 மொழிகளில் கூகுள் சேவைகள் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போன், செயலிகள், கணினிப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் சுகாதாரம், வர்த்தகம், உற்பத்தி, தகவல் தொடர்பு, படைப்பாக்கம் சார்ந்த பல்வேறு ஆலோசனை சேவைகளையும் வழங்கி வருகிறது.

இவையனைத்தும் சேர்ந்து, எங்கும் எதிலும் கூகுள் நிறைந்திருக்க வேண்டும் என்கிற அதன் நோக்கைத் தெளிவுபடுத்துகிறது.

தொடரும் பயணம்!

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதை அடியொற்றிப் பின்பற்றுகிறது கூகுள். அதேநேரத்தில், கடந்த காலத்தின் அனுபவங்களையும் அது புறக்கணிப்பதில்லை. இந்தச் சமநிலை ரொம்பவே முக்கியமானது.

அதுவே, இத்தனை ஆண்டுகளாகப் பல்வேறு பயனாளர்கள், கைகோர்த்து இயங்கிய நட்பு நிறுவனங்களைத் தாண்டி புதிய வாய்ப்புகளையும் நிறுவனங்களையும் அடையாளம் கண்டு கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அடிப்படையாக விளங்குகிறது. அதன்மூலமாக, புதிய பரப்புகளில் தொடர்ந்து தடம் பதிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது கூகுள்.

ஆண்ட்ராய்டு போன்களின் பயன்பாடு பெருகிவிட்ட சூழலில், உடனுக்குடன் மக்கள் விரும்புபவற்றைத் தருவதில் மாபெரும் சந்தைப்போட்டி உருவாவது இயல்பே.

அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துக் கொள்வதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே கூகுள் தொடங்கிவிட்டது.

இன்றைய சூழலில், மொழி தெரியாத இரண்டு பேர் சர்வசாதாரணமாக உரையாட முடியும்.

சந்திக்க வாய்ப்பே இல்லாத இரு மனிதர்கள் ஒன்றாகத் தொழிலில் கைகோர்க்க முடியும். எப்பேர்ப்பட்ட தகவல்களையும் மிகச்சில நொடிகளில் பகிர முடியும். இதனால் கிடைக்கும் பலன்கள் அளப்பரியது.

அதனைச் சாத்தியப்படுத்தியதில் கூகுள் பங்களிப்பு மிக அதிகம். அதனாலேயே, இந்த 25 ஆண்டுகாலப் பயணம் அடுத்துவருவன குறித்த எதிர்பார்ப்பைப் பூதாகரமாக்கியிருக்கிறது.

அதில் இன்னும் பல மைல்கற்களைத் தாண்டி புதிய இலக்குகளை அடைய வேண்டும். அது அனைவருக்கும் சாதகங்களை அள்ளித்தர வேண்டும்..

– உதய் பாடகலிங்கம்

You might also like