எழுத்தின் வலிமையை இந்தக்கால தலைமுறைக்கும் உணர்த்திக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனுக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான்களில் ஒருவர் தான் கவிஞர் தமிழ்ஒளி.
வானம் பார்த்து வளமான கற்பனையில் வாழ்ந்திட்ட கவிஞர்கள் மத்தியில் பூமி பார்த்து விடியலுக்கான பூபாளம் பாடியவர் தமிழ்ஒளி.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் கிராமத்தில் பிறந்த இவர், பாவேந்தர் பாரதிதாசனின் அரவணைப்பில் கவிதைகள் எழுதி உற்சாகம் பெற்றவர்.
வந்த விடுதலை யாருக்கென்று – அதை
வாங்கிய வீரரை கேட்டிடுவோம் – இங்கு
நொந்து கிடப்பவர் வாழவில்லை – எனில்
நொல்லை விடுதலை யாருக்குடா?
– என உறுதியான கருத்துக்களை கவிதையில் உரைத்தவர் கவிஞர் தமிழ் ஒளி.
இளம் வயதிலியே பொதுவுடைமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டிருந்த இவரது மன உறுதி தோழர் ஜீவாவை சந்திக்க வைத்தது.
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939 ஆம் ஆண்டு இந்திய அளவில் உருவான அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ்நாட்டு அமைப்புக் கிளையின் ஒருங்கிணைப்புக் குழுவில் 1949-ல் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றார்.
கவிஞர் தமிழ் ஒளி வெறும் கவிஞர் மட்டுமல்ல மார்க்சிய தத்துவ நோக்குக் கொண்டவர். பத்திரிகை ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், கலை இலக்கிய ஆய்வாளர், சிறார் எழுத்தாளர், திரைப்பட எழுத்தாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
1950-களில் வெளிவந்த தமிழ் ஒளியின் “சாக்கடை சமுதாயம்” எனும் சிறுகதைத் தொகுப்பு தான் தனக்கு சிறுகதை எழுத உந்து சக்தியாக இருந்தது என ஜெயகாந்தன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பல்வேறு கவிஞர்கள் தனிபாடல், சிற்றிலக்கியம் எழுதியபோது, உழைக்கும் மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையையும், ஒடுக்கப்பட்டோரை நாயகர்களாகவும் கொண்டும் காப்பியம் படைத்தவர் தமிழ் ஒளி.
புதுமை இலக்கியம், ஜன யுகம், முன்னணி, மனிதன் போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி.
ஜனசக்தி அரசால் தடை செய்யப்பட்ட காலத்தில் கட்சியின் குரலை எதிரொலித்த தமிழ் ஒளியின் நூல்கள், தமிழ் அறிஞர்கள் மத்தியில் விவாதப் பொருளாயின. தமிழ் ஒளியின் காப்பியங்கள் சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டன.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, தாம்பரம் கிருத்துவ கல்லூரி, தமிழக அரசின் பாடநூல் கழக திட்டத்திலும் தமிழ் ஒளியின் படைப்புகள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன.
காச நோய், வறுமை, ஆகியவை காலத்தை வென்று நிற்கும் கவிஞர் தமிழ் ஒளியின் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை. 42-வது வயதில் தமிழ் ஒளியின் சுவாசத்தை இயற்கை நிறுத்திவிட்டது.
இந்த ஆண்டு இம்மாதம் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனவும் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியின் படைப்புகளை ஆய்வு செய்திட இருக்கை உருவாக்கப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒளியின் சிலை நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் வாழ்வு உயர்வதற்காகவும், தமிழ் ஒளி ஆற்றிய சமூக அரசியல் பணி என்றென்றும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.
– லாரன்ஸ் விஜயன்.