அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா.
எஸ்.ஜே. சூர்யவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படம்தான் அஜித்தை ஆக்ஷன் படங்களில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. இதுவரை அஜித்தின் படங்களில் வந்த அவரது அறிமுக காட்சிகளில் தீனா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு.
முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார்.
லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசிரியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
குறிப்பாக அதுவரை ஆக்ஷன் ஹீரோவாகவே வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் பக்குவமாக நடித்திருப்பார்.
முதல் இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் முன்னணி இயக்குநராக மாறிவிட்டார் முருகதாஸ்.
தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கஜினி படமும் மெகா ஹிட்டாக அந்தப் படம் ஹிந்தியில் ரீமேக்கானது. அமீர்கான் நடித்திருந்த கஜினி ஹிந்தி ரீமேக்கையும் முருகதாஸே இயக்கினார்.
பாலிவுட்டிலும் கஜினி ஹிட்டடிக்க இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து அவர் தமிழில் இயக்கிய ஏழாம் அறிவு படமும் ஹிட்டானது.
விஜய் தொடர் தோல்விகளில் துவண்டிருந்தபோது அவருக்கு பக்கா கமர்ஷியல் ஹிட் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி.
அதுவரை விஜய்யை யாரும் அவ்வளவு ஸ்டைலிஷாக பார்த்ததில்லை என்ற பெயரை துப்பாக்கி பெற்றுக்கொடுத்தது.
அதேபோல் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்த கத்தி படமும் மெகா ஹிட்டாக; மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது.
தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்த சூழலில் அவர் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.