அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் உபதொழில் ஒன்றையும் கைவசம் வைத்திருப்பார்கள்.
அரசியல் பிரமுகர்கள் பெரும்பாலும் ரியல் ‘எஸ்டேட்’ துறையில் கவனமாக இருப்பார்கள். சிலர் சினிமாவிலும் முதலீடு செய்வதுண்டு.
திரை உலகத்தினர் ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், குளிர்ப் பிரதேசங்களில் ரிசார்டுகள் என பணத்தை சேமிப்பது வழக்கம்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு துணை வியாபாரங்களில் பெரிதாக ஆர்வம் கிடையாது.
ஆனால், பொழுது போக்காக ரேஸ் பைக் மீது காதல் வந்தது. ‘பைக்’ போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கி உள்ளார்.
அந்த உற்சாகமோ என்னவோ தெரியவில்லை, கொஞ்ச நாட்களாக சினிமாவை உப தொழில் ஆக்கி கொண்டார். பைக் ரேசே பிரதானமாகப் போய் விட்டது.
இந்தியா முழுக்க பைக்கில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். அடுத்த கட்டமாக அவர் ‘பைக்’கில் உலகம் சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளில் அஜித் நடித்த துணிவு வெளியானது. அதே நாளில் விஜயின் வாரிசு சினிமாவும் ரிலீஸ். இரண்டுமே வெற்றி பெற்றன.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார்.
அடுத்த மாதம் அந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார்.
ஆனால் அஜித்?
10 மாதங்களாக அவருக்குப் படப்பிடிப்பு இல்லை.
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டிருந்தார். சந்தோஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
திரைக்கதை ரெடியாகும் வரை இன்னொரு ரவுண்ட் வரலாம் என திட்டமிட்ட அஜித், உலக பைக் பயணத்தில் ஒரு பகுதியாக நேபாளம், பூடான் சென்றார்.
இரு நாடுகளையும் பைக்கிலேயே சுற்றி விட்டு ஊர் திரும்பினார்.
சென்னை திரும்பியதும் லைகா நிறுவன படத்தை முடித்து விடலாம் என நினைத்தார். ஆனால் சந்தோஷ் சிவனுடன் அஜித் இனையும் படம் கை விடப்பட்டது.
பல காரணங்கள் சொல்கிறார்கள். இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்பது மட்டும் உண்மை.
லைகா நிறுவனத்துக்கு படம் செய்து கொடுப்பதில் உறுதியாக இருந்த அஜித்துக்கு, மகிழ் திருமேனி சொன்ன கதை திருப்தியாக இருந்தது. ஓகே. சொல்லி விட்டார். அந்தp படத்துக்கு ‘விடாமுயற்சி’ என பெயரும் சூட்டப்பட்டது.
மகிழ் திருமேனியும் ஸ்கிரிப்ட் வேலையை முடித்துவிட்டு, அஜித் கால்ஷீட்டுக்கு காத்திருந்தார்.
ஆனால், உலக பைக் பயணத்தில் இன்னொரு பகுதியாக அஜித் திடீரென ஓமன் நாட்டுக்கு பைக் ஓட்ட சென்று விட்டார்.
ஓமன் நாட்டில் அவர் பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலானது. ஓமன் பயணம் முடிந்துவிட்டது.
பயணத்தை நிறைவு செய்து விட்டு அஜித் இப்போது சென்னை திரும்பியுள்ளார்.
விடாமுயற்சி படப்பிடிப்பை விரைவில் தொடங்கி, தங்களுக்கு அரிதாரம் பூசிய ஸ்டில்களை அஜித் கொடுப்பார் என ‘தல’ ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில், துபாயில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இந்த நொடி வரை வரவில்லை. ஷுட்டிங்கை ஆரம்பிக்க லைகாவும், மகிழும் விடா முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அஜித் மீண்டும் உலகம் சுற்றப்போவது உறுதி. விடாமுயற்சியை முடித்துவிட்டு செல்வாரா? அல்லது படப்பிடிப்புக்கு ஒரு இடைவேளை விட்டுவிட்டு பயணப்படுவாரா? என்பது தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.