அகிலம் முழுவதும் அமைதி நிலவட்டும்!

சர்வதேச அமைதி தினத்தின் வேர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளில் இருந்து தொடங்குகிறது. 1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் 21 ஆம் தேதியை சர்வதேச அமைதி தினமாக அறிவித்தது.

இந்த நாளின் முதன்மை நோக்கம் என்பது ஒத்துழைப்பின் மூலம் உலக அமைதியை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளத்தை வழங்குவதாகும்.

அமைதியை நிலைநாட்டுவதும் பராமரிப்பதும் அரசாங்கங்களின் முழுப்பொறுப்பு அல்ல, ஆனால் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தீவிரமான பங்கேற்பு தேவை என்பது ஐ.நாவின் கருத்தாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அமைதி தினம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் தொடர்புடையது.

இந்த கருப்பொருள்கள் சமகால சவால்கள் மற்றும் சமாதானத்தை அச்சுறுத்தும் சிக்கல்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

உலகத் தலைவர்கள், சமாதன விரும்பிகள் ஆகியோர் ஒற்றுமை மற்றும் உலக அமைதியின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக இந்த நாளைப் பயன்படுத்துகின்றனர்.

மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கவும், சமூக நீதியை மேம்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய அவசரத் தேவையை அவை எடுத்துக்காட்டுகின்றன.

சர்வதேச அமைதி தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “Actions for Peace: Our Ambition for the GlobalGoals என்பதாக உள்ளது. அதாவது அமைதிக்கான நடவடிக்கைகளை உலக அளவிய இலக்குகளாக மாறுவதே ஐ.நா அமைப்பு லட்சியமாக கொண்டுள்ளது.

24 மணி நேரமும் அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அமைதியின் லட்சியங்களை வலுப்படுத்துவதற்காக இந்த நாளை அர்ப்பணிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைதி நாள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா அமைப்பின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ், “உலகில் முன்பை விட இப்போது அமைதி தேவை.

போரும் மோதல்களும் பேரழிவு, வறுமை, பசியை கட்டவிழ்த்து லட்சக்கணக்கான மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றுகிறது.

காலநிலை குழப்பம் சுற்றி உள்ளது. சமத்துவமின்மை, அரசியல் துருவமுனைப்பு ஆகியவற்றால் நாடுகள் பிடிபட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

வன்முறை இல்லாத அமைதியான அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைப்பதே இந்த நாளின் நோக்கம்.

You might also like