இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட்.
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.
முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்த அன்னி பெசன்ட், மகள் நோய்வாய்ப்பட்டபோது நாத்திகராக மாறினார்.
மதத்தின் மீது தீவிரப் பற்றுகொண்ட கணவருடன் அவரால் சேர்ந்து வாழ இயலவில்லை.
படித்தார்; பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தபோது, எதிர்ப்புகளைச் சம்பாதித்தார்.
‘லிங்க்’ பத்திரிகையில் அயர்லாந்திலும் இந்தியாவிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களை ஆதரித்துக் கட்டுரைகளை எழுதினார்.
பெண் விடுதலை, தொழிலாளர் உரிமை, குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றுக்காகவும் குரல் கொடுத்தார்.
1889இல் அமெரிக்காவில் ஹெலெனா பிளேவட்ஸ்கியைச் சந்தித்த பிறகு, மீண்டும் ஆத்திகரானார் அன்னி பெசன்ட். 1893இல் இந்தியாவுக்கு வந்தார்.
சென்னை அடையாறில் பிரம்மஞான சபையை நிறுவினார். இந்து சாஸ்திரங்களைக் கற்றார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்திய உடை அணிந்து, ஓர் இந்தியராக மாறினார்.
ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். 1915இல் ‘நியூ இந்தியா’ செய்தித்தாளை ஆரம்பித்தார்.
இதில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. காங்கிரஸ் கட்சி, மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிளவுபடுவதைத் தடுத்தார்.
1916இல் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை பால கங்காதர திலகருடன் ஆரம்பித்து, நாடு முழுவதும் கிளைகளை உருவாக்கினார்.
அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த அன்னி பெசன்ட், இந்தியா முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசி, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டினார்.
ஆங்கிலேய அரசு அவர் பேசிய கூட்டங்களுக்குத் தடை விதித்தது. கைது செய்து சிறையில் அடைத்தது. சில மாதங்களில் சிறையிலிருந்து அவர் வெளியே வந்தபோது, அவருடைய செல்வாக்குப் பல மடங்கு அதிகரித்திருந்தது.
1917இல் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அன்னி பெசன்ட். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகினாலும் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டார். இங்கிலாந்தில் பிறந்த அன்னி பெசன்ட், 1933ஆம் ஆண்டு 85 வயதில் சென்னையில் ஓர் இந்தியராக நீள்துயில் கொண்டார்.
– நன்றி: இந்து தமிழ் திசை