செம்மாப்புத் தமிழர் சிதம்பரச் செம்மல்!

நூல் அறிமுகம்:

பெரியவர் வ‌.உ.சி. குறித்து, தனது 93-வது அகவையில் வாழ்வின் முதன்மையான நூலாக 32 சிறப்பு கட்டுரைகள் தொகுத்து சிறப்பாக தந்தளித்திருக்கிறார் புலவர் துரை.மதிவாணன். இவர் வெளியிடும் முதல் புத்தகமும் இதுவே‌.

பெரியவர் வ.உ.சி.காலத்தில் வாழ்ந்த பாரதி, அரவிந்தர், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர், வ.ரா, ம.பொ.சி போன்றோர் மாபெரும் ஆளுமையாளர்கள் கட்டுரைகள் ஆரம்பித்து இன்றைய ஆய்வாளர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், குருசாமி மயில்வாகனன், கதிர்நம்பி, திருமூலர் முருகன் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் அடங்கியுள்ளன.

குறிப்பாக கண.குறிஞ்சி அய்யா நடத்தி வந்த முந்தைய இடது இதழ் சிறப்பு இதழ் வ.உ.சி.150 மற்றும் காக்கைச் சிறகினிலே சிறப்பு இதழ் கட்டுரைகளும் உள்ளடக்கியுள்ளது.

ஆரம்ப கட்ட தி.மு.க.வின் மிக முக்கியமான ஆளுமை மூத்தவர் அய்யா துரை.மதிவாணன் அவர்கள். தி.மு.க.வின் மும்முனைப் போராட்டத்தில் குறிப்பாக தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் மூன்று மாதங்கள் சிறைவாசம் கழித்தவர்.

பின்பு தி.மு.க. கொள்கையிலிருந்து மனதளவில் விலகி தனது புலவர் பட்டம் பெற்றிருப்பதால் புதுக்கோட்டை பகுதிகளில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆரம்பகட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்காக புதுக்கோட்டை பகுதிகளில் தங்களது மூதாதையர் சேர்த்து வைத்த தங்கம், வெள்ளி நகைகள் எல்லாம் விற்று அவர் தி.மு.க. கட்சிக்காக 1950, 60 களில் பொதுக்கூட்டங்கள் நடத்தியதும், செலவழித்ததும் தனக்கு அளிக்கப்பட்ட சட்டசபை தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பைக் கூட மறுத்து களப்பணி ஆற்றிய ஒழுக்க சீலர்.

ஏன் இவ்வளவு பூடகம் வளர்த்து சொல்கிறேனென்றால் இந்தப் பின்னணியில் வருபவர்கள் பொதுவாக தி.மு.க. வின் முன்னோர்களான பெரியார், அண்ணா ஆகியோர் வரலாற்றை எழுதுவார்கள்.

ஏனெனில் ஏதாவது பலன் கிடைக்கும். இவர் எந்தவொரு பலனையும் எதிர்பார்த்து வேலை செய்யக்கூடியவர் அல்ல. இவரது மனதை ஆட்டிப்படைப்பவர் என்றென்றும் பெரியவர் வ.உ.சி.யே.

பொதுவாக வ.உ.சி.யைப் பற்றி எழுதினாலோ, பேசினாலோ அந்தச் சாதியைச் சார்ந்தவராக இருப்பாரோ என்று தோண்டிப் பார்க்கும் மனநிலையில் உள்ள உலகம் இது.

அந்த சாதி சார்ந்தவரும் இவர் இல்லை. அப்புறம் எப்படி அய்யா பெரியவர் மீது இவ்வளவு அன்பு.

இந்த தள்ளாத வயதில் அதுவும் முதன்முறையாக தொகுக்கப்படும் புத்தகமாகவும் இருக்கிறதே என்று என் ஆர்வக் கோளாறால் கேட்டும் பார்த்தேன்.

இந்தியா அளவில் இவரையொத்த தலைவர் யாருமே கிடையாது என்பதாக மட்டுமே அவரது உடனடி பதில் கிடைத்தது.

இந்த நூல் தொகுக்கும் வேளையில் அய்யா என்னிடம் அடிக்கடி அலைபேசியில் தொடர்புகொள்வார்.

அப்போது எனக்கு இவரது உண்மையான பின்புலமும் தெரியாது. குறிப்பாக 93 வயது என்பதுவும் நான் அறியாதது. ஏதோ கேட்கிறார். பதில் சொல்லி விட்டு கடந்து சென்று விடுவேன். பல நேரங்களில் போன் எடுக்காமலும் தப்பு பண்ணியுள்ளேன்.

ஆனால், புத்தக வெளியீட்டு அன்றுதான் அய்யாவின் முழுமையான குணாம்சம் எனக்கு தெரியவந்தது. எனக்கு சிறப்பான அறை ஏற்பாடு செய்திருந்தார்.

தள்ளாத வயதில் நேரிடையாக பார்க்க வந்தவர் இரண்டு மாடி ஏறிவந்து கதவைத் தட்டியபோது அய்யாவின் முதுமை எனக்கு தெரியவந்தது.

பெரியவருக்கான அத்தனை குணாம்சத்துடன் இருந்தார். அவர் தொகுத்த “செம்மாப்பு தமிழர் சிதம்பரம் செம்மல்” நூலினை அன்பளிப்பாக அளித்தார்.

பெரியவர் வ.உ.சி.யின் மீது எவ்வளவு வாஞ்சை இருந்தால் 93 வயதில் இந்த வேலையை எடுத்து செய்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.

அடுத்து அய்யா சொன்ன விசயம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது. அதாவது வெளியீட்டுக்கு முன்பே புதுக்கோட்டை தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு.கே.கே. செல்லப்பாண்டி அவர்கள் தாம்பாளத்தில் பழங்கள் வைத்து 200 புத்தகங்கள் விலைக்கு வாங்கி அய்யாவை கவுரவப்படுத்தியதை சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த புத்தகம் நடிகர்கள் சிவக்குமார், சின்னி ஜெயந்த், பாண்டியராஜன் உட்பட பலர் வாங்கியதையும் போகிற போக்கில் சொன்னார்.

வழக்கறிஞர் கே‌.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் கட்டுரை எழுதியதையும் குறிப்பிட்டு பேசிய துரை.மதிவாணன் தமிழகம் முழுவதும் மிக முக்கியமான இடங்களில் இந்த புத்தகத்திற்கு விழா எடுக்கப் போவதையும் குறிப்பிட்டார்.

அன்று மாலை நூல் வெளியீட்டு விழா நடந்த போது நான் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டேன். சுமார் 700 புத்தகங்களுக்கு மேல் விழா மேடையிலேயே விற்றுத் தீர்ந்தது.

ஒவ்வொருவரும் 100 புத்தகங்கள், 50 , 25, 10 புத்தகங்கள் என பையில் வைத்து மொத்தம் மொத்தமாக வாங்கி செல்வதை இந்த நூல் வெளியீட்டு விழாவில் கண்டு ஆச்சரியத்தில் இருந்து என்னால் மீள இயலவில்லை.

இந்த புத்தக விற்பனை இத்தோடு முடியப் போவதில்லை.

தமிழ்நாடு முழுமையாக முக்கிய இடங்களில் அய்யா புலவர் துரை.மதிவாணன் அவர்கள் கொண்டு போய் சேர்த்து விடுவார் என்ற பெரிய நம்பிக்கையுடன் புதுக்கோட்டை நகரிலிருந்து அய்யா.துரை மதிவாணன் அவர்களது மாண்பினை நெஞ்சிலே பசுமையாக நிலைநிறுத்தி புறப்படத் தயாரானேன்.

இந்தியாவுக்கே சிறந்த வழிகாட்டும் மக்கள் தலைவர் வ.உ.சி. என்ற அவரது இரத்தின சுருக்கவுரை இன்னும் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது.

நூல்: செம்மாப்பு தமிழர் சிதம்பரச் செம்மல்
தொகுப்பாசிரியர்: துரை.மதிவாணன்
வெளியீட்டாளர்: பூஞ்சோலை பதிப்பகம், புதுக்கோட்டை.
விலை: ரூ. 300/-

தொடர்புக்கு: 9842037480

– ரெங்கையா முருகன்

You might also like