பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!

– கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்

பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் – போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை போடுகிறார்கள்.

ஒரு கலை இலக்கிய விமர்சகன் என்ற வகையில், இவரது கவிதைப் பிரதிகளின் அடிப்படையில் இவரை நான் எடை போட விரும்புகிறேன்.

1. உள வெளிப்பாட்டுக் கவிதைகளின் அரசியான சில்வியா பிளாத் எரியும் அடுப்பில் தலையை வைத்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது போன்றோ, கிணற்றில் குதித்த ஆத்மாநாம் போன்றோ பிரான்சிஸ் கிருபா சாகவில்லை.

தன் சுயத்துக்கும் அதை அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தும் இடையேயான உறவுச் சிக்கலுடன் போராடிக் கொண்டே பிரான்சிஸ் கிருபா தன் கவிதைகளில் மிக நுட்பமாக இயங்கினார்.

2. திறந்த நிலையில் ஒளி ஊடுருவும் மொழியில் எழுதப்பட்ட நகுலன், விக்கிரமாதித்யன் கவிதைகள் போலல்லாமல் கட்டுக் கோப்பான வடிவ நேர்த்தியுடன், அழுத்தமான விநோத மொழி வெளிப்பாடுகளில் தனக்கென பிரத்தியேகமான ஒரு இடத்தை நிறுவிக்கொண்டவர்தான் பிரான்சிஸ் கிருபா.

3. சுய அனுபவங்களைக் கவிதை அனுபவங்களாக மாற்றுவதற்குப் பிரத்தியேக இலக்கிய மொழி வெளிப்பாட்டை இவர் தேர்ந்தெடுத்தார்.

4. சுயசரிதைத்தனமாக ஒரு காணொளிக் காட்சிபோல் தன் கவிதைகளை எழுதுவதற்கு மாறாக பிரான்சிஸ் கிருபா பொதுவாக சொல்லக் கூசும் அந்தரங்கமான சுய அனுபவங்களைப் பேசி படிமங்களாக மாற்றி கவிதைகளாக்கினார்.

5. மனதின் வலிமிகுந்த சுரங்க அறைகளை இவர் தன் கவிதைகளில் பேசி வெளியுலகத்தின் சூரிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

6. தமிழில் ஆத்மாநாம் தொடாத பல இடங்களைப் பிரான்சிஸ் கிருபா தொட்டு இருக்கிறார்.

கிருபாவைக் கடைசியாக காஞ்சிபுரத்தில் வழிப்போக்கன் நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்ததுதான். அடுத்த சந்திப்புக்குள் அவரை நான் இழப்பேன் எனக் கருதவில்லை. தமிழ் மொழி தனது மனிதநேயம் மிக்க ஒரு கவி மகனை மறக்காமல் நினைவு கூர வேண்டும்.

You might also like