அச்சுறுத்தும் டெங்கு – சில தகவல்களும் எச்சரிக்கையும்!

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே, டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தொடங்கி விடுகிறது.

அதோடு ‘நிபா’ வைரஸூம் பரவி அதற்கும் சிலர் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் பலியாகி இருக்கிறார்கள்.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் நாள்தோறும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுவினால் பரவும் இந்த டெங்கு காய்ச்சல் தமிழகத்தை மட்டுமல்ல… உலகில் சரிபாதி மக்கள் தொகையை அச்சுறுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களைச் சேர்ந்த 125 நாடுகளில் டெங்குவின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாக காணப்படுகிறது.

மக்கள் நெருக்கடி அதிகமுள்ள, சுகாதார வசதிகள் குறைவான பகுதிகளிலேயே டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு கொசுக்களின் உற்பத்திக்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 1970ம் ஆண்டு முதல், பருவநிலை மாற்றங்களின் விளைவாக டெங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியதாக அந்த அமைப்பு கூறுகிறது.

பருவம் தவறிப் பெய்யும் மழை, பனிப் பொழிவு, முரண்பட்ட தட்ப வெப்பநிலை போன்றவையே டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்திருப்பதாக கூறப்படுகிறது.

70-களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் ப்ளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. ப்ளாஸ்டிக் பொருட்களில் டெங்கு கொசு எளிதில் உற்பத்தியாவது பின்னர் கண்டறியப்பட்டது.

அதிக வெயிலுக்குப் பின்னர் லேசான அளவு பெய்யும் மழைதான் டெங்கு கொசுக்களுக்கு கொண்டாட்டமான தட்ப வெப்பத்தை அளிக்கிறது.

தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசுகள் ஒருவகையில் புகை மாசுவை ஏற்படுத்துவதாக கருதப்பட்டாலும், டெங்கு கொசுக்களை துரத்த பெருமளவு இந்த புகை பயன்படுவதாக கூறப்படுகிறது.

மாசுவா, கொசுவா என்பதை நாம்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்…!
சரி… இப்போது டெங்கு காய்ச்சல் எப்படிப் பரவுகிறது.. அதன் அறிகுறி என்ன… என்பவை குறித்து பார்க்கலாம்…

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது கிடையாது.

பகலில் கடிக்கும் கொசுக்களால் மட்டுமே டெங்கு பரவுகிறது. இரவில் இக்கொசுக்கள் கடிப்பதில்லை.

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த காய்ச்சல் ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகப் பரவுவது இல்லை.

காய்ச்சலின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். உடல் சோர்வு, தீவிர தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு தழும்பு, எலும்பு உடைவது போன்று கடுமையான வலி இருக்கும்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இல்லாமல் கூட உங்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

டெங்கு கொசு கடித்து 5 ல் இருந்து 7 நாட்கள் வரை எந்த அறிகுறிகளும் அந்த நபருக்கு இருக்காது. மனித உடலில் பல்கிப் பெருகும், அதன் பிறகே அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சலுக்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்வதைவிட அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதுதான் சரியான அணுகுமுறை.

சில காய்ச்சல்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சரியான மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட கிடைக்கும்.

டெங்கு பாதிப்பைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகிய பரிசோதனைகள் உங்களுக்கு செய்யப்படும்.

உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பதற்றம் அடைய வேண்டாம். மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். வேலைக்குச் செல்லாமல், வீட்டிலே ஓய்வு எடுங்கள்.

உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு கடும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமாக தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகவும்.

சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஏழு நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும். உடல் வலி மற்றும் சோர்வு போன்ற இதன் பாதிப்புகள் இரண்டு வாரங்களில் சரியாகி விடும்.

அலோபதியில் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தே இல்லை என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதன் அடிப்படையிலேயே நிலவேம்பு, பப்பாளி இலைச் சாறு போன்றவற்றை அருந்துமாறு அரசே ஒரு சில நேரங்களில் பரிந்துரைத்தது. எனவே, இயற்கை மூலிகைகளையும் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்தலாம்.

டெங்கு பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். இதனால் வீட்டைச் சுற்றி இருக்கும் குட்டைகளில் தண்ணீர் தேங்குவது, தேங்காய் மூடியில் தேங்கும் தண்ணீர், வீட்டு தண்ணீர் டேங்குகளில் தேங்கும் தண்ணீரில் தான் இந்த வகை கொசுக்கள் முட்டையிட்டு வளரும். நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் பயன்படுத்தினால் கொசுக்கள் ஒழியும்.

வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ என்ற மருந்தைத் தெளிப்பதால் பலன் உண்டாக வாய்ப்புள்ளது.

கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

– மனோலயன்

You might also like