ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம்!

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம் – தலைப்பே ஆச்சர்யமாக இருக்கிறதா?

உண்மைதான். டாலி ஜெயின் உங்கள் வீட்டு மணப்பெண்ணுக்கு புடவை கட்டிவிட வேண்டுமானால் ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.

தீபிகா படுகோன், சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா முதல் நீடா அம்பானி உட்பட இந்திய பிரபலங்கள் அத்தனை பேரும் டாலியை மை டார்லிங் என ஹார்ட்டின் போட்டு அம்பு விடுகிறார்கள்.

325 விதங்களில் புடவை கட்டி உலக சாதனை படைத்திருக்கும் டாலி, 18.5 விநாடிகளில் புடவை கட்டி உலகிலேயே அதிவேகமாக புடவை கட்டுபவர் என்னும் சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆசிய சாதனைப் புத்தகம், இந்திய சாதனைப் புத்தகம் என அசத்துகிறார் டாலி.

“எப்படி சாத்தியப்பட்டது இந்த புடவை கட்டும் புரொஃபஷன்?” – கேட்டதுமே புன்னகை மிளிர பேசத் துவங்கினார் டாலி ஜெயின்.

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பெங்களூருல. பின்னர் கொல்கத்தாவிலே செட்டில் ஆனோம். நான்கு பெண்கள். நான் மூத்தவள். சிஏ, எம்பிஏ, சிஎஸ்னு மத்தவங்க எல்லாருமே நல்லா படிச்சாங்க.

நான் ஒருத்தி தான் ஏழாவதோடு படிப்பை நிறுத்திட்டேன். என்னடா… நம்ம வீட்ல எல்லாரும் நல்லா படிச்சிருக்காங்க… நாம மட்டும் இப்படி இருக்கோமேனு ஒரு கேள்வி என் கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்ந்துச்சு.

அந்தக் கேள்விதான் இன்னைக்கு டாலி ஜெயின் செலிபிரிட்டி டிரேப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வரக் காரணம்.

என்னை இன்னைக்கு ‘டிரேப்பிங் என்சைக்ளோ பீடியா’ன்னு கூப்பிடுறாங்க. பெருமையா இருக்கு…” என்னும் டாலி ஜெயின் இந்தியா முழுக்க புடவை கட்டவே பறந்து கொண்டிருக்கிறார்.

“சின்ன வயசுல இருந்தே நான் வீட்டில் இருந்த பொம்மைகளுக்கு புடவை கட்டி அழகு பார்ப்பேன். அங்கே ஆரம்பிச்சதுதான் இந்த புடவை மோகம். அப்பவே அம்மா கட்டுகிற புடவை எல்லாம் ரசிப்பேன். ஆனாலும் எப்போதும் ஒரே ஸ்டைல்ல கட்டுறாங்களேன்னு தோணும்.

எங்க குடும்ப பாரம்பரியப்படி, திருமணத்துக்குப் பிறகு புடவை மட்டுமே கட்டணும். அப்பதான் ஏன் புடவையையே வேற வேற ஸ்டைல்கள்ல கட்டக் கூடாதுன்னு தோணுச்சு.

அப்படியே மேனிக்குவின் பொம்மைகளுக்கு புடவை கட்டுற எண்ணம் அதிகரிச்சு அதை எல்லாம் வீடியோக்களா எடுத்து சி.டி.ல பதிச்சேன்…” என்னும் டாலிக்கு பெரிய அளவில் நம்பிக்கை வரும் வரை இத்திறமையை வெளியுலகுக்கு அறிவிக்கக் கூடாது என அவர் அப்பா கட்டளையிட்டாராம்.

“ஆரம்பக் கட்டத்துல லோக்கல் பியூட்டீஷியன்ஸ் உதவியோடு ஏரியா மணப்பெண்கள் துவங்கி வெளியூர் மணப்பெண்கள் வரை புடவை கட்டத் தொடங்கினேன்.

ஒரு டிசைனர் என்னதான் மெட்டீரியல்கள்ல புடவைகள் டிசைன் செய்தாலும் அதைக் கட்டுற விதத்தில்தான் மொத்த அழகும் கிடைக்கும்.

இதை பல மணப்பெண்கள் கண்கூடாகப் பார்க்க… என் திறமை அனைவருக்கும் பரவ ஆரம்பிச்சது. புடவை கட்டவே நிறைய வகுப்புகள் கூட எடுக்கத் துவங்கினேன்…” என்னும் டாலிக்கு இதில் சில சவால்கள் இருக்கின்றன.

 “என்னதான் நாம ஸ்டைலிஸ்ட்டாக இருந்தாலும் டிசைனர்கள் தங்களுடைய புடவை அல்லது உடைகள் எப்படி இருந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சு டிசைன் செய்வாங்க. அந்த டிசைனருடைய திறமைக்கும் நாம நியாயம் செய்யணும்.

அடுத்து மணப்பெண் அல்லது மாடல்… அதாவது யார் அந்த உடையை கட்டிக் கொள்கிறார்களோ அவர்கள் தான் மிக முக்கியம்.

நாம் செய்கிற ஸ்டைலிங் ஒரு நாள் முழுக்க அவர்கள் நடனம் ஆடினாலும் உறுத்தவோ, சங்கடத்தில் ஆழ்த்தவோ கூடாது.

இதைத்தான் நான் தீபிகா படுகோன் திருமணத்தில் கூட கடைப்பிடிச்சேன். அவங்க எந்த தயக்கமும் இல்லாம ரன்வீர் கூட நடனமே ஆடினாங்க. சப்யா சச்சியுடைய டிசைனிங்கும் எந்தவிதத்திலும் பாதிக்கலை.

இப்பப் புடவை மட்டும் இல்ல, லெஹெங்கா, துப்பட்டா, தாவணி என பல வகைகள்ல டிரேப்பிங் செய்யக் கூப்பிடுறாங்க…” என்னும் டாலிக்கு உட்கார முடியாத அளவுக்கு புக்கிங்குகள் குவிகின்றன.

”உங்க போர்டை கப் திறங்க. எப்பவும் கட்டுற ஒரே புடவைதானே இருக்குன்னு நினைக்காம, அந்தப் புடவைய எப்படி எல்லாம் கட்டினா மாஸ் காட்டலாம்னு யோசிங்க.

ஒரே புடவையில் டிசைன்கள் மாத்தும் போது ரிப்பீட் மோட் கூட தெரியாது.

இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடை புடவை தான். அதைக் கொண்டாட நினைச்சேன், இன்னைக்கு அதுவே புரொஃபஷன் ஆகிடுச்சு.

என் எங்க வீட்டிலேயே அதிகம் படிக்காத பொண்ணு நான் தான். ஆனா, இன்னைக்கு நான்தான் அதிகம் சம்பாதிக்கிறேன்!” மகிழ்ச்சியுடன் சொல்கிறார் டாலி.

– ஷாலினி நியூட்டன்

நன்றி: தினகரன் தீபாவளி மலர். 2021

You might also like