– கலைஞரிடம் அண்ணா சொன்னவை
அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’.
தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா.
அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர் கலைஞர் கருணாநிதி. நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சி இப்படி முடிகிறது.
துரைராஜ் (அண்ணா): சாம்பசிவம்! நீயும் தமிழன்! நானும் தமிழன்! நமக்குள் எந்த விதமாக ஒரு நீங்காத உறவும் நட்பும் ஏற்பட்டதோ, அதே போல் தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் வாழும் காலம் வரும் வரையில், நமது புத்துலகக் கழகத்தின் வேலை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
தமிழன் தமிழனாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியை ஏற்படுத்து.
நான் ஒருவன் போனால் என்ன? எனக்குப் பின்னால் என்னைவிட மேலாக உழைக்க எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
எனக்கு விடை கொடு.
நான் விட்டுச் செல்லும் லட்சியத்தை நிறைவேற்று.
சாம்பசிவம் (கலைஞர்): இப்போதே உறுதி எடுத்துக் கொள்கிறேன் துரைராஜ். மக்களை வஞ்சகர்களிடம் சிக்க வைத்து, அவர் தம் மதியை மாய்த்து, சமூகத்தைச் சீரழிக்கும் சதியை ஒழித்திடப் பணியாற்றுவேன்.
நீ தொடங்கி வைத்த வேலையைத் தொடர்ந்து செய்திடுவேன். இது உறுதி”
இந்த வசனங்களுடன் நிறைவடையும் ‘சந்திரோதயம்’ நாடகத்தைப் பற்றிப் பின்னாளில் கலைஞர் இப்படி எழுதியிருக்கிறார்.
“சந்திரோதயம் நாடக உரையாடல் இது. அண்ணா எழுதியது.
துரைராஜ் பாத்திரத்தில் அவரும், சாம்பசிவம் பாத்திரத்தில் நானும் பேசியது. கடந்த கால நினைவுகள் கண்களைக் குளமாக்குகின்றன.!
‘சந்திரோதயம்’ அண்ணனின் கைவண்ணம்!
‘சூரியோதயம்’ தம்பிகளின் கைவண்ணமாக நிலைக்கட்டும்”.