சீனாவில் பிரபலமாகும் ஒரு நாள் திருமணம்!

திருமணம் என்றாலே பலவிதமான சடங்குகள் இருக்கும். ஆனால் சீனாவில் திருமணத்தை ஒரு சடங்காகவே செய்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கிறது.

சீனாவில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் பரவலாக அதிகரித்து வருகின்றன.

இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சேர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.

அங்குள்ள வழக்கத்தின் படி திருமணம் செய்து கொண்டு மனைவி, மக்கள் என குடும்பதை சுமக்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது.

எனவே அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்திற்க்கு போய் சேர முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏற்படும் பாவம் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.

சொர்க்கத்தில் மூதாதையருடன் இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்.

முன்பு இங்கு உயிருடன் இருக்கும் நபர்கள் உயிரிழந்தோரைக் கூட இந்த சம்பிரதாயத்திற்காகத் திருமணம் செய்து கொள்வார்களாம். அதற்குப் பதிலாக இப்படி ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த வழக்கத்தின்படி இருவருக்கும் திருமணம் நடக்கும். பிறகு தனக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்குக் தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்ப கல்லறைக்குச் செல்வார்கள்.

இதற்காக வெளியூரில் இருந்து பெண்கள் வரவழைக்கப்பட்டு ஒரு நாள் திருமணங்கள் நடைபெறுகின்றன.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களே பணத்திற்காக இதுபோல ஒரு நாள் திருமணங்களுக்குச் சம்மதம் தெரிவிக்கிறார்களாம்.

திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இதுபோன்ற ஒரு நாள் திருமணங்களைச் செய்து கொள்கிறார்களாம். இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானது இல்லை எனவும் எல்லாமே வெறும் சடங்கிற்காகச் செய்யப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.

திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ தான். குறிப்பாக கடந்த 5, 6 ஆண்டுகளாக இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் சீனாவில் அதிகரித்துள்ளதாம்.

இப்படி ஒரு நாள் திருமணத்திற்காகவே அங்குத் தனியாக கம்பெனி இருக்கிறதாம்.

இதற்காகவே அங்கு பல தொழில்முறை மணமகள்கள் உள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 3,600 யுவான்.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 41ஆயிரத்து 400 ரூபாய். இதுபோக தரகருக்கு தனியாக கமிஷன் 1,000 யுவான் கட்டணம் செலுத்தவேண்டுமாம்.

மேலும், இறந்தவர்களை புதைக்கும் போது சொர்க்கத்தில் வாழ அவங்களுக்கு தேவைப்படும் என பணத்தையும் பொருட்களையும் கூட சேர்த்தே புதைக்கும் விநோத பழக்கங்களையும் சீனர்கள் வைத்துள்ளார்கள்.

இந்த நம்பிக்கையின் காரணமாகத் தான் அங்கு ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளன.

– சங்கீதா

You might also like