சங் பரிவாரின் சதி வரலாற்றைச் சொல்லும் படைப்பு!

நூல் விமர்சனம் 

● இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி விடுதலை இராசேந்திரன் எழுதி, 1983ல் வெளியான நூல் – ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்!

பின்னர், ‘ஒற்றுமை’ மாதமிருமுறை இதழில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதி, அதன் பின் 2004ம் ஆண்டு வெளியான நூல் தான் இந்த படைப்பு!

● “ஆர்எஸ்எஸ் என்பது அடிப்படையில் ஒரு ரகசிய அமைப்பாகும். அதற்கென்று ஒரு புறத்தோற்றம் உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக சட்டங்களோ, பதிவேடுகளோ, கணக்குகளோ கிடையாது.

அமைதியான வழிமுறைகள் மீது ஆர்எஸ்எஸ்க்கு நம்பிக்கை கிடையாது!”… என்று அன்றே எச்சரிக்கை மணி அடித்தவர், முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு!

● இதன் அடிப்படையில் சங் பரிவார் அமைப்புகள் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் அவர்களது சதி வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது!

● சங் பரிவாரங்கள் – இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவசேனா!

ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியினரே சங் பரிவாரின் முன்னோடி தலைவர்கள் – திலகர், மதன் மோகன் மாளவியா, லாலா லஜபதிராய், அரவிந்தர், அன்னிபெசன்ட்!

● 1934 வரை காங்கிரசில் இருந்தவர்கள் இந்து மகா சபை மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாகவும் இருந்தார்கள் என்ற அதிர்ச்சி தகவல் நூலில் உண்டு!

● இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் இந்துக்களாக மட்டும் கணக்கில் கொண்டு, மற்ற மதத்தினரை அன்னியராக கருதும் பாசிசப் போக்கு தான் சங் பரிவாரங்களின் அரசியல் கொள்கை!

அதற்காக நாட்டில் கலவரங்களும், வன்முறைகளும், போராட்டங்களும், அடிதடிகளும் நடத்தி, இறுதியில் ஆட்சியைப் பிடிப்பது தான் அவர்களின் அரசியல் பாதை!

● சங் பரிவாரங்களின் மூளையாகவும், தலைவர்களாகவும் விளங்கி வந்தவர்கள் – மராட்டியத்தின் சித்பவன் பார்ப்பனர்களே!

● இவர்களின் ஒரே நோக்கம் – அரசியல் அதிகாரம் பிராமணர்களிடம் வர வேண்டும்;

நாட்டை வர்ணாசிரம அடிப்படையில் சாதி ஏற்றத் தாழ்வுடன் கட்டிக் காக்க வேண்டும்; முஸ்லீம்களும் மற்ற மதத்தினரும் இவர்களது கட்டளைப்படி வாழ வேண்டும்!

● இந்த கொள்கைகளின் ஆரம்ப காலத்தின் மூளையாக இருந்தவர் – காங்கிரஸ் தலைவராக இருந்த திலகர்! அதன் முக்கிய சான்று தான் ஒவ்வொரு ஆண்டும் நாடெங்கும் கொண்டாடப் படும் விநாயகர் ஊர்வலம் !

● சித்பவன் பார்ப்பனர்கள் காந்தியை கடுமையாக எதிர்த்ததற்கு முதல் காரணம் – சித்பவன் பார்ப்பனரான திலகரிடமிருந்து காங்கிரசின் அரசியல் தலைமை, குஜராத் பனியாவான காந்தியிடம் போய் விட்டதால், சித்பவன் பார்ப்பனர்களால் ஜீரணிக்க முடியவில்லை ! ஆகவே காந்தியை ஒழிக்க நினைத்தார்கள் !

● காந்தியை சுட்டுக் கொன்ற சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் இந்து மகா சபை மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள். அந்த எட்டு பேரும் சித்பவன் பார்ப்பனர்கள் !

● அந்த ஆட்களைத் தான் பார்த்ததில்லை. பெயர்களையாவது தெரிந்து வைத்துக் கொள்வோமே :
நாதுராம் கோட்சே | நாராயண் ஆப்தே | வீர சாவர்க்கர் | விஷ்ணு காக்கரே | சங்கர் கிஸ்தயா | கோபால் கோட்சே | மதன்லால் பாபா | திகம்பர் பாட்கே |

● பார்ப்பனர்களையும் பசுக்களையும் கொல்லக் கூடாது என்கிறது மனு தர்மம் !
பார்ப்பனர்களே கொலையாளிகளாக கூண்டில் நின்றது என்ன தர்மம் ?

● சங் பரிவாரங்கள் – இந்து மகா சபை; ஆர்எஸ்எஸ்; விஹெச்பி; சிவ சேனா; பஜ்ரங் தள் பற்றி நூலிலிருந்து சில முக்கிய தகவல்கள் :

● இந்து மகா சபை (HMS) :
1915ல் தோற்றுவிக்கப் பட்டது. இதன் தலைவராக இருந்தவர், பிற்காலத்தில் ஆர்எஸ்எஸ்ஸை துவக்கிய ஐவர்களில் ஒருவரான – டாக்டர் பி. எஸ். மூஞ்சே. முஸ்லீம்களை எதிர்க்க இந்துக்களை திரட்டுவதற்காக ஏற்படுத்தப் பட்டது. இந்து மகா சபை மூலம் ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்ற முழக்கம் கிளம்பியது!

● ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (RSS) :
1925ல் இந்து தீவிர வாதத்தை பரப்புவதற்கு ஐந்து மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் துவக்கப்பட்டது :
டாக்டர் ஹெட்கேவர் | டாக்டர் பி. எஸ். மூஞ்சே | டாக்டர் எல். பி. பாரஞ்சிபே | டாக்டர் பி. பி. தங்கர் | பாபுராவ் சாவர்க்கர் |
ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து கிளைகளாக உருவானது தான் மற்ற சங் பரிவார் இயக்கங்கள் !

● விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) :
1964ல் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரால் உருவாக்கப்பட்டது ! சிறுபான்மை மக்களுக்கு எதிராக கலவரத்தை உண்டாக்க; பெரிய அளவில் போராட்டங்கள், வன்முறைகள் நடத்தி இந்துத்துவா கொள்கைகளை செயலாற்ற உருவானது !

இதன் முதலாவது தலைவர் சித்பவன் பார்ப்பனர் சிவராம் சுங்கர் ஆப்தே ! 1966ல் டெல்லியில் காமராசரை அவரது வீட்டில் தீ வைத்து கொளுத்த முயன்றவர்கள் ! 1992ல் பாபர் மசூதி இடிப்பிலும் பெரும் அளவில் பங்கு பெற்றவர்கள் !

● சிவ சேனா (SS) :
1966ல் பம்பாயில் பால் தாக்கரேயால் தோற்றுவிக்கப் பட்டது ! ‘ இந்துக்கள் தற்கொலைப் படையை அமைக்க வேண்டும் ‘ என பகிரங்கமாக அறிவித்தவர் தாக்கரே!

இந்து, பார்ப்பனிய சாதி உணர்வுகளோடு மாநில உணர்வையும் இணைத்து கொண்டு ஒரு பாசிச சக்தியாக வளர்ந்த இயக்கம்! 70 களில் பம்பாயில் தென்னிந்தியர்களுக்கு எதிராக கலவரம்; 1992 – 93 ல் பம்பாயில் நடைபெற்ற மதக் கலவரங்களின் காரண கர்த்தாவாக இருந்த இயக்கம் !

● பஜ்ரங் தள் (BD) :
1984ல் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை நடைமுறைப் படுத்த, வினய் கட்டியாரால் தோற்றுவிக்கப் பட்டது!

கலவரங்களாலேயே தங்களது கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட தீவிரவாத இயக்கம்! பாபர் மசூதி இடிப்பில் பஜ்ரங் தள்ளின் தொண்டர்கள் குண்டர்களாக மாறியதை வரலாறு அறிந்து வைத்துள்ளது!

● இவ்வாறு சங் பரிவாரத்தின் பல்வேறு அமைப்புகள் பற்றிய நிறைய தகவல்களை நூலாசிரியர் விடுதலை இராசேந்திரன் தந்துள்ளார்.

அவரது இந்த நூலை இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டும்.. அவர்கள் சங் பரிவாரத்தின் வலையில் விழாமல் தங்களை காத்துக் கொள்ள உதவும் நூல் இது !

அரசியல் செய்ய சதியும்;
ஆதிக்கம் செய்ய சாதியும்;
இந்து மதத்தினருக்கு மனுநீதியும்;
மற்ற மதத்தினருக்கு மன பீதியும்;
இவைகளை நம்பி செயல்படும்
இயக்கங்கள் தான் சங் பரிவாரங்கள் ! அவர்களின் சதி வரலாற்றை சொல்லும் அருமையான படைப்பு! 

*************

சங் பரிவாரின் சதி வரலாறு!
ஆசிரியர் – விடுதலை இராசேந்திரன்.
கருஞ்சட்டைப் பதிப்பகம்.
முதல் பதிப்பு – 2004
பக்கங்கள் – 250
விலை ரூ. 250/-

– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

You might also like