வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!

‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு ஏற்ற பாத்திரம் எத்தனை கனமானது என்பதை முன்னரே சொன்னது, அதில் அவர் பாடியிருந்த ‘மலையில தான் தீப்பிடிக்குது ராசா’ பாடல். அந்த படத்தைப் பார்க்கவரும் ரசிகர்கள் எவருக்கும் அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வராது.

அந்த அளவுக்கு, வலிகளையும் வேதனைகளையும் எதிர்கொண்ட ஒரு மனிதனின் சித்திரத்தைத் தன் குரலால் உருவப்படுத்தியிருந்தார் வடிவேலு.

அதன்பிறகு வெளியான அப்படத்தின் பாடல்கள் வெவ்வேறுவிதமாக அமைந்தன; ஆனால், படம் பார்த்த அனைவரையும் வடிவேலுவின் குரல் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. அந்த அளவுக்கு அப்படத்தின் ஆன்மாவாக அது அமைந்திருந்தது.

வடிவேலு அந்த பாடலைப் பாடியதைக் கேட்ட எவருக்கும் ஆச்சர்யம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால், அத்தகைய தொனியை அவரது குரல் வெளிப்படுத்தியதில்லை.

அதேநேரத்தில், அவரது பாடல்கள் ஒரேமாதிரியான உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமையவில்லை.

நகைச்சுவையின் இன்னொரு வெளிப்பாடு!

‘எல்லாமே என் ராசாதான்’ படத்தில் இடம்பெற்ற ‘எட்டணா இருந்தா’ பாடல் தான், வடிவேலுக்குப் பாடத் தெரியும் என்பதை ரசிகர்களுக்கு முதலில் சொன்னது.

அது ரசிகர்களைக் கவரும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல என்பதை உணர்த்த, தமிழ்நாட்டு கிராமப்புற இசையையும் மேற்கத்திய தாள லயத்தையும் அதில் அபாரமாக ஒருங்கிணைத்திருப்பார் இளையராஜா.

அந்த தொடக்கம், தொடர்ந்து பல படங்களில் அவருக்குத் தனியாகப் பாடல்களை அமைக்கத் தூண்டுகோலாக இருந்தது.

அவற்றில் பல பாடல்கள், வடிவேலு ஏற்ற பாத்திரத்தைக் கொண்டு ரசிகர்களை மேலும் சிரிக்க வைப்பவையாக இருந்தன அல்லது நாயகனின் சோகத்தைத் தணிப்பவையாக வடிவமைப்பட்டிருந்தன.

அந்த வகையில், நகைச்சுவையின் இன்னொரு வெளிப்பாடாக வடிவேலுவின் குரல் பயன்படுத்தப்பட்டது.

வடிவேலு தனித்துப் பாடியதற்கு ஈடாக, ‘கும்பலோடு கோரஸ்’ ரேஞ்சில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இயக்குனர் ஹரி தனது படங்களில் அவருக்கான முக்கியத்துவத்தை வெளிக்காட்ட, இப்படிப்பட்ட பாடல்களைச் சேர்த்திருக்கிறார். ‘ப்ரீயா விடு ப்ரீயா விடு’, ‘ஆயிரம் ஜன்னல் வீடு’, ‘தாயாரம்மா தாயாரு’, ‘காதல் பண்ணா’ பாடல்கள் அதற்கான உதாரணங்கள்.

அதேநேரத்தில், நட்சத்திர நாயகர்களோடு சேர்ந்து அல்லது தனியாவர்த்தனம் செய்யும் வகையில் சில பாடல்களை அவர் பாடியிருக்கிறார். அதில் அவரது நகைச்சுவைக்கும் நடனத்திற்கும் பிரதான இடம் தரப்பட்டிருக்கும்.

இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவையைப் பயன்படுத்தும் மீம்களில், ‘வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே’ பாடலுக்கும் ஒரு இடம் உண்டு. தேவா இசையில் ‘காலம் மாறிப் போச்சு’ படத்தில் இதனைப் பாடியிருக்கிறார் வடிவேலு.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘ஏய்..’ படத்தில் ‘ஓரொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் அந்த வரிசையில் இடம்பெறும். இது, முழுக்கவே சரத்குமார் – வடிவேலு நகைச்சுவைக்காகவே உருவாக்கப்பட்டது.

அதேநேரத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் சரத்குமார், அனுராதா ஸ்ரீராம், பரவை முனியம்மா ஆகியோரும் வடிவேலு உடன் பாடியிருந்தனர்.

பரத்வாஜ் இசையில் ‘குண்டக்க மண்டக்க’ இடம்பெற்ற ‘வந்துட்டான்யா வந்துட்டான்யா’ பாடல், முழுக்கவே பார்த்திபன் – வடிவேலு நகைச்சுவையின் உச்சமாகக் கருதும் வகையில் உருவாக்கப்பட்டது.

படத்தில் அவர் தனது ‘ட்ரேட்மார்க்’ டான்ஸையும் வெளிப்படுத்தியிருப்பார்.

‘நேசம் புதுசு’ படத்தில் இடம்பெற்ற ‘ஊத்திக்கடா மச்சான் ஜோரா’ பாடல், அப்படியே மதுபானக்கடை கொண்டாட்டங்களை மையப்படுத்தியது. ‘பகவதி’யில் இடம்பெற்ற ‘விக்கலு விக்கலு’ பாடலும் கூட, குத்துப்பாட்டு வகையறாவில்தான் சேரும்.

திரைக்கதையில் உதவி!

வடிவேலுவுக்குத் தரப்பட்ட பாடல்களில் சில, அந்தக் கதையில் உள்ள கதாபாத்திரங்களோடும் காட்சிகளோடும் சம்பந்தப்பட்டதாக அமைந்திருக்கின்றன.

திரைக்கதையில் அப்பாடல்கள் இடம்பெற்ற சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதையும் நம்மால் உணர முடியும். அந்த வகையில், கதையோட்டத்திற்கு உதவும் விதமாகவே அப்பாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, ‘மாயன்’ படத்தில் இடம்பெற்ற ‘மதனா மதிவதனா’ பாடல், குதூகலம் ஊட்டுவதாகத் தோற்றம் தரும்.

ஆனால், முடித் திருத்தம் செய்யும் ஒரு கலைஞர் சிலரிடம் தனது உபகரணப் பெட்டியைப் பறி கொடுத்துவிட்டு, ‘திருப்பித் தாருங்கள்’ என்று அவர்களிடம் கெஞ்சுவதாக இப்பாடல் நீளும். ஒரு குத்து பாடலுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் இதில் நிறைந்திருக்கும்.

அதே நேரத்தில், அப்பாத்திரத்தின் குணாதிசயங்கள் வரிகளாக விரியும். அதற்குத் தனது குரலால் உயிர் கொடுத்திருப்பார் வடிவேலு.

தேவாவின் இசையில் வெளியான இப்பாடல், கால வெள்ளத்தில் பலரது நினைவில் தங்காமல் போய்விட்டது சோகம் தான்.

’தாய்க்குலமே தாய்க்குலமே’ படத்தில் இடம்பெற்ற ‘பாலு பாலு நேபாலு’ பாடல் முழுக்கவே வடிவேலுவின் ரசிகர்களுக்காகவே உருவானது.

நேபாளத்தில் நண்பனை இழந்துவிட்டு, மொழி தெரியாமல் தனியாகத் தவிப்பதாக அப்பாடல் அமைக்கப்பட்டிருக்கும். திரையில் அவர் நடிப்பையும் நடனத் திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக, இப்பாடலை உருவாக்கியிருப்பார் தேவா.

ரஜினி ரசிகர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக ‘லக்கு லக்கு’ பாடலைப் பாடியிருக்கிறார் வடிவேலு.

தேவா இசையில் ‘தடயம்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலில், தனது திரை வாழ்க்கை பற்றிய வரிகளையும் பாடியிருக்கிறார். அதேநேரத்தில், தமிழ் திரையுலகின் முந்தைய தலைமுறை நகைச்சுவை நடிகர்களைப் போற்றுவதாகவும் இப்பாடல் நீளும்.

‘மகளிர்க்காக’ படத்தில் வர்ஷன் என்பவரது இசையில் ‘தெக்கத்தி மாப்பிள்ளை தில்லான ஆம்பளை’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் வடிவேலு.

இதில், அவரது ஜோடியாகத் திரையில் தோன்றியதுடன் அப்பாடலையும் பாடியிருக்கிறார் கோவை சரளா.

இதில் ஒரு பின்னணி பாடகருக்கு உண்டான லாவகத்துடன் பாடலைத் தன் கையில் எடுத்திருப்பார் வடிவேலு.

பக்திப் படங்களில் நகைச்சுவையான நடிப்போடு குணசித்திர பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார் வடிவேலு. அவற்றில், அவரது பாத்திரத்தின் இயல்பை உணர்த்தச் சில பாடல்கள் ஆக்கப்பட்டுள்ளன.

ராம.நாராயணனின் ‘நாகேஸ்வரி’ படத்தில் ‘பூம் பூம் மாடு பார்’ என்ற பாடலை அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து பாடியிருக்கிறார் வடிவேலு.

இதற்கு இசையமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். இப்பாடலின் தொடக்கமே, அது எத்தகைய காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பதை முன்னரே உணர்த்திவிடும்.

‘ராஜகாளியம்மன்’ படத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ‘சந்தன மல்லிகையில் தூளி கட்டிப் போட்டேன்’ என்றொரு பக்திப்பாடலைப் பாடியிருக்கிறார் வடிவேலு. இதிலும் ‘தாலேலல்லேலோ’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பார்.

தெய்வத்தை ஆராதிக்கும் பக்தனின் குரலாக அப்பாடல் அமைந்திருப்பதை ஒவ்வொரு வரிகளும் மெய்ப்பிக்கும்; ஒலிப்பதைச் சொல்லும். அந்த நெகிழ்ச்சி, வடிவேலுவின் குரலிலும் தெரியும்.

நாயக துதி!

வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பு எப்படிப்பட்டது என்பதை விளக்க, தொண்ணூறுகளுக்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர் அடைந்த உயரத்தைப் பற்றிப் பேசலாம்.

அப்படங்களில், அவரது நகைச்சுவை நடிப்பில் இருக்கும் வித்தியாசங்களைப் பட்டியலிடலாம். அவ்வாறே, வடிவேலுவின் குரலில் வெளியான பாடல்களையும் வரிசைப்படுத்தலாம்.

அந்த வகையில் தான் நாயகனாக நடித்த ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘எலி’, ‘தெனாலிராமன்’ படங்களிலும் வடிவேலு சில பாடல்களைப் பாடியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ஸிலும் மூன்று பாடல்களைத் தந்திருக்கிறார். அவை எல்லாமே, அவரது நாயக அவதாரம் குறித்தான விளக்கங்கள் என்று சொல்லலாம்.

இதுநாள்வரை பயம், ஆத்திரம், மகிழ்ச்சி, அருவெருப்பு என்று பலவிதமான உணர்வுகளை நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார் வடிவேலு. அவரது குரலில் வெளியான பாடல்களும் அதை வழிமொழிந்திருக்கின்றன.

அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட காரணத்தால், ‘மாமன்னன்’ படத்தில் அவரது நடிப்பும் அவர் பாடிய பாடலும் நம் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது.

இனிவரும் காலத்தில், அவர் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணசித்திர நடிப்பிலும் தான் ஒரு ‘மாமன்னன்’ என்பதை நிரூபிக்க வேண்டும்.

போலவே, பாடும் திறனிலும் வெவ்வேறு பீடங்களை எட்ட முயற்சிக்க வேண்டும். காரணம், அவரது குரலில் எத்தகைய உணர்வுகள் வெளிப்பட்டாலும், அதனைக் கேட்பவர் மனதில் உற்சாகமும் உத்வேகமும் குதூகலமும் கூடுகிறது; கொண்டாட்ட மனோபாவத்தில் நம்மைத் தள்ளுகிறது. அதற்காகவாவது, இனி வடிவேலு தொடர்ந்து பாட வேண்டும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like