ரூ. 1 லட்சம் இலக்கியப் பரிசு பெறும் மாத்தளை வடிவேலன் நூல்!

மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ’ என்ற சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை மிக யதார்த்தமாக சித்தரிக்கும் இலக்கியத் தொகுப்பாக இந்த சிறுகதைத் தொகுதி தமிழ் அறிஞர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த அங்கீகாரத்திற்கு அடையாளமாக ’தாய்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரும், வழக்கறிஞருமான முனைவர் குமார் ராஜேந்திரன்,

விசேட இலக்கிய விருதாக மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ’ சிறுகதைத் தொகுப்புக்கு இலங்கை நாணயத்தில் ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

தமிழகத்தின் மிகச்சிறந்த நடுவர்கள் குழுவால், மலையக மக்களின் வாழ்க்கையை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த சிறுகதை நூலாக இலங்கையில் வெளிவந்த “வல்லமை தாராயோ” என்ற சிறுகதைத் தொகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக

புகழ் பூத்த ஊடகவியலாளரும், துக்ளக், குமுதம், ஜெயா, விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றியவரும் தற்போது “தாய்” சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியருமான மணா தெரிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து பேராசான் மு.நித்தியானந்தன் இந்த தொகுதிக்கு வழங்கிய முன்னுரை, மாத்தளை வடிவேலனின் எழுத்தாற்றலை தமிழக வாசகர்களுக்கு கொண்டு செல்வதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

பதிப்பாளரும் எழுத்தாளருமான எச்.எச்.விக்கிரம சிங்க (மாத்தளை செல்வா) வின் பெரும் முயற்சியில் தொகுக்கப்பட்டு, கலை ஒளி முத்தையா பிள்ளை ஞாபகார்த்தக்குழு வெளியிட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை மாதாந்திர இலக்கிய நிகழ்வில் பேராசிரியர் சி.சந்திரசேகரன் தலைமையில் மேற்படி சிறுகதைத் தொகுதி அறிமுகம் செய்தது, மாத்தளை வடிவேலனுக்கு மற்றுமொரு கௌரவம் ஆகும்.

சாரல் நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’, டாக்டர் குமார் ராஜேந்திரன் அனுசரணை வழங்கிய சி.வி.வேலுப் பிள்ளையின் ‘மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்’, மு.நித்தியானந்தனின் ‘மலையகச் சுடர்மணிகள்’ ‘மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல்’,

குமார் ராஜேந்திரன்

மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ’ ஆகிய நூல்கள் வரிசையில் இலங்கையில் புகழ் பூத்த எழுத்தாளர் சாலிய குணவர்த்தன சிங்கள மொழியில் மொழிபெயர்த்த 14 சிறுகதைகளை, மத்தளை மலரன்பன் தமிழில் மொழி பெயர்த்த “அமைச்சர்களின் முகம்” என்ற பிறமொழி சிறுகதைகளும்,

“தெளிவத்தை ஜோசப் கதைகள்” 59 கதைகள், 557 பக்கங்களில் விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ‘மலையகம் 200’ முழு நாள் ஆய்வரங்கில் மாத்தளை வடிவேலனின் ஒரு இலட்சம் ரூபாய் இலக்கிய விருதினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளார்.

You might also like