காவல்காரன் வெளியான நாள் இன்று – 07.09.1967
பெரும்பாலான ஹாலிவுட் ஸ்பை ஆக்ஷன் படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன.
அரசு உளவாளிகள், எதிரிகளின் சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து அழிப்பது அல்லது ஏற்கெனவே செய்த குற்றங்களுக்காக அவர்களைத் தேடி கண்டுபிடிப்பதாக பெரும்பாலான திரைப்படங்கள் இருக்கும்.
1940-களில் வெளியான நாஜி ஸ்பை திரைப்படங்கள், 60-களுக்குப் பின் வந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருந்து இன்றைய ஹைடெக் ஸ்பை படங்கள் வரை அப்படித்தான்.
இதுபோன்ற ஸ்பை ஆக்ஷன் படங்களுக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் வந்த அப்படியொரு ஸ்பை ஆக்ஷன் படம் ‘காவல்காரன்’.
1966-ம் ஆண்டு பிற்பகுதியில் தொடங்கி, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான், தமிழகத்தை உலுக்கிய அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது, 1967 ஜனவரி 12ம் தேதி எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் இந்தப் படத்தின் 95 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் எம்.ஜி.ஆர் பேசும் காட்சிகளில் அவர் வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.
முதலில் வேறொருவரை, அவரைப் போலவே பேச வைக்கலாம் என்ற யோசனையை நிராகரித்த எம்.ஜி.ஆர், ‘என் குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்’ என்று ஆணித்தரமாக நம்பினார்.
அதுதான் நடந்தது. தியேட்டரில் அவர் குரலைக் கேட்டதும் ரசிகர்கள் கண்ணீர் விட்ட காட்சிகள் அப்போது செய்திகளாகி இருந்தன.
ஆனால், அந்தக் குரலை அவர்கள் நிராகரிக்கவில்லை. தாய்க்குலங்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சியாகச் சென்னையில் திரையிடப்பட்ட நிகழ்வும் இந்தப் படத்துக்கு உண்டு.
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை ப.நீலகண்டன் இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆரின் 95 வது படமான இதற்கு வீரப்பன் கதை எழுதியிருந்தார்.
வித்வான் வே.லட்சுமணன் வசனம். எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ், அசோகன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், வாலியின் வரிகளில், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’, ‘மெல்லப்போ மெல்லப்போ’, ‘காது கொடுத்துக் கேட்டேன்’, ஆலங்குடி சோமு வரிகளில் ‘அடங்கொப்புறானே சத்தியமா நான்…’, ‘கட்டழகு தங்க மகள்’ உட்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
கோடீஸ்வரரான மருதாச்சலத்திடம் (எம்.என்.நம்பியார்) கார் டிரைவராக வேலைக்குச் சேர்கிறார் மணி (எம்.ஜி.ஆர்). அவர் மகள் சுசீலாவும் (ஜெயலலிதா) மணியும் காதலிக்கிறார்கள். மருதாச்சலத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மருதாச்சலத்துக்குப் பின் உள்ள மர்மங்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் அவரை, மணி எப்படி நிறுத்துகிறார் என்பது கதை. கடைசியில்தான் அவர் ரகசிய போலீஸ் என்பது தெரியும்.
இதில் சிவகுமார் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்திருப்பார். இந்தப் படத்துக்கு முதலில் ‘மனைவி’ என்ற பெயரை வைத்திருந்தனர். பிறகுதான் ‘காவல்காரன்’ என மாற்றினர். பல்வேறு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய இந்தப் படம், 1967ம் ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் – 7)வெளியானது.
– நன்றி: இந்து தமிழ்திசை