கவுரவத்திற்காக என் உயிரைப் பணயம் வைத்த மக்கள்!

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவலைகள்.

அது 1929-ம் ஆண்டு. பம்பாய் மாகாண அரசு தீண்டத்தகாதோரின் குறைகள் குறித்து விசாரிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்தது.

நானும் அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அக்குழுவினர் மாகாணம் முழுக்கப் பயணம் செய்து தரப்பட்டிருக்கும் அநீதி, அடக்குமுறை, கொடுங்கோன்மை குறித்த புகார்களை விசாரிக்க வேண்டும்.

கண்டேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்களை ஆய்வு செய்யும் பொறுப்பு என்னிடமும், குழுவின் மற்றொரு உறுப்பினரிடமும் தரப்பட்டிருந்தது.

அப்பணியை முடித்ததும் நாங்கள் இருவரும் விடைபெற்றோம். அவர் ஏதோவொரு இந்துச் சாமியாரைக் காணப் போய்விட்டார். நான் பம்பாய் செல்லும் தொடர்வண்டியில் ஏறிக்கொண்டேன்.

தொடர்வண்டி சாலிஸ்கான் சேர்ந்ததும், தூலியா தடத்தில் உள்ள கிராமத்திற்குச் செல்வதற்காக இறங்கிக் கொண்டேன்.

அந்தக் கிராமத்தின் சாதி இந்துக்கள் தீண்டத்தகாதோர் மீது சமூகப் புறக்கணிப்பைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதை விசாரிக்கவே அங்கே சென்றேன்.

சாலிஸ்கானைச் சேர்ந்த தீண்டத்தகாதோர் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து என்னை இரவு அவர்களோடு தங்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆரம்பத்தில், சமூகப் புறக்கணிப்பை விசாரித்துவிட்டு நேரடியாக பம்பாய்க்குச் செல்வதே என்னுடைய திட்டமாக இருந்தது.

அவர்களோடு நான் தங்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்ததால், அன்றிரவை அவர்களோடு கழிக்க ஒப்புக்கொண்டேன்.

தூலியாவில் இருந்து கிராமத்திற்குச் செல்லும் தொடர்வண்டியில் ஏறி அவ்விடத்தை அடைந்தேன்.

அந்தக் கிராமத்தில் நிலவிவரும் நிலையைப் பார்த்து அறிந்து கொண்ட பின்பு அடுத்தத் தொடர்வண்டியில் சாலிஸ்கான் திரும்பினேன்.

எனக்காக சாலிஸ்கானின் தீண்டத்தகாதோர் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்பதைக் கண்டேன். எனக்கு மாலை அணிவித்தார்கள். அவர்கள் தங்கியிருந்த மகர்வாடாவானது தொடர்வண்டி நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

அங்கே சென்றடைய ஆற்றின் மீதிருந்த மதகுப் பாலத்தைக் கடக்க வேண்டும். தொடர்வண்டி நிலையத்தில் வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப் பல குதிரை வண்டிகள் நின்றன.

அவர்களின் மகர்வாடாவும் பொடிநடையாக நடந்து சென்றுவிடும் தொலைவிலேயே இருந்தது.

உடனடியாக மகர்வாடாவுக்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். அவ்விடத்தை நோக்கி எந்த அசைவும் இல்லை. ஏன் இப்படி என்னைக் காக்க வைக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேலான பின்பு ஒரு டோங்கா (குதிரை வண்டி) இருப்புப் பாதைக்கு அருகே இழுத்து வரப்பட்டதும், நான் ஏறிக்கொண்டேன். நானும் வண்டியோட்டியும் மட்டுமே டோங்காவில் இருந்தோம். மற்ற அனைவரும் குறுக்குவழியில் நடந்து சென்றுவிட்டார்கள்.

டோங்கா இருநூறு அடிகள் கூட நகர்ந்திருக்காது. மோட்டார் கார் ஒன்றோடு மோதியிருக்கும். ஒவ்வொரு நாளும் வாடகைக்கு வண்டியோட்டுபவர் என் இப்படி வண்டி ஓட்டத் தெரியாமல் தள்ளாடுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

காவல்துறை அதிகாரி சத்தமாகக் கத்தியதையடுத்துக் காரோட்டி வண்டியை பின்னோக்கி இழுத்ததால்தான் விபத்தில் இருந்து தப்பினோம்.

ஆற்றின் மீதிருந்த அம்மதகுப் பாலத்தை ஒருவாறு வந்தடைந்தோம். சாலைப் பாலங்களில் உள்ளதைப் போன்ற பக்கவாட்டுச் சுவர்கள் எதுவும் அம்மதகுப் பாலத்தில் இல்லை.

ஐந்து அல்லது பத்தடி இடைவெளியில் வரிசையாகக் கற்கள் மட்டும்  நடப்பட்டு, அப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் வந்து கொண்டிருந்த சாலைக்கு செங்குத்தாக அம்மதகுப் பாலம் இருந்தது. சாலையில் இருந்து நேர்குத்தாகத் திரும்பினால் அம்மதகுப் பாலத்தை அடைய முடியும்.

ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டில் இருந்த முதல் கல் அருகே வந்த வண்டி நேராகச் செல்வதற்குப் பதிலாகத் திசை திரும்பியதோடு, குதிரை திடீர் வேகமெடுத்து ஓடவும் செய்தது.

டோங்காவின் சக்கரம் பக்கவாட்டில் இருந்த கல்லில் பயங்கரமாக மோதியதால் நான் அலக்காகத் தூக்கி வீசப்பட்டு, ஆற்றுப்பாலத்தின் கற்பாதையில் விழுந்தேன்.

குதிரையும், வண்டியும் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றிற்குள் விழந்தன. அப்படியே வலுவாகத் தூக்கி எறியப்பட்டதால் நான் பேச்சுமூச்சின்றிக் கிடந்தேன்.

ஆற்றின் மறுகரையில்தான் மகர்வாடா இருக்கிறது. என்னை நிலையத்தில் வரவேற்க வந்த ஆண்கள் எனக்கு முன்பே அவ்விடத்தைச் சென்றடைந்துவிட்டனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் அழுகைக்கும், புலம்பல்களுக்கும் இடையே தூக்கிச் செல்லப்பட்டேன். இந்த விபத்தால் எனக்கு உடம்பு முழுக்கக் காயமானது. கால் முறிந்துபோய் பல நாட்களுக்கு நடமாட முடியாமல் கிடந்தேன். இதெல்லாம் எப்படி நடந்தது என்று எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு நாளும் டோங்காக்கள் ஆற்றுப்பாலத்தின் இரு கரைகளையும் மீண்டும், மீண்டும் கடந்த வண்ணம் இருக்கின்றன. எந்த வண்டியோட்டியும் ஆற்றுப்பாலத்தைப் பத்திரமாகக் கடக்கத் தவறியதில்லை.

விசாரித்தபோது தான் உண்மையான தகவல்கள் சொல்லப்பட்டன. ஒரு தீண்டத்தகாத பயணியோடு டோங்காவை ஓட்ட எந்த வண்டியோட்டியும் முன்வரவில்லை என்பதே தொடர்வண்டி நிலையத்தில் ஏற்பட்ட கால தாமதத்திற்குக் காரணம்.

அப்படிப் பயணம் செய்ய ஒப்புவது அவர்களின் கௌரவத்திற்கு இழுக்கானது. நான் மகர்கள் வாழும் பகுதிக்கு நடந்தே வர வேண்டும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அவர்களைப் பொறுத்தவரை அது என்னுடைய கௌரவத்திற்கு இழுக்கானது. எனவே, சமரச உடன்படிக்கை ஒன்றிற்கு வந்து சேர்ந்தார்கள். அந்தச் சமரசம் இதுதான்: வண்டியோட்டி தன்னுடைய டோங்காவை வாடகைக்குத் தந்தால் மட்டும் போதுமானது, ஓட்ட வேண்டியதில்லை. மகர்கள் டோங்காவை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அதனை ஓட்டுவதற்கு யாரையேனும் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும். இது மகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய தீர்வாகத் தோன்றியது.

என்னுடைய கெளரவத்தை விட என் பாதுகாப்பு முதன்மையானது என்பதை அவர்கள் ஏனோ மறந்துவிட்டார்கள்.

அது குறித்துச் சிந்தித்து இருந்தால், சென்று சேர வேண்டிய இடம் வரை என்னைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கக்கூடிய வண்டியோட்டியை அமர்த்த முடியுமா எனச் சீர்தூக்கிப் பார்த்திருப்பார்கள். அவர்கள் யாருக்கும் வண்டியோட்டத் தெரியாது.

அது அவர்களின் தொழிலும் அல்ல. ஆகவே, தங்களில் ஒருவரை வண்டியோட்டுமாறு பணித்தார்கள். அவர் கையில் கடிவாளத்தை ஏந்திக் கொண்டார்.

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று எண்ணிக்கொண்டார். ஆனால். வண்டி நகரத்துவங்கியதும் தன்னிடம் தரப்பட்டிருக்கும் பொறுப்பை உணர ஆரம்பித்து, பதற்றத்தில் வெலவெலத்துப் போய் வண்டியைக் கட்டுப்படுத்த முயலாமல் முழுவதும் தலைமுழுகி விட்டார்.

என்னுடைய கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டுச் சாலிஸ்கானின் மகர்கள் என் உயிரையே பணயம் வைத்துவிட்டார்கள். அப்போது நான் ஒன்றை உணர்ந்தேன். 

ஒரு சாதாரண கூலித் தொழிலாளியைவிட எவ்விதத்திலும் மேம்பட்டவனாக இல்லாத சாதி இந்து வண்டியோட்டிக்குக்கூடச் சமூக மதிப்பிருப்பதால், அதன்படி அவன் தீண்டத்தகாதவர்கள் அனைவரையும் விடத் தன்னை மேலானவனாகக் கருதிக்கொள்கிறான்.

அந்தத் தீண்டத்தகாதவர் பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் என்றாலும், அவனுக்குப் பொருட்டில்லை.

****

– நன்றி: நீலம் வெளியீடாக வந்த புரட்சியாளர் அம்பேத்கரின் ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like