போராட்டத்தில் விளைந்த பூந்தோட்டம்!

பெண் துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களை பிரசவிக்‍கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்‍கும் அறிமுகம் செய்து வைக்‍கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்‍கும் அவள்தான் நதிமூலம்.

அப்படிப்பட்ட பெண்களுக்கான உரிமைகளை இன்று வரை போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது.

பெண் உரிமையை பெண்ணினத்தில் பிறந்தவர்களிடமே போராடி பெறவேண்டி உள்ளது, இங்குள்ள மிகப் பரிதாபகரமான நிலை.

மதமும், சாதீயமும் இரட்டை தண்டவாளங்களாக அமைந்து பயணப்பட வேண்டிய இந்திய சமூக அமைப்பில், மற்றொரு இணைப்பு தண்டவாளமாக கூடவே பயணப்படுகிறது பெண்ணடிமைத்தனம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல், ஆன்மிகம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஆணாதிக்கம் விரிந்து பரந்து, தனது ஆட்சியை செலுத்தி வருகிறது.

குறிப்பாக, திரைப்படத்துறையில் கதாநாயகிகள் இருந்தாலும், கதாநாயகர்கள்தான் கொண்டாடப்படுகிறார்கள்.

ஆண் என்பதாலே ஆராதிக்கப்படுகிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து, உடல் வருத்தி, உள்ளத்தின் வலிகளுக்கிடையே ஒருசில பெண்களும் சாதனை புரிந்து, சரித்திரமாய் உயர்ந்து நிற்கிறார்கள்.

திரைப்படத்துறையைப் பொறுத்தவரை அத்தகைய சாதனைப் பெண்மணி எனப் போற்றப்படுபவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா (Paluvayi Bhanumathi Ramakrishna)…

நடிகை, இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக ஆற்றல் கொண்டவர். ஆந்திராவில், பிரகாசம் மாவட்டம் தோடவரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் பானுமதி.

தந்தை பொம்மராஜூ வெங்கட சுப்பையா மேடை நாடக நடிகர். சிறுவயதிலேயே இசையின் மீது ஈர்ப்புகொண்ட பானுமதிக்கு முறைப்படியான சாஸ்திரீய சங்கீதத்தை கற்றுக் கொடுத்தார் தந்தை.

1939-ஆம் ஆண்டு Kalindi என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான பானுமதிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. சொர்க்க சீமா என்ற திரைப்படம் பானுமதியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தொடர்ந்து வந்த பல படங்களும், பானுமதியின் திரை ஆற்றலை பிறர் தெரிந்துகொள்ளும் திறவுகோலாயின.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி, என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வரராவ் உள்ளிட்ட திரையுலக ஆளுமைகளோடு, கலைப்பயணம் மேற்கொண்ட பெருமை பானுமதிக்கு உண்டு.

ஆயினும், அந்தக் காலத்திலேயே, ஆண் கலைஞர்களுக்கு நிகராக, தனக்குள் இருந்த திறமையையும், ஆளுமையையும் தயங்காமல் வெளிப்படுத்தியவர் பானுமதி.

”நடிப்புக்கு இலக்கணம்” என்ற அடைமொழிக்குள், பேரறிஞர் அண்ணா அவர்களால் அழைக்கப்பட்ட பானுமதிக்கு எதிராக அமரவே அப்போது பிரபலமாக இருந்த பல ஆண் கலைஞர்கள் தயங்கியதாக சொல்லப்படுவதுண்டு.

1943-ஆம் ஆண்டு கிருஷ்ண பிரேமா என்ற படப்பிடிப்புக்காக சென்னை வந்த பானுமதி, அங்கு உதவி இயக்குனராக பலுவை ராமகிருஷ்ணாவை சந்தித்தார்.

காதல் வயப்பட்ட இருவரும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டனர். படத் தயாரிப்பாளர் ராமய்யாவின் மனைவி மற்றும் சில நண்பர்கள் இத்திருமணத்திற்கு உதவினர்.

நடிப்பில் கொடி கட்டிப் பறந்த பானுமதி, நிர்வாகத்திலும் வல்லவராக இருந்தார். 1952-ம் ஆண்டு சென்னையில் பரணி ஸ்டூடியோவைத் தொடங்கி, நிர்வகித்து வந்தார். பானுமதி முதன்முதலாக இயக்கிய படம் சண்டிராணி பெரும் வெற்றி பெற்றது.

1992-ம் ஆண்டு வெளியான செம்பருத்தி திரைப்படம்தான் தமிழில் பானுமதி நடித்த கடைசி திரைப்படம். இதுவும் வெற்றிப் படமாக அமைந்தது.

திரைப்படப் பங்களிப்புக்காக தேசிய, மாநில விருதுகளை பானுமதி பெற்றள்ளார். தமிழ்நாடு இசைக்கல்லூரியில் முதல்வராக அவர் பணியாற்றியுள்ளார்.

மலைக்கள்ளன், கள்வனின் காதலி, அலிபாபாவும் 40 திருடர்களும், அறிவாளி, மக்களைப் பெற்ற மகராசி, சாரங்கதாரா, தாய்க்குப் பின் தாரம் போன்ற படங்கள் பானுமதியின் நடிப்பாற்றலையும், குரல் இனிமையையும் பறைசாற்றும் படங்களாக அமைந்தன.

ஆணாதிக்கம் மிகுந்த சினிமா துறையில், அதுவும் அந்தக் காலத்தில் ஒரு பெண் கலைஞரை அஷ்டாவதானி என அழைத்தார்கள் என்றால், அந்தப் பெண் கலைஞரின் பெருமையை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால், எல்லாப் பெண்களும் பானுமதி ஆக முடிவதில்லை.

அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி. பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்குக் கூட போராடவும், எதிர்நீச்சல் போடவும்தான் வேண்டியிருக்கிறது.

திறமைக்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு எத்தனை‍யோ பெண்கள் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜென்னி. உலகிற்கு “மூலதனம்” தந்த காரல் மார்க்ஸின் காதல் மனைவி. கணவனின் ஜீவநாடியாக, இதயத் துடிப்பாக, வாழ்வின் திடமாக அவரை இயக்கி வந்த தியாக ஒளி.

கணவனின் இலட்சியத்திற்காக இறுதிவரை பாடுபட்ட இணையற்ற தேவதை. இதுபோல, இங்கு எத்தனையோ “ஜென்னி”க்கள் அடையாளம் காணப்படாமல் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

போராட்டத்தை பூந்தோட்டமாக மாற்றி, இன்னும் பல ‘ஜென்னி’களும், பானுமதிகளும் பல்வேறு துறைகளில் பிரகாசிக்க வேண்டும்.

(பழம்பெரும் திரைப்பட நடிகை பானுமதி ராமகிருஷ்ணா பிறந்த நாள் செப்டம்பர் இன்று – 7, 1925)

✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like