கோவை ஜில்லாவில் 1903ம் ஆண்டு ‘பிளேக்’ கொள்ளை நோய் தாக்கியது. பல ஆண்ட காலம் இந்த நோய் கோவையில் ருத்ர தாண்டவம் ஆடியது.
1904ம் ஆண்டில் 3,045 பேர், 1909ம் ஆண்டில் 2,973 பேர், 1916ம் ஆண்டில் 5,582 பேர் என 1927ம் ஆண்டு வரை பிளேக் நோயால் உயிர்ப்பலி தொடர்ந்தது.
உச்சகட்டதில் இருந்த இந்நோய் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் 53,080 பேர் இறந்துவிட்டதாக அப்போதைய நகரசபை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது மொத்த கோவை ஜில்லா மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இறந்துவிட்டதாக கணக்கு வெளியானது.
அன்றைய காலகட்டத்தில், அதாவது 1927ம் ஆண்டு வாக்கில் 47,007 பேர் பிளேக் நோயில் இருந்து தப்பி, உயிர் பிழைத்துள்ளதாகத் தெரிகிறது.
பிளேக் நோய்க்குக் காரணம் குடிநீர் மாசு என கால்நூற்றாண்டு காலத்திற்குப் பிறகே கண்டறியப்பட்டது.
கோவை நகரில் ஏகப்பட்ட குளங்கள் இருக்கின்றன. இந்தக் குளங்களில் குளிப்பதும், சிறுநீர், மலம் கழிப்பதும் வாடிக்கையாக இருந்தது. அதே நீரை குடிநீராக மக்கள் பயன்படுத்தியதால் பிளேக் நோய் பரவியது.
இந்த விவரம் மக்களுக்குப் புரியவில்லை. இது ஏதோ அம்மை போன்ற கொடிய நோய் என நினைத்துவிட்டனர்.
கொத்து கொத்தாக மக்கள் மடிந்த பின்னர், குடிநீரை ஆராய்ச்சி செய்து பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்தனர். ‘குளத்துத் தண்ணீரைக் குடிக்காதீர்கள்’ என அறிவிப்பு வெளியிட்டனர்.
மாற்றுக் குடிநீருக்காக மக்கள் தவித்தபோது, கோவை மேற்கு வட்டாரத்தில் காட்டிற்குள் சுனை தண்ணீர் கொட்டுவதாகவும், அது கல்கண்டு சுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த சுனை நீர் எங்கே இருந்து வருகிறது எனக் கண்டறிய 1928ம் ஆண்டுவாக்கில் கோவை ஜில்லா நகரசபை உறுப்பினர்கள் நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.
அடர்ந்த காடாக இருந்த காலம் அது. அப்போது, ஊருக்குள் புலி, சிறுத்தை வந்துவிடும்.
யானை, செந்நாய், காட்டெருமைகளைக் கடந்து சுனை நீரைத் தேடி எப்படிப் போவது என உறுப்பினர்கள் சிலர் அச்சம் காட்டினர். இருப்பினும், மலை கிராமத்தினர் உதவியுடன் பல நாட்கள் போராடி, சுனை நீர் கொட்டிய இடத்திற்குச் சென்றனர்.
அந்த இடம்தான் சிறுவாணி. அங்கே அணை கட்டுவதற்காக, பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் மயிலோன் என்ற பொறியாளரை வரவழைத்தனர்.
அவர், சிறுவாணியில் தங்கி 3 ஆண்டுகளில் அணை கட்டி 1.9 கிமீ தூரத்திற்கு மலையைக் குடைந்து குகைப் பாதை அமைத்து குடிநீரை கோவை நகருக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.
முதலில் இந்த குடிநீர், கோவையின் மேற்குப் பகுதியில் உள்ள பாரதி பார்க் தொட்டிக்கு வந்து சேர்ந்தது. அப்போது, அது கோஷன் (அப்போதைய கோவை மாகாண கவர்னர்) பார்க் என அழைக்கப்பட்டது. இப்போதும் இந்தப் பெயர் இருக்கிறது.
அப்படி 1931ம் ஆண்டில் உருவானதுதான் சிறுவாணி அணைத் திட்டம்.
அப்போதைய காலகட்டத்தில் 44 லட்சம் ரூபாய் செலவில் சிறு குட்டை போல் நீர்த் தேக்கம் அமைக்கப்பட்டது.
இங்கிருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. 1949ம் ஆண்டில், 450 மி.மீ விட்டம் கொண்ட இரும்புக் குழாய் பதிக்கப்பட்டு காட்டு வழியாகக் குடிநீர் பெறப்பட்டது.
1954ம் ஆண்டில் சிறுவாணி நீர்த்தேக்க பரப்பளவு மேலும் விரிவானது.
மாநில சீரமைப்புக்குப் பின்னர் சிறுவாணி நீர் ஆதாரம் கேரள மாநிலத்திற்குச் சொந்தமாகிவிட்டது.
அதன்பிறகு, தமிழகம் – கேரளத்திற்கு இடையே தினமும் 101.4 மில்லியன் லிட்டர் (10.1 கோடி லிட்டர்) குடிநீர் பெறும் வகையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கடந்த
26-04-1966 அன்று முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்தம் நிறைவேறக் காலதாமதம் ஏற்பட்டு 1973ம் ஆண்டில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது.
99 ஆண்டுகள், சிறுவாணி குடிநீரை தமிழக மக்கள் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் ஒப்பந்தக் காலத்தை நீடிக்கலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 21-08-1976 அன்று தமிழக அரசு ரூ.16.16 கோடி செலவில் புதிய அணை கட்டும் பணியைத் தொடங்கி 1982ம் ஆண்டில் அணையைத் கட்டி முடித்தது.
திறப்பு விழா இன்றி சிறுவாணி அணைத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. சிறுவாணி அணையின் நீர்த் தேக்க பரப்பு 22.6 சதுர கி.மீ. அணைக்கு முக்தியாறு. பட்டியாறு உள்ளிட்ட 37 ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
சிறுவாணி நீர்ப்பிடிப்பில் ஆண்டு தோறும் 1,800 முதல் 2,100 மி.மீ வரை மழை பெய்கிறது.
அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர். இதில், 258 நாட்களுக்குத் தேவையான குடிநீரை தேக்கி வைக்க முடியும். சிறுவாணி குடிநீரை கோவை மாநகராட்சி மற்றும் வழியோரத்தில் உள்ள 11 கிராமங்களைச் சேர்ந்த 16.40 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறுவாணியின் பெருமையை அறிந்த யுனெஸ்கோ குழுவினர் அணை நீரை ஆராய்ச்சி செய்தனர்.
23 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவாணி குடிநீர் ஆசியாவின் 2வது தரமான குடிநீர் என அறிவிக்கப்பட்டது. முதலிடம் – பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டோமாலிஸ்டிஸ் அருவி.
சிறுவாணி அணை அமைந்துள்ள வனத்தில் 322 மூலிகைகள் இருப்பதாகவும், மண்ணில்கூட நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும் யுனெஸ்கோ வியப்பு தெரிவித்தது.
இந்த மூலிகை, மரங்கள், வேர்களின் இடையே நீருற்று பாய்ந்து வருவதால்தான் குடிநீரின் தரம் சிறப்பாக இருப்பதாகவும் யுனெஸ்கோ தெரிவித்தது.
சிறுவாணி குடிநீரில் இயல்பாகவே இரும்புச் சத்து அதிகம். நிலையத்தில் இதை சமன்படாத குளோரின், படிகாரம் கலக்காத சுத்தமான சிறுவாணி குடிநீர் குடித்து வரும் வெள்ளப்பதி, பொட்டப்பதி, ஜாகிர் நாயக்கன் பொரத்தி மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் 95 சதவீதம் பேருக்கு தலைமுடி நரைப்பதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சிறுவாணி அணை ‘தேநீர் கோப்பை’ வடிவில் இருக்கிறது. ‘டீ கப் டேம்’ என முதன் முதலில் மயிலோன் அழைத்தார்.
அவர் பெயரில், சிறுவாணி அடிவாரத்தில் பங்களா இன்றும் இருக்கிறது.
சிறுவாணி அணை கட்ட உதவி செய்த இன்னொரு பொறியாளர் ஹாலன். இவரை, ஹாலன் துரை என அழைத்தனர். இவரது பெயரில் ஆலாந்துறை என்ற ஊர் பிற்காலத்தில் உருவானது.
சிறுவாணி அணையின் தொடர்ச்சியாக கோவை, பாலக்காடு மாவட்டங்களில் பில்லூர், ஆழியாறு, அமராவதி, அப்பர் ஆறு, லோயர் ஆறு, காடம்பாறை, மலம்புழா, காஞ்சிரம் புழா அணை போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
– பாலதண்டாயுதம்
நன்றி: தினகரன் பொங்கல் மலர்-2022