செப்டம்பர் 2 – உலக தென்னை தினம்
‘பிள்ளையப் பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீரு’ என்ற சொலவடை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பிரசித்தம். அந்தளவுக்கு தென்னையினால் பயன் அதிகம் என்பதே இவ்வார்த்தைகள் உணர்த்தும் சேதி.
முருங்கை, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் வீட்டைச் சுற்றி இருந்தாக வேண்டுமென்பது நம் முன்னோர்களின் எதிர்பார்ப்பு. இன்றும் பலர் அதனைப் பின்பற்றி வருவதைக் காண முடியும்.
தென்னை என்பது அன்றும் இன்றும் பணப்பயிர். எண்ணிக்கையில் விற்ற தேங்காய், இன்று கிலோ கணக்கில் விற்கப்படுவதே அதற்கு சாட்சி. தேங்காய், இளநீர் தவிர்த்து நம் தினசரி வாழ்வில் தென்னையினால் கிடைக்கும் பயன்கள் மிக அதிகம்.
காயா பழமா?
தென்பகுதி நாடுகளில் இருந்து வந்ததால், ‘தென்காய்’ என்ற சொல்லே மருவி ‘தேங்காய்’ என்றானதாகச் சொல்லப்படுவதுண்டு. இன்றும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் தேங்காய் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
கோகோஸ் நூசிபெரா எனும் தாவரப் பெயருடைய தென்னை, பனை வகையைச் சேர்ந்தது. சாதாரணமாக 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.
இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு தென்னை பரவியதாகக் கூறப்படுகிறது. ’கோகோ’ என்ற பெயரில் இது அழைக்கப்பட்டது.
தேங்காய் என்று சொன்னாலும், அது முற்றிய பழம் என்பதைப் பல நேரங்களில் நாம் மறந்துவிடுவோம். பழம்பெரும் பாடல்களில் ‘தெங்கம்பழம்’ என்று இதனைக் குறிப்பிடுகின்றனர்.
தென்னை மரத்தில் இருந்து பறிக்கும் கொத்துகளில் இருந்து, மேற்பகுதி நார் உறித்தெடுக்கப்பட்டு, அதனுள் இருக்கும் தேங்காய் தனியே எடுக்கப்படுகிறது.
தென்னையின் பயன்!
தோப்பாகவும் தனிமரமாகவும் வளர்க்கப்படும் தென்னை, மணற்பாங்கான இடத்தில் அதிகம் வைக்கப்படுகிறது. எத்தனையோ கலப்பினம் வந்தாலும், அண்ணாந்து பார்க்க வைக்கும் தென்னைகளே காட்சிரீதியிலும் ருசிக்கின்றன.
தேங்காயினுள் இருக்கும் முற்றிய பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
முற்றாத காய் ‘இளநீர்’ வடிவில் நம் குறைகள் தீர்க்கிறது. மிகமுற்றிய கனி ‘கொப்பரை தேங்காய்’ ஆகும்போது, அதிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. மீந்துபோகும் புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
தென்னை இலைகள் பாய் முடையவும், கூரை அமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. தேங்காயைச் சுற்றியிருக்கும் நார் கயிறு திரிக்கவும், பிரஷ் மற்றும் மிதியடி போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது. இது தவிர துடைப்பான், சமையல் உபகரணங்களும் இதிலிருந்து கிடைக்கின்றன.
தென்னையில் இருந்து உதிர்பவை காய்ந்தபிறகு அடுப்பெரிக்கப் பயன்படுகிறது. இதன் புகை கொசுவை விரட்டும் தன்மை கொண்டது.
தென்னை மரங்களில் இருந்து கிடைப்பவற்றைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்யப்படும் வழக்கம் உலகம் முழுக்க உள்ளது. வீடு கட்டும்போதும் தென்னை மரம் பயன்படுத்தப்படுவதை கிராமப்புறங்களில் இன்றும் காண முடியும்.
அதிக கலோரி உணவு!
‘தேங்காய் போடாத சாப்பாடு உண்டுமோ’ என்பது போல, நாஞ்சில் நாட்டில் எதைச் சமைத்தாலும் தேங்காய் சேர்க்கும் வழக்கமுண்டு. சிலர் உணவில் இனிப்புச்சுவை சேர தேங்காய் சேர்ப்பதுண்டு. தேங்காயைப் பிழிந்து பால் எடுத்து, அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
மலபார் பகுதி, இலங்கை வழியாக திருநெல்வேலியை வந்தடைந்த ‘சொதி’ எனும் தேங்காய் குழம்பை, திருமணமான தம்பதிகளுக்கு விருந்தில் பரிமாறும் வழக்கம் இன்றும் உண்டு. அதிலிருந்தே இதன் பயன்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம்.
தேங்காயினுள் இருக்கும் நீரை குழம்போடு சேர்த்தால் இன்னும் சுவை கூடும் என்ற நம்பிக்கையும் நம்மூர் பெண்களிடம் உண்டு.
தேங்காயின் கண் பகுதியில் துளையிட்டு அவல், பொறிகடலை, வெல்லம் சேர்த்து வாய் பகுதியை அடைத்து நெருப்பில் இட்டு வாட்டினால், ஒருவகை ‘வைல்டு டேஸ்ட்’ கிடைக்க காணலாம்.
தேங்காயில் இருக்கும் அதிக நார்ச்சத்து சர்க்கரை குறைபாட்டை குறைக்கிறது. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்சிடெண்ட்கள் நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்துகிறது.
தேங்காயில் உள்ள அதிக கொழுப்பு, புரதம் மற்றும் கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியன உடலின் இயக்கத்தில் சுறுசுறுப்பை அதிகப்படுத்துகின்றன.
புரதமும் கொழுப்பும் அதிகம் என்பதால், சதைப்பற்று வைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் தவறாமல் தினமும் சாப்பிடலாம். ‘வெஜிடபிள் சாலட்’ போல தேங்காயைத் திருகி, இனிப்புடன் சேர்த்து பந்திகளில் பரிமாறும் வழக்கத்தை இன்றும் காணலாம்.
தேங்காய் எண்ணெய் காயங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது; தோல் பொலிவுக்கு காரணமாக விளங்குவதால், இளமைத் தோற்றத்தை வழங்க உதவுகிறது. சிலர் இதனை உடலில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
உணவாக, மருந்தாக, தோல் மற்றும் முடி பராமரிப்புக்காக, வீட்டு பயன்பாட்டு பொருட்களாகப் பல வகையில் தேங்காயும் தென்னை மரத்தின் இதர பாகங்களும் பயன்படுகின்றன.
உலக தென்னை தினம்!
2009ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 2ஆம் தேதியன்று ‘உலக தென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தேங்காயின் முக்கியத்துவத்தையும் தென்னை மர பயிரிடுதலையும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இத்தினம்.
இந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் சேர்த்து, ’உலக தென்னை தினம்’ மத்திய விவசாயம் & விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் சார்பில் கொண்டாடப்படுகிறது.
தேங்காயிலும் அரசியல்!
சில ஆண்டுகளுக்கு முன் தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்ப்பதால் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது.
உமி மற்றும் கரித்தூள் கொண்டு பல் துலக்குவது முட்டாள்தனம் என்று சொன்னவர்கள், இன்று கரித்துகள்கள் பற்பசையில் உண்டு என்று விளம்பரப்படுத்துகின்றனர்;
அதுபோல, தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயினால் எந்தவித உடல்நலக் குறைவும் ஏற்படாது என்ற பேச்சு மீண்டும் பரவலாகியுள்ளது. உண்மையில், தேங்காயில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் கொழுப்பு அறவே இல்லை என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சீராகவும் வளர்வதை உறுதிப்படுத்தும் உணவுகளில் தேங்காயும் ஒன்று. ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதைப் புரிந்தவர்கள், தேவைக்கேற்ப தேங்காயைப் பயன்படுத்துவார்கள். தேங்காயை முன்வைத்து நம் மீது திணிக்கப்படும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
முடிந்தவரை, ஒவ்வொருவரும் வீடுகளில் தென்னை உள்ளிட்ட நம் அத்தியாவசிய தேவைக்கேற்ற மரங்களை வளர்க்க வேண்டும். அதுவே, விலைவாசி உயர்வுக்கும் நமது ஆரோக்கியத்துக்குமான இடைவெளியைச் சரி செய்யும்.
அந்த வகையில், தென்னையை பெருகச் செய்யும் நோக்கோடு ‘உலக தென்னை தினம்’ கொண்டாடுவோம்!
– பா.உதய்