தேர்தல் எப்போது, எப்படி வரும்? சாமானியர்களின் நிலை என்ன?

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்கிற முழக்கம் அவ்வப்போது பா.ஜ.க அரசால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் அந்த முழக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

காரணம் – நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலத் தேர்தல்களும்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் சட்டென்று ஒரு மாற்றம்.

தமிழ்நாட்டுக்கு சில மாதங்களுக்கு முன் வந்த மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பற்றிப் பேசிவிட்டுப் போனார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில ஆண்டுகள் இருக்கையில் – இந்தச் சமயத்தில் இவர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று பலர் குழம்பிக்கூடப் போனார்கள்.

அதிலும் ’’பா.ஜ.க தமிழ்நாட்டை ஆள ஒருமுறை வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள்’’ என்று கூட கேட்டார்கள்.

இப்போது மும்பையில் ‘இந்தியா’க் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டம் போட்டிருக்கிற நிலையில், சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ – நடைமுறையைக் கொண்டுவர பா.ஜ.க முயற்சிப்பதற்குள்‘’ வரும் டிசம்பருக்குள் தேர்தலை நடத்த ஒன்றிய அரசு திட்டமிடுகிறது’’ என்றிருக்கிறார் மேற்குவங்க முதல்வரான ம‍ம்தா.

மசோதா வருவதற்கு முன்பே மனதார வாழ்த்தி வரவேற்றிருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி.

எப்படியோ – தேர்தலுக்கான தூறல் இப்போதே விழ ஆரம்பித்துவிட்டது.

சுங்க‍க் கட்டணம் சகட்டுமேனிக்கு உயர்கிற போதே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பை அறிவிக்கிறார்கள்.

பட்ஜெட்டின் போது கூட இத்தகைய அதிசயங்கள் நடக்கவில்லை. இப்போது நடக்கிறது என்றால் தேர்தலுக்குப் பின்னிருக்கிற வாக்காளர்களை அபூர்வமாக எண்ணிப் பார்த்துத் தான் இதையும் செய்திருக்கிறார்கள்.

இன்னும் கூட தேர்தல் நெருங்க நெருங்க இம்மாதிரியான வான வேடிக்கைகள் நடக்கலாம். மக்களுக்கு நலன் அளிக்கக்கூடிய மாதிரி தோற்றமளிக்கிற திட்டங்கள் நினைவுக்கு வரலாம்.

கொரோனாவுக்குப் பிறகே இருக்கிற வேலை வாய்ப்புகளை இழந்து, சிறு தொழில்களை இழந்து நொந்து கொண்டிருக்கிற சராசரி மக்களைச் சுற்றி நீர்க்குமிழிக் கனவுகளை வலைவிரிக்கலாம்.

தொன்மத் தமிழின் தூசியைத் தட்டி சில வாகன மேற்கொள்களும், ஏழைத் தாயைப் பற்றிய ஞாபகங்களும் மீண்டும் பகிரப்படலாம்.

சந்திராயனை அண்ணாந்து பார்க்க வைத்து, அயோத்தி ராமர் கோவிலில் இருந்து சாம்பிராணி வாசனை மணக்கலாம். கூடவே தாமரை வாசனையும் வரலாம். காவித்துணிகளுக்கான ஆர்டர்கள் அதிகரிக்கலாம்.

வரப்போகிற தேர்தல் இன்னும் என்னென்ன மகத்துவங்களை அள்ளித்தரப் போகிறதோ?

  • யூகி
You might also like