செவியிலும் சிந்தையிலும் ஓடி, நின்பாற்பொங்கிய ‘தோடி’!

கையிலே இசையா பொங்கும்
காற்றிலே இசையா துள்ளும்
மெய்யிலே இசையா மின்னும்
விழியிலே இசையா என்றே
ஐயனின் இசையைக் கேட்போர்
அனைவரும் திகைப்பர்! இன்று
கையறு நிலையிற் பாடக்
கருப்பொருள் ஆனாய்! ஓய்ந்தாய்!

செவியினில் ஓடி எங்கள்
சிந்தையில் ஓடி இந்தப்
புவியெலாம் ஓடி நின்பாற்
பொங்கிய ‘தோடி’ வேறெங்
கெவரிடம் போகும்? ஐய!
இனியதைக் காப்பார் யாவர்?
அவிந்தநின் சடலத் தோடே
அவிந்தது ‘தோடி’ தானும்!

நாதஸ்வரத்தில் ‘தோடி’யை சரியான ஸ்வரத்தில் ஒலிக்க வைத்து, ஒவ்வொரு ரசிகனையும் கிறங்கடித்த நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைவுக்கு, திரையுலக கம்பன் கண்ணதாசன் வடித்த இரங்கற்பா தான் இவை.

இந்த இரங்கற்பா‌‌வை படித்த பின், இந்த இரங்கற்பாவுக்காகவே இறந்து விடலாம் என பல கலைஞர்களுக்குத் தோன்றும். அதுதான் கண்ணாதாசனின் காந்த சக்தி.

திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் திருமருகல் எனும் சிற்றூரில் குப்புசாமிபிள்ளை – கோவிந்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

இயற்பெயர் பாலசுப்பிரமணியம். சிறுவயதிலேயே உறவினர் திருமருல் நடேச பிள்ளைக்கு, ராஜரத்தினத்தை தத்து கொடுத்து விட்டனர், அவரது பெற்றோர்.

அதனால், டி.என்.ராஜரத்தினம் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். ராஜரத்தினத்திற்கு 5 வயது ஆகும்போது நடேசபிள்ளை காலமானார்.

வயலின் மேதை திருக்கோடிக்காவல் பிடில் கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் முறைப்படி சங்கீதம் கற்றார்.

பின்னர் 8 வயதில் பயிற்சி கோனேரிராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதையரிடம் மாறியது. 9 வயதில் நன்னிலத்தில் ராஜரத்தினத்தின் பாட்டுக் கச்சேரி.

பாடும்போது தொண்டைப் புண் ஏற்பட்டதால், வாய்ப்பாட்டு அன்றோடு நின்றுபோனது. நாதஸ்வரம் என்ற கருவி, ராஜரத்தினம் சொல்படி கேட்கும் ஏவலாளனது.

மடத்து நாதஸ்வரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார் ராஜரத்தினம்.

ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனை வாசிக்க சொல்லிக் கொடுத்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தந்தை முத்துவேலர் ஆவார்.

பெரிய வித்வான்களின் லாவகத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவரின் வாசிப்பில் பூபாளம் (ராகம்) பூ பூத்தது.

வழக்கமாக நாதஸ்வரக் கலைஞர்கள் அணியும் உடையை அணியாமல், கோட், ஷர்வாணி ஆகிய ஆடைகளை உடுத்தியவர் ராஜரத்தினம் பிள்ளை. நாதஸ்வரக் கலைஞர்களில் கிராப் வைத்துக் கொண்டவர் இவரே.

1955-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிச மாநாட்டில் முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடத்தப்பட்ட ஊர்வலத்தில் நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களில் ராஜரத்தினம் பிள்ளையும் ஒருவர்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றபோது, வானொலியில் முதன்முதலாக ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலித்தது.

ராஜரத்தினம் பிள்ளையின் ‘தோடி’ ராக வாசிப்பில், ஏ.வி.​மெய்யப்பச் செட்டியார் பதிவு செய்து இசைத்தட்டாய் வெளியிட்டார். அது உலகெங்கும் விற்று சாதனை படைத்தது.

எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் 1940-ஆம் ஆண்டு வெளியான ‘காளமேகம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த பெருமை ராஜரத்தினம் பிள்ளைக்கு உண்டு. ‘திருநீலகண்டர்’ படத்தில் நாதஸ்வர வித்வானாகவும் நடித்துள்ளார்.

இத்தனை சிறப்புகள் பெற்ற ராஜரத்தினம் பிள்ளையின், வாழ்க்கை மட்டும் ஸ்ருதி சேராமல் பல சோக ராகங்களை மீட்டியது.

வாழ்க்கைப் பாதை தடம் மாறியதால், தடுமாறியது… ராஜரத்தினம் பிள்ளைக்கு 5 மனைவிகள். ஆனால் யாருக்கும் குழந்தை இல்லை.

நாதஸ்வரச் சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்டு, நாதஸ்வரத்திற்கே தலைவனாக விளங்கிய ராஜரத்தினம் பிள்ளையின் ராக அலைகள் 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி ஓய்ந்து போனது.

ஆனால், அந்த மேதை வாசித்த ராகங்களும், கீர்த்தனைகளும் காலம் உள்ளவரை அலைகள் கரையில் பதிவு செய்து விட்டுப் போன ஈரமான நினைவுகளாய் ரசிகர்களின் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கும்.

(நாதஸ்வரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பிறந்த நாள் (ஆகஸ்டு 27, 1898)

✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like