இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன்னாவும் இணைந்து தயாரித்த படம் ‘கவரி மான்’.
கதை – வசனம் எழுதியது பஞ்சு அருணாசலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா இருக்கே…’’ என்று பஞ்சுவைப் பாராட்டினார். அந்த சந்தோஷத்தோடு படத்தின் மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்து படப்பிடிக்கான தேதியையும் முடிவு செய்தோம்.
அண்ணன் சிவாஜி கணேசன் ‘கவரி மான்’ முதல் நாள் படப்பிடிப்பில் என்னை அழைத்து, ‘‘முத்து என்ன வேணும்னாலும் கேள். எதற்கும் தயங்காதே!’’ என்று தைரியம் கொடுத்தார்.
சிவாஜி எப்போதுமே வசனம் எழுதிய பேப்பரை வாங்கிப் படிக்க மாட்டார். காட்சிக்குரிய வசனத்தை ஒருமுறை படிக்கச் சொல்வார். அதை அப்படியே உள் வாங்கிக்கொண்டு, ‘‘சரி… நீ போ’’ என்று கூறிவிடுவார்.
நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் படப்பிடிப்புக்கான மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்போம். திரும்பிப் பார்த்தால் சிவாஜி நம்மிடம் கேட்ட வசனங்களை முணுமுணுத்துக் கொண்டே வெவ்வேறு விதமாக நடித்துப் பார்ப்பார்.
‘‘முத்து…’’ என என்னை அழைத்து, ‘‘நான் நடிச்சுக் காட்டுறேன் பாரு’’ என்பார். ‘‘அண்ணே… நீங்க நடிச்சுக் காட்டணுமா?’’ என்று கேட்டால், ‘‘உனக்குத்தானே தெரியும். இதற்கு முன்னால உள்ள காட்சி எப்படி இருந்தது? இந்தக் காட்சி எப்படி இருக்கணும்’’னு என்று கூறி இரண்டு, முன்று விதமாக நடித்துக் காட்டுவார்.
‘‘கடைசியா செய்தது நல்லா இருக்குண்ணே’’ என்று சொன்னதும், அதே முறையில் நேர்த்தியுடன் நடித்துக் கொடுப்பார்.
அது, அவர் எஸ்பி.முத்துராமனுக்குக் கொடுக்கும் மரியாதை அல்ல; ஓர் இயக்குநருக்கு கொடுக்கும் மரியாதை!
எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும், எத்தனை பக்க வசனமாக இருந்தாலும் அவ்வளவு ஈடுபாட்டோடு அண்ணன் சிவாஜி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார். அதுதான் அவர் தொழிலுக்குக் கொடுத்த மரியாதை.
பாடல் காட்சி ஒன்றை படமாக்கத் திட்டமிட்டோம். இளையராஜா இசையில் ‘பிறவா பிரம்மா…’ என்று தொடங்கும் கீர்த்தனைப் பாடல்.
அதை ஜேசுதாஸ் அருமையாக பாடியிருந்தார். படத்தில் சிவாஜி குடும்பத்துடன் பாடுவதுபோல காட்சி. அந்த ஆடியோ டேப்பையும், பாடலையும் எடுத்துக்கொண்டு அண்ணன் சிவாஜியைப் பார்க்க வீட்டுக்குச் சென்றேன்.
“ஜேசுதாஸின் பாடலில் ஆலாபனை, சங்கதிகள் எல்லாம் வித்தியாசமாக வந்திருக்கு. நீங்க ஒருமுறை கேட்குறதுக்காகக் கொண்டு வந்திருக்கேன்?’’ என்றேன்.
பலமாக சிரித்தவர், ‘‘முத்து… லிப் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் சரியா வரணும்னு நான் ஒத்திகை பார்க்குறதுக்காகக் கொண்டு வந்திருக்கியா? நீ எடிட்டரா இருந்து இயக்குநர் ஆனவனாச்சே. நாளைக்கு ஷூட்டிங்ல நீ சரியா பார்த்துக்க’’ என்று கூறினார்.
மறுநாள் ஷூட்டிங்கில், ஒரு மனிதன் உண்மையாக பாடினால் அந்த பாவனைக்குத் தகுந்த மாதிரி எப்படி அவருடைய நரம்புகள் துடிக்குமோ அப்படி படப்பிடிப்பில் அண்ணன் சிவாஜிகணேசனின் லிப் மூவ்மெண்ட்ஸ் இருந்தது.
அந்தப் பாட்டை ஜேசுதாஸ் பாடினாரா… சிவாஜிகணேசன் பாடினாரா என்ற சந்தேகமே வரும்.
பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், ‘‘என்ன முத்து சரியா பாடுறேனா?’’ என்றார்.
‘‘நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியா இருக்குண்ணே’’ என்று கூறி மகிழ்ந்தேன்.
அப்போது, ”சிவாஜி அவர்கள் சின்ன வயதில் நாடகத்தில் நடிக்கும்போது வசனம், பாட்டு, நடனம் இதையெல்லாம் சரியாகச் செய்யவில்லை என்றால் பிரம்பால் அடிப்பார்கள். அந்த நாடகப் பயிற்சிதான் எங்களை வாழ வைக்கிறது’’ என்று நினைவுகூர்ந்தார்.
அதனால் தான் நாடகப் பயிற்சி பெற்று சினிமாவில் நடிக்க வந்த நடிகர்கள் அனைவரும் அந்த நாளில் சினிமாவிலும் உச்சியைத் தொட்டார்கள்.
– நன்றி: சிவாஜி ரசிகன் முகநூல் பதிவு