தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
குணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்கத் துவங்கினார் எஸ். வரலட்சுமி. 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தெலுங்கில் நாகேஸ்வரராவின் “பால்ராஜ்’ படத்திலும் அறிமுகமானார்.
ஏவிஎம்-ன் “ஜீவிதம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள எஸ். வரலட்சுமி, திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார். தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் நடிகை எஸ். வரலட்சுமி.
இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது. அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.
தமிழில், சுவப்னசுந்தரி (1950), எதிர்பாராதது (1954), சதி சக்குபாய் (1954), மாங்கல்ய பலம் (1958), சத்ய அரிச்சந்திரா (1965), ஆபூர்வ பிறவிகள் (1967), குணா (1992), வீரபாண்டிய கட்டபொம்மன், கந்தன் கருணை, ராஜராஜ சோழன், பூவா தலையா, சவாலே சமாளி, நினைத்ததை முடிப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, மாட்டுக்கார வேலன், பணமா? பாசமா?, அடுத்த வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார் எஸ். வரலட்சுமி.
தெலுங்கில், கனகதாரா, கோடாரிகம், லாயர் சுகாசினி, மாமாகாரம், சதி துளசி,பொம்ம பொருசா (1971), ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம் (1963), மகாமந்திரி திம்மரசு (1962), ஜீவிதம் (1949), பாலயோகினி (1936) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கலைமாமணி விருது, கலைவித்தகர், கவிஞர் கண்ணதாசன் விருது (2004), சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு போன்ற பல விருதுகளை வாங்கியுள்ள எஸ். வரலட்சுமி வயது மூப்பு காரணமாக 2009-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
- நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்