‘ஜெயிலர்’ படம் பெரு வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ரஜினி இமமலைக்குக் கிளம்புவதாக அறிவித்தார்.
வழக்கம் போலத் தான் ரஜினியின் இந்த அறிவிப்பும் இருக்கும் என்று பார்த்தால், அப்படியில்லை நிலைமை.
தனது நண்பர்களுடன் இமயமலை அடிவாரத்திற்குச் சென்றிருக்கிறார். உடனுக்குடன் அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதெல்லாம் சரி தான். ஆன்மீகப் பயணம் என்று சொல்லிவிடலாம்.
அதையடுத்து பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார்.
உ.பி.க்குச் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றிருக்கிறார். அங்கேயே ‘ஜெயிலர்’ படத்தையும் பார்த்திருக்கிறார்.
பிறகு ராமர் கோவிலுக்குச் செல்கிறார்.
அவருடைய மனைவி சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றதும், இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருக்கும் ராமர் கோவிலுக்குள் ரஜினி அழைத்துச் செல்லப்படுகிறார். வணங்குகிறார். பெரும் பாக்கியம் என்கிறார்.
ஜனவரி மாதத்தில் திறக்கப்பட இருக்கும் ராமர் கோவில் திறப்பை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய முக்கிய அஜெண்டாவாக வைத்திருக்கிறது பா.ஜ.க.
ஜனவரி இறுதி வாரத்தில் கோலாகலமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அயோத்தியில் இப்போதே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் புக்கிங் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்தியா முழுக்கப் பல மாநிலங்களில் இருந்து பக்தர்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் பெருந்திரளாகக் கூட்டப்படுவார்கள்.
பிரபலமான பெரும் புள்ளிகள் வந்து அதில் கலந்து கொள்வார்கள் என்கிற செய்திகளும் இப்போதே அடிபடுகின்றன.
அந்த விழாவுக்கான துவக்கப் புள்ளியாக ரஜினியின் ராமர் கோவில் வருகை கட்டமைக்கப்பட்டிருந்ததா? தற்செயல் நிகழ்வாக அவர் சட்டென்று சென்றுவிடுவதும், அங்கு வழிபாடு செய்வதும் நடந்துவிடுமா?
ஜெயிலர் – பட வெற்றியை ஒட்டித் திட்டமிடப்பட்ட ஒன்றாக அவருடைய ராமர் கோவில் வருகை அமைந்திருக்கலாம்.
ஆக, அவருடைய வருகையில் ஆன்மீகமும் இருக்கிறது. நுணுக்கமான அரசியலும் இருக்கிறது.
– யூகி