ஒற்றைத் தலைமைக்கு என்ன பாடுபட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் பொதுக்குழுவைக் கூட்டி, நீதிமன்றத்திற்குப் போய், தற்போது மதுரை மாநாடு வரை என்னென்ன சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்பது புரியும்.
பொதுக்குழுவை விட, மதுரை மாநாட்டை நடத்த எடப்பாடி நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது.
தென் தமிழகத்தில் தன்னுடைய பலத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக மாநாட்டுக்கான இடம், பந்தல், சாப்பாடு என்று எல்லாவற்றிலும் பிரமாண்டத்தைக் காட்ட ஆசைப்பட்டிருக்கிறார்.
அதற்கு அதிக தொகை செலவழிக்கப்பட்டதாக கழக நிர்வாகிகளே சொல்கிறார்கள். டி.டி.வி தினகரன் சொல்வது சில நூறு கோடி. பல மாவட்டங்களில் இருந்து கழகத் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலும், கொங்கு மண்டலத்திலிருந்து வந்தவர்களே அதிகம்.
மேடையிலும் கொங்கு மண்டலம் சார்ந்த தலைவர்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
பதினைந்து லட்சம் பேர் வரை வருவார்கள் என்று சொல்லப்பட்டாலும், அந்த அளவுக்கு எண்ணிக்கையிலான தொண்டர்களை அவர்களால் திரட்ட முடியவில்லை. உணவு விநியோகத்தில் நடந்த குளறுபடியால் டன் கணக்கில் வீணான ‘புளியோதரை’ சமூக வலைத் தளங்களில் பேசு பொருளானது.
பொழுது போக்கு கேளிக்கைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் – திராவிட இயக்கக் கொள்கை சார்ந்து இல்லை.
வீர வரலாற்றின் வெற்றி மாநாட்டில் எடப்பாடியின் பேச்சும் இலக்கில்லாமல் தான் இருந்து. அதில் வெளிப்பட்டது தி.மு.க எதிர்ப்பும், அவருடைய சாதனைகளையும் தான். பா.ஜ.க மீது எந்த விமர்சனமும் இல்லை. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சொல்லத்தக்க அளவுக்கு இல்லை.
சரி.. அப்படி என்றால் மதுரை மாநாட்டில் எடப்பாடி எதைத் தான் உணர்த்த நினைத்தார்?
கூட்டத்தைச் செலவு செய்து கூட்டி அ.தி.மு.க தொண்டர்கள் தன்னுடைய பக்கம் இருப்பதாக, ஓ.பி.எஸ் தரப்புக்கும், பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் உணர்த்த நினைத்திருக்கிறார். ஆனால் அதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.
இனிமேல் பதிலுக்கு கொங்கு மண்டலத்தில் தன்னுடைய பலத்தைக் காட்டப் புறப்படுவார் ஓ.பி.எஸ். அவர் எந்த அளவுக்குத் தொண்டர்கள் பலத்தைக் காட்டுவார்?
தேர்தல் முடிவு ஒன்று மட்டுமே யாரை அ.தி.மு.க தொண்டர்கள் ஆதரித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தும், அதுவரை- ‘காஸ்ட்லி’யான இத்தகைய கண்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
– லியோ