மோகன் படம்னா ஜாலியா இருக்கும்!

திரைப்படங்களில் பல வகைமைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இருப்பது பொழுதுபோக்குப் படங்கள் தான். எண்பதுகளின் தொடக்கத்தில் பாட்டு, சண்டை, சிரிப்பு, கவர்ச்சி நடனம் என்று எல்லாம் சேர்ந்த கலவைதான் ஒரு பொழுதுபோக்கு படத்தை முழுமையாக்கும் என்றொரு எண்ணம் திரையுலகில் பரவத் தொடங்கியது.

அந்த காலகட்டத்தில் ஆக்‌ஷன் தவிர்த்து ரொமான்ஸ், காமெடி, டிராமா என்று அனைத்து உணர்வுகளையும் வெவ்வேறு விகிதங்களில் கலந்து ‘மெலிதான பொழுதுபோக்கு படங்கள்’ உருவாக்கலாம் என்பதைச் சில வெற்றிகள் நிரூபித்தன.

ஆங்கிலத்தில் இதனை ‘light entertainment movies’ என்று சொல்வார்கள். அவ்வாறு, தான் நடிப்பவற்றை ‘மெலிதான பொழுதுபோக்கு படங்கள்’ ஆக அமைத்துக் கொண்டு புகழின் உச்சியை அடைந்தவர்களில் ஒருவர் நடிகர் மோகன்.

யதார்த்த நாயகன்!

பாலு மகேந்திரா முதன்முறையாக இயக்கிய ‘கோகிலா’வில் கமல்ஹாசனின் நண்பராக நடித்தவர் மோகன். அப்போது, பெங்களூரில் இயங்கிய சில நாடகக் குழுக்களில், அவர் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

‘கோகிலா’வின் வெற்றி, அவரை திரையுலகம் நோக்கித் திருப்பியது. அதன்பிறகு, மலையாளத்தில் வெளியான ‘மடாலசா’வில் வில்லனாகத் தோன்றி திரைக்கலைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.

அதற்கு அடுத்த ஆண்டே, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடித்தார்.

தமிழில் மோகன் நடித்த முதல் படம் ‘மூடுபனி’. அது ‘த்ரில்லர்’ படம் என்பதால் பெரும்பாலான ரசிகர்களைச் சென்றடையவில்லை. ஆனால், அதன்பிறகு வெளியான மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, துரையின் கிளிஞ்சல்கள்’ இரண்டும் அவருக்கும் பெரும் வெற்றிகளாக மாறின.

அதன் தொடர்ச்சியாக, 1982இல் வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ அவரை வெள்ளிவிழா நாயகனாகக் கொண்டாடச் செய்தது.

இம்மூன்று படங்களிலும் சோகமான காட்சிகள் உண்டென்றாலும், அவற்றை மீறி மோகனின் சிரித்த முகமே மக்கள் மனதில் பதிந்தது. குறிப்பாக, பெண்களுக்குப் பிடித்தமான ‘யதார்த்த நாயகன்’ ஆகத் திரையில் வெளிப்பட்டார்.

’மைக்’ ஆர்டர் கொடுத்தாச்சா?

மோகன் என்று சொன்னதுமே, நமக்கு அவர் ‘மைக்’கை கையில் வைத்துக்கொண்டு பாடும் ஷாட் தான் நினைவுக்கு வரும்.

அதனாலேயே, ‘மோகன் படம் எடுக்கறதுக்கு முன்னாடி ’மைக்’ செட் ஆர்டர் கொடுத்திருவாங்க’ என்று கிண்டலடிக்கும் வழக்கமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. உண்மையில், அப்படியொரு ‘சென்டிமெண்டை’ மோகன் பின்பற்றியதே இல்லை.

ஆனால், ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘நான் பாடும் பாடல்’, ‘இதயக்கோவில்’, ‘உதய கீதம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘பாடு நிலாவே’ என்று பல வெற்றிப் படங்களில் அவர் ‘மைக்’கை கையில் சுமந்தது அப்படியொரு எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது.

அதேநேரத்தில், எண்பதுகளில் தமிழ் திரைப்படங்களில் ‘வேலையில்லா பட்டதாரி’ பாத்திரத்திற்கு உரு கொடுத்தவர் மோகன் தான். அந்த வகையில் தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு எல்லாம் இவர் ஒரு முன்னோடி.

எண்பதுகளில் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆக்‌ஷனில் கலக்கிக் கொண்டிருக்க, கமல்ஹாசன் வழியில் பிரபு, கார்த்திக் போன்றோர் பயணிக்க, அவர்களுக்கு நடுவே தென்றலாகத் திகழ்ந்தன மோகனின் படங்கள்.

அவற்றில் பெரும்பாலானவை ’ஒருமுறை பார்க்கலாம்’ என்று சொல்லத்தக்க பொழுதுபோக்குப் படங்கள் தாம். காரணம், இவரது படங்கள் ஒரு சிறுகதையை வாசிப்பது போன்ற உணர்வைத் தரும்.

ரசிகர்கள் தியேட்டரில் இருந்து தலையைப் பிடித்துக் கொண்டே செல்லும் அளவுக்கு, ‘கனமான’ கதைகள் இவரது படங்களில் இருக்காது. போலவே, திரைக்கதையும் ‘கிரீஸ் தடவிய கதவு’ போல ‘கிரீச்.. கிரீச்..’ சத்தமில்லாமல் சுலபமாக ரசிகர்களைத் திரைக்குள் இழுத்துக் கொள்ளும்.

அதனாலேயே, ரசிகர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களும் இவரைத் தேடி வந்தனர்.

1985இல் வெளியான ‘தென்றலே என்னைத் தொடு’, ‘குங்குமச் சிமிழ்’ போன்ற படங்கள் அதற்கான உதாரணங்கள். ’மௌன ராகம்’, ‘ரெட்டைவால் குருவி’, ’நினைக்கத் தெரிந்த மனமே’ வரை, தன் படங்கள் அப்படி அமையுமாறு பார்த்துக்கொண்டார் மோகன்.

இடையிடையே ‘பிள்ளை நிலா’, ’நூறாவது நாள்’, ‘விதி’ போன்றவற்றில் தனது வழக்கமான ‘பார்முலா’வில் இருந்து விலகி வித்தியாசமான பாத்திரங்களில் தோன்றினார்.

நகைச்சுவையும் காதலும்..!

எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடித்தபோதும் நகைச்சுவை, காதல் இரண்டுமே மோகனுக்கு நன்கு பழக்கப்பட்ட ‘ஏரியா’வாக இருந்தன. ராம.நாராயணன் இயக்கத்தில், எஸ்.வி.சேகரோடு இணைந்து ‘சகாதேவன் மகாதேவன்’ நடிக்கும் வரை அந்த வழக்கமும் தொடர்ந்தது.

அதன்பிறகு, ரொம்பவே சீரியசான கதைகளில் நடிக்கத் தொடங்கினார் மோகன். அது, 99வது படமாக ‘உருவம்’ கதையைத் தேர்ந்தெடுப்பது வரை நீண்டது. மோகன் படங்கள் தோல்வியுறத் தொடங்கியதும் அப்போதுதான்.

அந்த காலகட்டத்தில், மோகனின் தோற்றத்தில் சில மாறுபாடுகள் ஏற்பட்டன. அதேநேரத்தில், அவருக்குத் திரையில் குரல் தந்த எஸ்.என்.சுரேந்தரோடு மோகனுக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

அதனால், அவரே தனது சொந்தக் குரலில் பேசத் தொடங்கினார். அது, அதுவரை மக்கள் ரசித்த மோகனின் பிம்பத்தில் சிறு கீறலை உருவாக்கியது. அதனாலேயே, 1989 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் வெளியான மோகன் படங்கள் பெருவெற்றியைச் சுவைக்காமல் போனதற்குக் காரணங்களாகவும் மாறின.

ஒருவேளை தொடக்க காலத்திலேயே மோகன் ‘டப்பிங்’ பேசியிருந்தால், ரசிகர்களின் மனோபாவ மாறுதலைத் தடுத்திருக்கலாம்.

‘உருவம்’ வெளியானபிறகு, அதுவே அவரது சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும் என்றும் கருத முடியும். அவரே வெளிப்படையாகப் பேசினாலொழிய, அதனை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

எத்தனை பாடல்கள்!

எண்பதுகளில் வெளியான மோகன், ராமராஜன் படங்களில் இளையராஜா இசையமைத்தவற்றில் பெரும்பாலானவை மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்டிருக்கும். மிகச்சில மணி நேரங்களில் தனது பாடல்களுக்கான கம்போஸிங், ரிக்கார்டிங் பணிகளை இளையராஜா நிறைவு செய்த காலம் அது.

ஆதலால், அது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக நிச்சயம் கூற முடியாது. அதேநேரத்தில், மோகனின் படங்கள் பல வெற்றி விழா கொண்டாடியதற்கு ராஜாவின் இசையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ‘இளைய நிலா பொழிகிறது’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘நிலாவே வா..’ என்று மோகன் கைத்தட்டல்கள் பெறுவதற்காக, எஸ்.பி.பி எத்தனை முறை நிலா எனும் வார்த்தையை உச்சரித்திருப்பார் என்பதையும் கணக்கிட முடியாது.

இன்றும், பெரிதாகச் சிரமங்கள் இல்லாமல் நம்மால் மோகன் படங்களைத் தொலைக்காட்சியிலோ, ஓடிடியிலோ பார்த்து ரசிக்க முடியும். காரணம், அவற்றில் நிறைந்திருக்கும் அவரது யதார்த்தமான நடிப்பும், மெல்லிய பொழுதுபோக்கை தரும் திரைக்கதை ட்ரீட்மெண்டும், மனதைக் கவரும் இசையும் தான்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘குங்குமச் சிமிழ்’ அப்படியொரு திரைப்படம். அது வெளியாகி, இன்றுடன் 38 ஆண்டுகள் ஆகின்றன. அதுவும் ‘மெல்லிய பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான’ அத்தனை கல்யாணக் குணங்களையும் தன்னுள் கொண்டது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

நொடியில் கவனம் குவிப்பது எளிது என்றாகிவிட்ட ‘இன்ஸ்டாகிராம்’ காலத்திலும் கூட, திரையுலகில் நுழைந்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளுவது மாபெரும் சவாலாகவே நீடிக்கிறது. அப்படியிருக்க, சாதாரண பின்னணியில் இருந்து வந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘வெற்றி நாயகன்’ ஆக வலம் வந்ததெல்லாம் நிச்சயம் ஈடிணையற்ற சாதனையே.

அது மட்டுமல்லாமல், இன்றுவரை நாயகன் வாய்ப்பைத் தவிர வேறெதையும் ஏற்பதில்லை என்பதில் உறுதியாக நிற்கிறார். ரசிகர்களுக்கு அது இழப்பென்றாலும், அவரைப் பொறுத்தவரை அது தன்னம்பிக்கையின் சரியான வெளிப்பாடு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதற்குத் தலைவணங்கும் வகையில், மோகன் நடித்த ஏதோவொரு படத்தினை அல்லது அதன் சில காட்சிகளைக் கண்டு ரசித்தால் போதும். அன்றைய காலகட்டத்தில், திரையில் அவர் செய்த மாயாஜாலம் என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றைய தினம் நடிகர் மோகனின் பிறந்தநாளும் கூட..!

–  உதய் பாடகலிங்கம்

You might also like