– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மகன் குமாரவேல்
*****
-அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரிலிருந்து…
எனது தந்தை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கம் பாராட்டியவர்.
எம்.ஜி.ஆர். அவர்களும், என் தந்தையும் சினிமாவில் குறைந்த ஆண்டுகளே பணியாற்றி இருந்தாலும் இருவரும் மிகுந்த நெருக்கத்துடன் பழகி வந்தனர்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். எனது தந்தையின் மறைவிற்குப் பிறகு நாங்கள் வேறு ஊருக்கு சென்று விட்டதால் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
நான் படித்துமுடித்து வந்தபோது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். அப்போது நான் அவரை நேரில் சென்று சந்தித்தேன். என்னை சந்தித்த அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அரசுப் பணி வாங்கிக் கொடுத்தார்.
அதன்பின்னர் அந்த வேலையிலிருந்து தான் நான் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பின்னர் ஓய்வு பெற்றேன். நான் வேலையில் சேர்ந்தது 1986 காலகட்டங்களில்தான். ஆனால் புரட்சித்தலைவர் 1987-ல் மறைந்து விட்டார்.
அவரது மறைவிற்கு பின் புரட்சித் தலைவரின் மனைவி திருமதி.ஜானகி அம்மாள் சிறிது காலம் முதலமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில், ஜானகி அம்மையார் அவர்கள் அவருடைய பதவிக் காலம் முடிந்து வீட்டில் இருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நிச்சயமானது. எனது நண்பர் ரவீந்திரன் அவர்கள் புரட்சித்தலைவரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.
அவர்தான் என்னை ஜானகி அம்மாவைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அப்பொழுது ஜானகி அம்மாவைச் சந்தித்து நாங்கள் எனது திருமண அழைப்பிதழைக் கொடுத்தோம்.
அழைப்பிதழை வாங்கிக் கொண்ட ஜானகி அம்மா, “திருமணம் பட்டுக்கோட்டையில் நடப்பதால் என்னால் அவ்வளவு தொலைவிற்கு வர முடியாது. நீ திருமணம் முடிந்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு வா” எனக் கூறி என்னை ஆசிர்வதித்து வாழ்த்தி அனுப்பினார்.
அதேபோல் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் என் மனைவியை சென்னைக்கு அழைத்து வந்தேன். அப்போது நான், என் மனைவி, நண்பர் ரவீந்தரன் மற்றும் அவரது மனைவி நால்வரும் ஜானகி அம்மாவை இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று சந்தித்தோம்.
அப்போது ஜானகி அம்மா புரட்சித்தலைவரின் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது ஜானகி அம்மா என் மனைவியை எம்ஜிஆர் அவர்கள் பயன்படுத்திய கட்டிலில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு எங்களை ஆசீர்வதித்து எங்களுடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டார். என் மனைவிக்கு புடவைகள் வாங்கிக் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார் ஜானகி அம்மா.
நான் எம்.ஜி.ஆர். அவர்களை ஒரு சில முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் ஜானகி அம்மாவை அப்போதுதான் இரண்டாவது முறையாகச் சந்தித்தேன்.
எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு மனைவி இருந்திருக்கிறார் என்பதை அவரைச் சந்தித்தபிறகு தான் உணர்ந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர். எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும், முடிவுகளுக்கும் ஜானகி அம்மையார் தடை கூறாமல், குறை சொல்லாமல் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை மட்டுமல்ல, ஒரு நல்ல இணையுமாக இருந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆருடன் இணைந்து மக்கள் பணி புரிந்ததால்தான் அடுத்த முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
“மனிதனாக வாழ்ந்திட வேண்டும் அதை நீ மனதில் வையடா” என என் தந்தை எழுதிய பாடலுக்கு ஏற்ப, புரட்சித்தலைவர் அவர்கள் மனிதனாக மட்டுமல்ல -மாமனிதனாக வாழ்ந்தவர்.
அந்த மாமனிதனுக்கு ஒரு புனிதமான மனிதநேயத்தோடு வாழ்ந்த ஜானகி அம்மையார் துணைவியாக இருந்தார். அந்த அன்னையை சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
வாழ்க்கையில் அகம் புறம் என இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு மனிதனுக்கு அகம் நன்றாக அமைவது வரம். அந்த வரம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு அகம் அமைதியாக அமைந்ததால்தான் புறத்தில் அவர் அனைத்து காரியங்களையும் எளிதில் செய்ய முடிந்தது. மக்கள் நலனைப் பார்க்க முடிந்தது.
புரட்சித்தலைவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ஜானகி அவர்கள் தான் என்றும், ஜானகி அம்மாவை போன்ற ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது மிகவும் அபூர்வம் என்றும் நான் என்னுடைய நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறேன்.
ஜானகி அம்மா இனிமையாகப் பழகக்கூடியவர். மிகவும் அமைதியாக, சாந்தமாக பேசும் தன்மை கொண்டவர். அவருடைய முகத்தில் முகச்சுழிப்போ, எரிச்சலையோ பார்க்க முடியாது. எதையும் அவசரமாக செய்யாமல் ,நிதானமாகக் கையாளும் திறன் கொண்டவர்.
முதல்வர் பதவியில் புகழோடு இருந்த போது கூட, அனைவரிடமும் மிகச் சாதாரணமாக, எளிமையாக, அன்போடு பேசிப் பழகும் தன்மை கொண்டவராகவே இருந்தார்.
ஜானகி அம்மையார் முதல்வராக இருந்தபோது நான் தலைமைச் செயலகத்தில் தான் பணிபுரிந்தேன். அப்போது எதையும் முறையாக விளக்கமாக எழுதினால் ஜானகி அம்மா உடனே கையெழுத்திடுவார். அவர் முதல்வாக இருந்த காலத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்குமே எந்தப் பிரச்சினையுமே வந்தது கிடையாது.
மனிதர்களுக்குக் கெடுதல் நினைக்காத மனம் கொண்ட ஜானகி அம்மா மனிதநேயத்தின் முழு வடிவமாக இருந்தார். எந்த நல்ல காரியத்திற்கும் தடை சொல்ல மாட்டார். நல்லது செய்வதற்கு புரட்சித் தலைவர் இருந்தார். அவருக்கு உற்ற உந்து சக்தியாகத்தான் ஜானகி அம்மா இருந்தார்.
புரட்சித் தலைவருக்கு பொருத்தமான மனைவியாக அவருடைய புகழுக்கு புகழ் சேர்ப்பவராகத் தான் ஜானகி அம்மா விளங்கினார்.
இந்த காலத்திய இளைஞர்கள் பெரும்பாலும் இணையதளம் மூலமாகத்தான் வரலாற்றைத் தெரிந்து கொள்கின்றனர்.
அதனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் இருவரும் முதல்வராக இருந்த சமயம் ஆற்றிய சேவை பணிகள் உள்ளிட்டவற்றை புத்தகங்களாக இணையதளத்தில் பதிவிட்டால், இளைஞர்கள் விரிவாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இவர்கள் போன்ற மாமனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் தெரிய வேண்டும். நல்லவர்கள் பற்றியும் நல்ல விஷயங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளும்போதுதான் இளைஞர் சமுதாயம் இன்னும் நல்ல முறையில் உருவாகும்.
**************************************
அன்னை ஜானகி – 100
நூற்றாண்டுச் சிறப்பு மலர்
வெளியீடு: மெரினா புக்ஸ்
தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601
அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…