காலத்தை உறைய வைக்கும் புகைப்படக் கலை!

ஆகஸ்ட் 19 – உலக புகைப்படக்கலை தினம்

கையில் அள்ளிய நீரை விடவும் வெகு சீக்கிரத்தில் நம்மைக் கடந்து செல்லக் கூடியது காலம். அதற்கு அப்பாற்பட்டவர் என்று இந்த உலகில் எவரும் இல்லை. அதனாலேயே, ‘காலம் பொன் போன்றது’ என்று சொல்கிறோமா? அதுவும் தெரியவில்லை.

உண்மையைச் சொன்னால், பொன்னை விடவும் அதிக மதிப்பு வாய்ந்த, ஒப்பிடவே இயலாத ஒன்று தான் காலம். அந்த காலத்தைக் கைக்குள் அடக்குவதில்தான் மனிதர்களுக்கு எத்தனை ஆசை.

அப்படி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஒன்றன் மீது ஒன்றாய் படிந்த ஆசைகளின் ஓருருவே ‘புகைப்படக் கலை’.

ஏனென்றால், காலத்தை உறையச் செய்து கண்ணால் காணும் வாய்ப்பை அதுவே உருவாக்கியது.

அதுவரை மனதில் மட்டுமே பதிந்து நின்ற தருணங்களுக்கு உரு கொடுத்தது.

காலத்தைச் சிறை பிடித்த புகைப்படங்கள் இந்த உலகில் எத்தனையெத்தனை? இதற்கு முன் காகிதங்களிலும் கண்ணாடிகளிலும் இதர பிற வழிமுறைகளிலும் காலத்தை உயிர்ப்பித்த புகைப்படக்கலை, இன்று மெய்நிகர் தடங்களில் தன் தயாரிப்புகளைச் சேமித்து வைக்கிறது.

அந்தக் கலையின் பயணத்தைத் திரும்பிப் பார்ப்பதில்தான் எவ்வளவு சுகம்?

புகைப்படக்கலை யாருக்கானது?
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களை, செதுக்கல்களைக் குகைகளில் கண்டெடுத்துக் கொண்டிருக்கிறோம். அகழாய்வுகளில் சுடுமண் சிற்பங்களும் இன்ன பிற பயன்பாட்டுப் பொருட்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன.

சில ஆயிரம் ஆண்டுகளாக ஓவியக்கலையில் சில அற்புதக் கலைஞர்கள் பதித்துச் சென்ற தடங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

அவர்களனைவரும் தாங்கள் கண்டவற்றை, அனுபவித்தவற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்பினர்.

கலைகள் அதற்கான வழிப்பொருட்கள் ஆயின. அவற்றுள் ஒன்றான ஓவியக்கலை, உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தது வெகுவாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், அதற்கான நேர விரயமும் பொருட்செலவும் புதிய தேடலை விதைத்தது.

இந்தக் கணத்தை இப்பொழுதே உள்வாங்கி, அதற்கொரு உருவம் தந்தால் என்னவென்ற உந்துதலை அதிகப்படுத்தியது. அப்படிப்பட்ட மனிதர்களில் பிரான்ஸ் நாட்டவரான லூயிஸ் டகேரும் ஒருவர்.

அவரது சகநாட்டவரான ஜோசப் நிசோஃபர் நிப்ஸ், சமகாலத்தில் வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி தால்பாட் என்று பலர், டகேருக்கு முன்னும் பின்னும் புகைப்படக் கலைக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் வெற்றிகரமாகச் சாதித்து, அதனை உலகுக்கு அறிவித்தவர் லூயிஸ் டகேர்.

வெள்ளி முலாம் பூசிய தாமிரத் தகட்டில் அயோடின் படிகங்களை ஆவியாக்கிப் படியச் செய்து, அதனைக் கொண்டு தனது கேமிராவில் படம்பிடித்து, பிறகு அதனை வேதிச் செயல்முறைகளுக்கு உட்படுத்தி புகைப்படமாகத் தந்தார்.

ஒரு புகைப்படம் எடுக்கவும், அதனைப் பதிவாக மாற்றவும் பல மணி நேரங்கள் ஆனதைக் குறைத்தார்.

அதுவே, அவரை ‘டகேரோடைப்’ எனும் செய்முறையின் பிதாமகராக ஆக்கியது.

அப்போது தொலைவில் இருக்கும் பொருட்களைப் படம்பிடிப்பதைக் காட்டிலும், நெருக்கமாக உருவங்களைப் படம்பிடிப்பதிலேயே புகைப்படக்கலை பயன்படுத்தப்பட்டது.

இக்கலையின் மகத்துவம் அறிந்து, இதனை உலகுக்கு இலவசமாக வழங்குவதாகப் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தது. அதன்பிறகு வண்ணப் புகைப்படங்கள் தொடங்கி இன்றைய டிஜிட்டல் படமாக்கம் வரை அசுர முன்னேற்றத்தைக் கடந்து வந்திருக்கிறது புகைப்படக் கலை.

சரி, இந்த புகைப்படக்கலை யாருக்கானது? இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும், நிச்சயமாகத் தங்கள் மனதில் சில நினைவுகளைப் பிம்பங்களாகப் பொதித்து வைக்கும்.

அந்த பிம்பங்களுக்கு உயிர் கொடுத்துப் போற்றி மகிழும் வாய்ப்புகளைத் தருகிறது இக்கலை. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழ்ந்த நகரம் எப்படியிருந்தது என்பதை அறியச் செய்கிறது;

நமது முன்னோர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைமுறைகளைக் கைக்கொண்டிருந்தார்கள் என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது; மாற்றங்களின் அளவை அறியும் கருவியாக விளங்குகிறது.

அனைத்துக்கும் மேலாக, ஒரு கணத்தில் நிறைந்து வழியும் வாழ்வைப் பிரதியெடுத்து இந்த பூமியில் விட்டுச் செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

இக்கலையின் ஆற்றலை உணர்ந்தவர்களே, சிறந்த புகைப்படங்களைத் தந்திருக்கின்றனர்; இன்றும் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெவ்வேறு வகைமைகள்!
முகங்கள், நிலப்பரப்பு, தொழில், அழகு, நாகரிகம், கட்டுமானம், விளம்பரம், குறு பார்வை, பெரும் பார்வை, விளையாட்டு, திருமணம் என்று புகைப்படக்கலையைப் பகுத்துப் பிரித்து, இன்று பல்வேறு பிரிவுகள் முளைத்துவிட்டன.

ஒவ்வொன்றிலும் பல கிளைகள் தோன்றிவிட்டன. ஒவ்வொரு வகையிலும் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களைச் சிறந்தது என்று அடையாளம் காண முடியும். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பம்சங்கள் பொதிந்து கிடக்கும்.

அவற்றைப் பார்க்கவும் ரசிக்கவும் முடிகிறபோது, மனம் இலகுவாகும். ஒரு புத்துணர்வு பிறக்கும். அதுவே, சிறந்த கலைக்கான அறிகுறிகளில் மிக முக்கியமானது.

வெறுமனே நம் கண்ணால் பார்ப்பவற்றை மட்டுமல்லாமல், பார்வைக்குப் புலனாகாதவற்றையும் படமாக்கும் பணியைச் செய்யவல்லது புகைப்படக்கலை.

வானில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்களும், விண்வெளியில் படமாக்கப்படுபவையும் அதை நமக்கு உணர்த்துகின்றன.

கடலுக்கடியில் மட்டுமல்ல, நம் உடலுக்குள் நிகழும் இயக்கத்தையும் பார்த்து உணர முடியுமென்பது மாபெரும் மாயாஜாலம். அதன் பலனாக, பல்வேறு தீர்வுகளைப் பெற்று வருகிறோம்.

கடந்த 200 நூற்றாண்டுகளில் எத்தனையோ வகை கேமிராக்கள் வந்துவிட்டன;

பிலிம் ரோலுக்கு முன் தொடங்கி இன்றைய டிஜிட்டல் பதிவு வரை படமாக்கும் முறைகளும் தொடர்ந்து மாற்றம் கண்டு வருகிறது. ஆனால், அவற்றின் பலன் ஒன்றாகத்தான் இருக்கிறது.

அது, குறிப்பிட்ட தருணத்தைக் கையிலேந்தும் ஒரு புகைப்படக்கலைஞனின் திறமையை முன்னிறுத்துவது. அதனாலேயே, பூமிப்பந்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் அவர்களுக்கு அதீதமான மரியாதையை கிடைக்கச் செய்தது.

இன்றும் கூட, கேமிரா கலைஞர்கள் உடன் நாம் உடனடியாக நட்பு பாராட்டுவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது.

இன்றைய தேதியில் தனித்துவமான கேமிராக்களை தேடிப் பிடித்து வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

அப்படி வாங்குவோரும் கூட, புகைப்படக் கலை மீதான அதீத விருப்பம் கொண்டவர்களாகவோ அல்லது தொழில் முறையில் பலன் பெறுபவர்களாகவோ உள்ளனர்.

அதேநேரத்தில், அதற்கான இடத்தை மொபைல் போன்கள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. வெறுமனே தகவல் பரிமாற்றத்திற்காகக் கண்டறியப்பட்ட ஒரு சாதனம், இன்று படம்பிடிப்பதற்கான கருவியாகவே மக்களால் நோக்கப்படுகிறது.

இதனால், ‘மொபைல் படமாக்கம்’ என்பதும் மிக முக்கியமானதொரு எல்லையைத் தொட்டிருக்கிறது. அதில் புதுப்புது பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

எல்லோரும் புகைப்படக்கலைஞர்களே!

கேமிரா, லென்ஸ்கள், பிரிண்ட் செய்யும் வசதி இருந்தால் போதும்; ஒருகாலத்தில் ஒருவரால் சிறந்த புகைப்படக் கலைஞராகத் திகழ முடியும்.

டிஜிட்டல் படமாக்கத்தைப் பொறுத்தவரை மெமரி கார்டு, பேட்டரி, ட்ரைபேடு போன்ற சாதனங்களோடு நல்லதொரு கணினியும் தேவைப்படுகிறது.

மொபைல்போன் வரவு, அவற்றை மொத்தமாகக் கபளீகரம் செய்துவிட்டது; இன்று, மொபைல் வைத்துள்ள அனைவருமே புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்கள் தாம். இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஆனால், ஒரு விஷயத்தில் இது அதீத கவனம் பெறுகிறது.

ஒரு நிகழ்வு நடைபெறும்போது, அதனை உடனுக்குடன் படம்பிடிப்பதில் மொபைல்போன்கள் உடனடியாக உதவுகின்றன. நிச்சயமாக, ஒரு புகைப்பட அல்லது வீடியோ கேமிராவை விடவும் அது உடனடியானதாக இருக்கும்.

அதனால், வாழ்வின் அபார கணத்தைச் சிறை பிடிக்கும் அத்தனை தகுதிகளும் கொண்டதாக மாறி வருகிறது. அதற்கேற்ப, அவ்வாறு படமாக்கும் தன்மையிலும் புதுப்புது முன்னேற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

சமூகவலைதளங்களில் சுடச்சுடப் பதிவேற்றி ‘லைக்’, ‘ஷேர்’ செய்யவும், அதன் வழியே ‘சப்ஸ்கிரைஃபர்’களை அள்ளவும் மொபைல் போன் ஒரு மூலமாக விளங்குகிறது. எதிர்காலத்தில் இதைவிடவும் சிறந்ததொரு வழி கண்டறியப்படலாம்; அது தன் அரசாட்சியைத் தொடங்கலாம்.

எத்தனை வளர்ச்சி கண்டாலும், தொடக்கம் என்பது எப்போதும் முக்கியமானது.

அந்த வகையில், பிரான்ஸ் அரசாங்கம் புகைப்படக் கலையை இந்த உலகுக்கு அர்ப்பணித்த நாளான ஆகஸ்ட் 19ஆம் தேதியானது ‘உலக புகைப்படக்கலை தினம்’ ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

படம் பிடிப்பதற்கான சாதனங்களும் வழிமுறைகளும் மாறினாலும், புகைப்படக்கலையின் அடிப்படை என்றுமே மாறுவதில்லை.

அதனால், நமக்குத் தேவையான உபகரணங்களோடு பொறுமையையும் காத்திருப்பையும் கவனத்தையும் கைக்கொண்டால் போதும்; இந்த உலகின் ஆகச்சிறந்த புகைப்படங்களை உருவாக்கலாம். வாருங்கள், அந்தச் செயல்முறையில் இறங்கி உலக புகைப்படக்கலை தினத்தைக் கொண்டாடுவோம்!

– உதய் பாடகலிங்கம்

You might also like