1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ‘களத்தூர் கண்ணம்மா‘ படம் ரிலீஸ் ஆனது.
தனது 6 வயதில் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் அறிமுகம் ஆனார்.
ஆம். உலகநாயகன் கமல் சினிமாவில் நுழைந்து 64 ஆண்டுகள் ஆகிறது.
கமல்ஹாசனின் சினிமா வரலாற்றை விவரித்தால் தமிழக சினிமாவின் பாதி சரித்திரம் அதில் அடங்கிவிடும்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி ரஜினி, பிரபு வரை இணைந்து நடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே.
இது, கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து அலசும் கட்டுரை என்பதால், அவரது நீண்ட சினிமா பயணத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கலாம். இப்போது அவரது அரசியல் பிரவேசத்தை மட்டும் அலசலாம்.
திடீரென அரசியலுக்கு வந்தவர்
கமலுக்கு, சினிமாவில் மிகவும் ஜுனியர்களான டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ், கார்த்திக், சரத்குமார், சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் அரசியலுக்கு வந்த சமயத்தில் கமலுக்கு அரசியல் ஆசை இல்லை.
விஜய்காந்த் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகத்தில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்தபோதும், கமல் அரசியல் பேசவில்லை.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்னபோது, பெரிதாக எந்த வினையும் ஆற்றாத கமல்ஹாசன் திடுதிப்பென்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடந்த விழாவில் கட்சி ஆரம்பித்துக் கொடியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காணொளிக் காட்சி மூலம் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் ”நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று பதிவிட்டார்.
அதன் பின் நடந்தது என்ன?
’’அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறோம். ஏகப்பட்ட வெள்ளி விழாப் படங்களை கொடுத்துள்ளோம். ரஜினி அரசியலுக்கு வரவில்லை. கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகளும் இல்லை. தமிழக மக்களுக்கு நாம் தான் இனிமேல் விடிவெள்ளி. ஆபத்பாந்தவன். அனாதை ரட்ஷகன். அவர்களுக்கும் என்னை விட்டால் வேறு ஆள் இல்லை’’ என நீண்ட, நெடிய கனவு கண்டிருப்பார் போலும்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.
ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை. மொத்தமாக 3.72 சதவீத வாக்குகள், அவரது கட்சிக்குக் கிடைத்தது. எனினும், அவரது கட்சி நகர்ப்புறங்களில் ஓரளவு வாக்குகள் வாங்கி இருந்தது.
கமலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் இறங்கிய விஜயகாந்தின் தேமுதிக 10 சதவீத வாக்குகளை அப்போது அள்ளி இருந்தது.
3 சொச்சம் சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த சமயத்திலேயே, கமல் தனது பலத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
பக்கத்தில் ஆள்-அம்பு-சேனைகள் இல்லாததால் சரியான, வழிகாட்டுதல் இல்லாமல் போயிற்று.
2021 ஆம் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அவர், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
மீண்டும் மக்களவைத் தேர்தல் முடிவுகளையே எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆம். ஒரு தொகுதியிலும் இந்தக் கூட்டணி ஜெயிக்கவில்லை.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மட்டுமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாக்கு சதவீதம் 2.6 % ஆக சரிந்தது.
தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை வாங்கி, இரு கழகங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது கட்சியாக உயர்ந்தது.
தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்ததால் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணைந்தனர்.
திரைப்படம், டிவி நிகழ்ச்சிகள் என கமலும், தொழிலில் பிஸியானார்.
இதனால் மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடு குறைந்தது.
புதிய கணக்கு
தனித்து போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம் என்ற முடிவுக்கு வந்த கமல்ஹாசன், அதன்பின் காங்கிரசோடு நெருக்கமானார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு பிரசாரமும் செய்தார். இளங்கோவன் வென்றார்.
இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கமல்ஹாசன் போட்டியிடுவாரா? என தெரியவில்லை.
ஏனென்றால் அவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ளன. எல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள்.
’இந்தியன் -2’ இது அவரது 223 வது படம். இந்தியன்-2 வை முடித்து விட்டு ‘கல்கி 2898’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க அவர் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும், இந்த விஞ்ஞானப் படத்தில் கமலுக்கு வில்லன் வேடம்.
இதன் பின், எச்.வினோத், மணிரத்னம், பா.ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் தலா ஒரு படம் என கமல்ஹாசன் கால்ஷீட் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’.
எம்.பி. தேர்தலில் போட்டி, பிரச்சாரம் என உள்ளே புகுந்தால் சுலபமாக வெளியே வரமுடியாது என்பதை கட்சி ஆரம்பித்த, கடந்த 6 ஆண்டுகளில் அவர் புரிந்து கொண்டுள்ளார்.
“சட்டசபைத் தேர்தலே கமலின் இலக்கு. மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார்” என்றே மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
ராகுல் காந்தியும், ஸ்டாலினும் கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தே மக்களவைத் தேர்தலில் கமலில் அரசியல் நடவடிக்கைகள் அமையும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து.
– பி.எம்.எம்.