மனம்… பல மர்ம முடிச்சுகளிடம் சிக்கிக்கொண்ட ஒரு மந்திரம். பல செயல்களைப் புரிய நம்மை தயார்படுத்தும் எந்திரம். அடித்தவுடன் அனிச்சை செயல்போல நம்மை எழுப்பும் அலாரம். நாம் செய்வது சரியா? தவறா? என அறுதியிட்டுக் காட்டும் துலாபாரம்.
கட்டுப்பாடு காக்க, மனதோடு புரியும் போரில், பல சமயம் நாம் கட்டுப்பாடு இழந்து விடுகிறோம். மனம் வென்று விடுகிறது. மனிதனைக் கொன்று விடுகிறது.
ஆனால், மனதை அமைதியின் பாதையில் அணிவகுக்க வைப்பது கீதங்கள். அவை, மனதை புனிதமாக்கும் வேதங்கள்.
இதனை தன் குரலால் பிறரது மனதிற்குள் பயணித்த எத்தனையோ பாடகிகள் உள்ளனர்.
அவர்களில், இவருக்கு தேவதையின் குரல். நிசப்தம், நெஞ்சுயர்த்தி நிமிர்ந்து நிற்கும் இரவுப் பொழுதுகளில், இவரது இனிய பாடல்கள் பவனி வரும்போது இதயம் குளிரும்.
குளிரும் இதயத்திற்கு அவர் பாடும் பாடல் வரிகளின் உச்சரிப்பே கதகதப்பு ஏற்றும்.
இந்த மந்திரக் குரலுக்கு மயங்காதவர்கள், திரையிசைப் பாடல்கள் மீதும் பெரிய அளவில் ஈர்ப்பில்லாதவர்களாகத் தான் இருப்பார்கள்.
இந்த இனிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்தான் ஜிக்கி (Pillavalu Gajapthi Krishnaveni).
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் சுமார் 10 ஆயிரம் பாடல்கள் பாடி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனதாக்கிக் கொண்டவர்.
தெலுங்கு குடும்பத்தில், சென்னையில் பிறந்தது இந்த பாட்டுப்பறவை. பின்னர் ஜிக்கியின் குடும்பம் திருப்பதி அருகே சந்திரகிரிக்கு இடம் பெயர்ந்தது.
உலகம் ஒரு சக்கரம் என்பதை நிரூபிக்கும் வகையில், ஜிக்கியின் குடும்பம் வாழ்வாதாரம் தேடி மீண்டும் சென்னையிலேயே வாசம் செய்ய இடப்பெயர்ச்சியை மேற்கொண்டது.
கன்னட மேடை நாடகங்களை தயாரித்து, திரைப்படங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய குப்பி வீரண்ணாவிடம் (Gubbi Veeranna) இசைமயமைப்பாளராக பணியாற்றிய தேவராஜு நாயுடு, ஜிக்கியின் தாய்மாமன் ஆவார்.
இவர்தான் திரையிசை உலகை, ஜிக்கிக்கு அறிமுகப்படுத்திய வழிகாட்டி. குழந்தை பருவத்திலிருந்தே இசையை தனது மனதோடு இசைய வைத்த ஜிக்கி, குழந்தைப் பருவத்திலேயே மேடைகளில் பாடி, திரையுலகில் நுழைந்தார்.
பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமானார் ஜிக்கி.
11 வயதில் திரையிசை மேதை எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில், ஞானசௌந்தரி படத்தில், ‘அருள் தரும் தேவமாதாவே, ஆதியே இன்ப ஜோதியே’ என்ற பாடலில் ஒலித்த ஜிக்கியின் குரல், ரசிகர்களுக்குக் கிடைத்த ஜாக்பாட் பரிசு.
ஜிக்கியின் 13-வது வயதில், அவரது ஜாலக்குரலை அறிந்துகொண்ட மற்றொரு திரையிசை மேதையான ஜி. ராமநாதன், மந்திரிகுமாரி என்ற படத்தில், வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே என்ற இரண்டு பாடல்களை வழங்கினார். பாடல்கள் சூபர்ஹிட்.
1952-ம் ஆண்டு திரையிசை திலகம் கே.வி.மகாதேவன் குமாரி என்ற படத்தில் ஜிக்கிக்கு பாட வாய்ப்பளித்தார்.
அந்தப் படத்தில்தான் தனது வருங்கால கணவர் ஏ.எம். ராஜாவுடன் குரலால் இணைந்தார் குரலழகி ஜிக்கி.
பின்னர், வாழ்க்கையில் இணைந்த இந்த தம்பதி, நூற்றுக்கணக்கான அருமையான பாடல்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ, பச்சைக் கிளி பாடுது, துள்ளாத மனமும் துள்ளும், ஊரெங்கும் தேடினேன், யாரடீ நீ மோகினி, கண்ணும் கண்ணும் கலந்து, மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள், செந்தாமரையே செந்தேன் இதழே உள்ளிட்ட பாடல்கள் ஜிக்கியின் காலம் கடந்தும் பேசும். 60 வயதான பின்னும் ஜிக்கியின் குரலினிமையை இசைஞானி பயன்படுத்திக் கொண்டார்.
நினைத்தது யாரோ நீதானே, வண்ண வண்ண சொல்லெடுத்து பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
திரையிசையில் ஒரு நீண்ட அத்தியாயத்தை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் எழுதி முடித்த ஜிக்கி, உலவும் தென்றல் காற்றாக உலா வந்தவர்.
மார்பகப் புற்றுநோய், உயிராய் நேசித்த உற்ற துணையான கணவர் ஏ.எம். ராஜாவின் இழப்பு, தனிமை – இவையெல்லாம் ஜிக்கியின் ஆயுளை தவணை முறையில் பிரித்து எடுத்துக் கொண்டன.
ஜிக்கி இயற்கை எய்தியபோது, அவருக்கு வயது 68.
ஆனால், எந்தக் காலத்திலும் ரசிக்குமாறு அவர் பாடல்களுக்கு வயது வரம்பில் தளர்வை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
காலம் கடந்தும் ஜிக்கியின் ஜீவன், அவரது பாடல்களில் வாழ்ந்தகொண்டே இருக்கும்.
(பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜிக்கியின் நினைவு நாள் (ஆகஸ்ட் 16, 2004) இன்று)
✍️ லாரன்ஸ் விஜயன்