உலகப் பழங்குடியினர் தினம் 2023 வரலாறும், பின்னணியும்!
உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது.
ஆதிக்குடி, பூர்வ குடி, பழங்குடி, தொல்குடி, முதுகுடி என பல வகைகளில் அறியப்படும் பழங்குடியினரின் சிறப்புகளை போற்றவே சர்வதேச பங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாடு உருவான கதையும் அதன் பழங்குடிகளின் ரத்தத்தை கொண்டு எழுதப்பட்டுள்ளது.
செவ்விந்தியர்களை அழித்து உருவான அமெரிக்கா, அமேசான் பழங்குடியின அழிப்பு, ஆப்ரிக்க பழங்குடியின அழிப்பு என உலக வரலாறே பழங்குடியின அழிப்பில் தான் துவங்கியது என்று சொன்னால் மிகையாகாது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலை மீதும், காடுகளுக்குள்ளும், இனக்குழுக்களாகவும் வாழ்ந்த பழங்குடியினரிடம் சென்று இனி இந்த மலையும், காடும், மண்ணும் உங்களுக்கு சொந்தமில்லை.
நீங்கள் மிருகங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள், இயற்கையை காயப்படுத்துகிறீர்கள்.
அதனால் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று யாரவது சொல்லியிருந்தால் ஈட்டியை எடுத்தே சொருகியிருப்பார்கள் அல்லது சிரித்து விட்டு குடிலுக்கு திரும்பியிருப்பார்கள்.
ஆனால், இன்று இதே வாசகங்களை சொல்லி பூர்வீக குடிகளை துரத்தி விட்டு அதே காடுகளை சூறையாடி கொண்டிருக்கிறது நாகரிக சமூகம்.
மனிதன் தோன்றிய பூர்வகுடி சமூகத்தின் எஞ்சிய மக்கள் தொகை உலகம் முழுவதும் வெறும் 370 மில்லியன் தானாம்.
காடுகளை விட்டு விரட்டப்படும், வலுக்கட்டாயமாக மறுகுடியமர்வு செய்யப்படும், வாழ்வாதாரத்தை தேடி சென்றும் என பழங்குடியினர் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
இந்திய பழங்குடிகள்
இந்தியாவில் தற்போதைய கணக்கெடுப்பின்படி 700க்கும் அதிகமான பழங்குடிகள் இன்னும் அவர்களின் இயல்பில் வாழ்ந்து வருகிறார்களாம்.
அதிலும் தமிழ்நாட்டில், இருளர், காட்டுநாயக்கர், தோடர், மலைவேடர், பொட்டக் குறும்பர், கோத்தர், கசவர், முதுவர், காடர், குறவர் உள்ளிட்ட 30க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பலரும் கொஞ்சம் பொது நீரோட்டத்தில் கலந்து விட்டாலும் அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை இன்னும் அவர்கள் மாற்றி கொள்ளவில்லை.
பழங்குடியினர் பாதுகாப்பு
பழங்குடியினரை காப்பது என்பது ஒரு பெரும் வரலாற்றை, மனித சமூகத்தின் ஆதியை காப்பதன் பொருள்.
பழங்குடிகளின் மொழிதான் மூத்த மொழி, அவர்களின் பண்பாடும், கலாச்சாரமும் தான் முதல் வந்தவை.
இதில் பல சுத்தமாக வழக்கொழிந்து விட்டன.
எஞ்சியுள்ள 700க்கும் குறைவான மொழிகள் மட்டுமே தற்போது இந்தியாவில் அழிவின் விளிம்பில் தத்தளித்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எப்படி மிருகங்கள் காடுகளின் உயிர் சுழற்சியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனவோ அப்படியே தான் பழங்குடியின மக்களும்.
எனவே, அவர்களை தொந்தரவு செய்யாமல், அவர்களின் வாழ்வாதரத்தை அழிக்காமல், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
உலகப் பழங்குடியினர் தின வரலாறு
அத்தகைய பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் 1994ம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலக பழங்குடியினர் தினம் ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகப் பழங்குடியினர் தினம் 2023
ஒவ்வொரு ஆண்டும் உலக பழங்குடியினர் தினம் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு ‘சுயநிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடி இளைஞர்கள்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி பழங்குடி இளைஞர்களுக்கான முன்னேற்றம் மற்றும் சந்ததிகளுக்கு இடையேயான இடைவெளியை நீக்குவது, நீதிக்காக அணி திரள்வது உள்ளிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
– சுபாஷ் சந்திர போஸ்
- நன்றி சமயம் இதழ்