மஞ்சள் சினிமாஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.
மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி அம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஜஸ்டின் பிரபு பேசும்போது, “யதார்த்தமான ஒருவரின் வாழ்வியல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது.
தங்களது சொந்த வாழ்க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்கள் ஆக்குகிறது என்கிற விதமாக இதன் கதை உருவாகியுள்ளது. எளிய மக்களில் இருந்து பெரிய மக்கள் வரை சார்ந்ததாக இந்த கதை இருக்கும்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உந்துதல் அளிக்கும் ஒரு படமாக இருக்கும். ஒரு நல்ல சமூக கருத்து இந்தப் படத்தில் இருக்கிறது.
படம் பார்க்கும் அனைவராலும் இந்த கதையுடன் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.
ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது எப்படி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள், ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது,
பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார்,
நாயகியின் முறைப்பையனாக வரும் நாயகன் அவளுக்கு எப்படி உறுதுணையாக நிற்கிறார், அவள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.
நான் சாதாரண ஒரு கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறேன்.
அதனால் எனது கதைகள் எல்லாமே சமூக பார்வையுடன் தான் இருக்கும். சமூகத்திற்கு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தான் படங்கள் இயக்குவேன்” என்றார்.