எதிலும் வித்தியாசப்பட்டிருந்த நடிகர் சந்திரபாபு!

கொழும்பு நகரில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நடிகர் சந்திரபாபு, தனது குடும்பத்தினருடன் 1943 ஆம் ஆண்டு இளைஞர் சந்திரபாபுவாக ஏராளமான சினிமா கனவுகளுடன் சென்னை நகரில் கால் பதித்தார்.

தனது தந்தையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரும், தினமணியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவருமான எழுத்தாளர் புதுமைபித்தனிடம் சென்றார் சந்திரபாபு. அவர் மூலமாக கலைவாணி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தில் நடிகராக சேர்ந்தார்.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இயல்புடைய சந்திரபாபு, ஏதோ ஒரு விஷயத்தில் தனது கருத்தை அழுத்தந்திருத்தமாக கூற, சந்திரபாபு யாரையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஜெமினி ஸ்டூடியோ தான் அவரது கடைசி நம்பிக்கையாக இருந்தது.

அங்கேயும் தோல்வி காண, ஒரு நாள் ஸ்டூடியோ உள்ளேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் நடிகர் சந்திரபாபு சுருண்டு மயங்கி விழுந்திருந்தார்.

விஷம் அருந்தியிருந்த சந்திரபாபுவை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமானார்.

சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விஷம் அருந்திய சந்திரபாபுவிற்கு, 1947 ஆம் ஆண்டு அம்பிகா பிலிம்ஸ் தயாரித்து, மணிக்கொடி எழுத்தாளர் பி எஸ் ராமையாவின் கதை, வசனம், இயக்கத்தில் தீபாவளி திருநாளில் வெளியான “தன அமராவதி” திரைப்படம் தான் தனது உயிரை விட்டாவது பெற நினைத்த அவரது முதல் பட வாய்ப்பு.

அதன் பிறகு இயக்குநர் பி ஆர் பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் வெளி வந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” என்ற முழுநீல நகைச்சுவைப் படத்தில் நடிக்கும் வாய்ப்போடு பின்னணிப் பாடும் வாய்ப்பும் கிடைத்து.

தனது சொந்தக் குரலில் “ஜாலி லைஃப் ஜாலி லைஃப்” என்ற பாடலையும் பாடியிருந்தார்.

இதன்பின் அன்றைய முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அனைவரின் படங்களிலும் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

இவரது நகைச்சுவை நடிப்பிற்காகவே படங்கள் ஓடிய காலமும் உண்டு. “தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

இவ்வாறு பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு தலைசிறந்த கலைஞன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதோடு மதுவையும் அருந்தியதால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு , 1974 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் தனது 46 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

சந்திரபாபு குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்:

1957 ஆம் ஆண்டு முதல் “சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்” சார்பில் ஆண்டுதோறும் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் நகைச்சுவை நடிகருக்கான முதல் விருதைப் பெற்றவர் நடிகர் சந்திரபாபு. “மணமகன் தேவை” திரைப்படத்திற்காக. 

பெர்ப்யூம் மீது அதிக காதல் கொண்டவர் நடிகர் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த பெர்ப்யூம் சேனல் 5. 

தொலைபேசி வாயிலாக இவருக்கு அழைப்பு வந்தாலோ, அல்லது இவர் யாரையாவது தொலைபேசி மூலம் அழைத்தாலோ ஹலோ என்று தொடங்காமல் சந்திரபாபு என்று தனது பெயரை ஒரு ரசனையோடு கூறி உரையாடலைத் தொடங்குவது இவரது வழக்கம்.

“யார்ட்லிங்” எனும் மேலை நாட்டு பாடும் முறையை ஹிந்தியில், நடிகரும் பின்னணிப் பாடகருமான கிஷோர் குமார் அவ்வப்போது தனது பாடல்களில் பயன்படுத்தி வந்தார்.

தமிழ்ப் பாடல்களில் இந்த யார்ட்லிங் முறையைக் கொண்டு வந்த பெருமை நடிகர் சந்திரபாபுவையே சாரும்.

சந்திரபாபு கார் ஓட்டுவதில் கூட பிறரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருந்தார். தனது பியட் காரை அவ்வப்போது தனது முழங்கைகளாலே ஸ்டியரிங்கைப் பிடித்து, வளைத்து, திருப்பி ஓட்டுவது பார்ப்போரை பிரம்மிக்கச் செய்யும் வண்ணம் இருக்கும்.

யாரையும் சார் என்று அழைக்கும் வழக்கம் நடிகர் சந்திரபாபுவிடம் இருந்ததில்லை. அந்தஸ்தில் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களது பெயர்களுக்கு முன்னால் மிஸ்டர், மிஸ், மிஸஸ் என சேர்த்து அழைப்பதே அவரது வழக்கமாக இருந்தது.

அந்தக் காலத்தில் கேசவப் பெருமாள்புரம் என்றிருந்த, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு ஒன்று கட்டினார் நடிகர் சந்திரபாபு.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரிலேயே செல்லும்படி கட்டியிருந்தார்.

1958 ஆம் ஆண்டு நடிகர் சந்திரபாபுவிற்கு “நடிகமணி” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் இப்பட்டத்தை அவருக்கு அளித்தார்.

நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை தமிழ் சினிமா உலகிற்கு கொண்டுவந்த பெருமை இவருக்குண்டு.

தன்னைப் பார்த்து பிறர் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கத்திய பாணியில், புதிய நாகரீகத்தில் உடை அணிவது இவரது வழக்கம்.

ஷூட்டிங்கின் போது பச்சைக் கேரட் மற்றும் வெள்ளரித் துண்டுகளை தட்டில் வைத்து சாப்பிடும் வழக்கம் நடிகர் சந்திரபாபுவிடம் இருந்தது.

ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோகப் பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபுவின் பாடல்கள் என்றால் அது மிகையல்ல.

என்னைப் புரிந்து கொண்டவர்கள், முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஏன், என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாக புரிந்து கொண்டதில்லை என்று தான் சொல்லுவேன்.

எனவே, மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அதேசமயம் சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாக இருக்கிறது. என்று அடிக்கடி கூறுவார் நடிகர் சந்திரபாபு.

கே.பாலாஜி தயாரிப்பில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “ராஜா”.

இப்படத்தில் நடிகர் சந்திரபாபு 3 வேடங்களில் நடித்திருப்பார்.

நடிகர் சந்திரபாபு நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் கே.பாலாஜி தயாரித்து, நடிகர் சிவாஜி கணேசன் நடித்த “நீதி”. வெளியான ஆண்டு 1972

நடிகர் சந்திரபாபுவும், நடிகை மனோரமாவும் இணைந்து நடித்து முதல் படம் “போலீஸ்காரன் மகள்”. படத்தை இயக்கியவர் இயக்குநர் ஸ்ரீதர்.

  • நன்றி : தினமலர்
You might also like