தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

பாலிவுட் திரையுலகில் படர்ந்த தென்றலாய், இன்பக் குரலால் இந்திய மக்களின் இதயங்களை வருடிய வசந்தமாய், உணர்வுகளின் உரசலை, குரலின் மொழியால் உணர்த்தியவரும், 30 ஆண்டு காலத்துக்கு மேலாக பாலிவுட்டில் பாடிக்கழித்தவர் கிஷோர்குமார்…

பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என்ற பன்முக படைப்பாளி கிஷோர்…

மத்தியப் பிரதேச மாநிலம் கந்தவா மாவட்டத்தில் பெங்காலி பிராமண குடும்பத்தில் பிறந்த கிஷோர்குமாரின் இயற்பெயர் அபாஸ்குமார் கங்குலி…
அசோக்குமார், அனுப்குமார் என்ற இரண்டு மூத்த சகோதரர்கள், மற்றும் சதிதேவி என்ற சகோதரியுடனும் பிறந்த கிஷோர், குழந்தை பருவத்தில் இருந்தபோது அவருடைய மூத்த சகோதரர் அசோக்குமார் பாலிவுட் நடிகராக பவனி வந்தார்…

அனுப்குமாரும் தன்னை பாலிவுட் திரையுலகுக்கு அர்ப்பணித்து கொண்டார்… இளமைக் காலத்தை தனது சகோதரர்களுடன் கழித்த கிஷோர்குமாருக்கு திரைப்படம் மற்றும் இசைத்துறையில் அதிக ஈடுபாடு வந்தது…

நடிகரும், பாடகராகவும் விளங்கிய புகழ்பெற்ற குந்தன்லால் சேய்கலை மானசீக குருவாக மனதில் ஏந்திக்கொண்ட கிஷோர்குமார், அவரது பாணியில் இசைப் பயணத்தில் அகரம் தொடங்கினார்…

அசோக்குமார், பாலிவுட் திரையுலகில் வைரமாக ஜொலிக்க தொடங்கியபோது, அவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது… தனது சகோதரர் பணிபுரிந்த மும்பை டாக்கிஸில் கோரஸ் பாடகராக தனது இசை வாழ்க்கையை கிஷோர் தொடங்கினார்…

1948ம் ஆண்டு ஜித்தி என்ற திரைப்படத்தில் ‘மர்னே கீ துவாயேன்’ என்ற பாடல்தான் கிஷோர் பாடிய முதல் திரைப்படம்… அதன் பிறகு எத்தனை எத்தனையோ பாடல்கள் கிஷோர்குமாரை ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர வைத்தன…

அந்தோலன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தாலும், புகழ் பெற்ற பாடகனாக வேண்டும் என்பதே கிஷோரின் குறிக்கோளாக இருந்தது… அந்த குறிக்கோள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது…

பல்லாயிரக்கணக்கான பாடல்கள்… அவையெல்லாம் உணர்ச்சிகளுடனான ஊடல்கள்… ஊடலுக்குப் பிறகு கூடல்தானே…

எஸ்.டி.பர்மன், கிஷோர் கூட்டணி பாலிவுட் திரையுலகின் வெற்றி கூட்டணியாக வலம் வந்தது… ஆராதனா, Jewel Thief, கட்டி பதங், பேயிங் கெஸ்ட், பிரேம் புஜாரி, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா உள்ளிட்ட படங்கள் கிஷோர்குமாரின் பாடல்களால் வெற்றி மாலை சூடின…

ராஜேஷ்கன்னா, அமிதாபச்சன், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, ஜிஜேந்திரா, தேவ் ஆனந்த் தொடங்கி, கோவிந்தா வரை கிஷோரின் குரலுக்கு வாயசைக்காத நடிகர்களே இல்லை…

புகழின் உச்சியில் இருந்த கிஷோர் மீது புழுதியாய் படிந்தது அவரை பற்றிய விமர்சனங்கள்… காசு விஷயத்தில் கறார் பேர்வழி…

பாடல் பதிவாகும் முன்பே பணம் தந்தாக வேண்டும்… பணம் வரவில்லை என்றால் அவர் வாயிலிருந்து பாடல் வெளிவராது என்பது போன்ற அவப்பெயர்கள் இருந்தாலும், 1970களில் கிஷோரின் குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை…

வானொலி நிலையங்கள் கிஷோரின் குரலை கடவுளின் பெயரைப்போல தினந்தோறும் உச்சரித்து கொண்டே இருந்தன…

ஆராதனா படத்தில் ரூப் தேரா மஸ்தானா பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான ஃபிலிம்பேர் விருது 1970ம் ஆண்டு கிஷோருக்கு வழங்கப்பட்டது…

ருமாகோஷ், மதுபாலா, யோகிதாபாலி, லீனாசந்திரா வர்க்கர் என கிஷோருக்கு நான்கு மனைவிகள்…

புகழின் உச்சியில் இருந்த கிஷோரின் கடைசிக்காலம் மகிழ்ச்சியாக இல்லை… உறவுகள் இல்லாமல், நண்பர்களை நாடாமல் அவரது இறுதிக்காலம் தனிமையில் துவண்டது…

தன் வீட்டு தோட்டத்தில் இருந்த மரங்கள்தான் தனக்கு நண்பர்கள் என, 1985ம் ஆண்டு இல்லஸ்டேடட் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் ப்ரதீஷ் நந்தீக்கு கிஷோர்குமார் அளித்த பேட்டி எவ்வளவு வேதனையானது என்பதை உணர முடிகிறது…

புகழின் உச்சியில் கம்பீரமாய் நின்ற கிஷோர், புழுதி படிந்த தூசியிலும் நின்று துவண்டு போயிருக்கிறார்…

ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், கிஷோரின் குரல் வளம் அவரை காலமெல்லாம் ஆராதிக்க வைக்கும்…

ரசிகர்கள் விமர்சனங்களை மறந்துவிடுவார்கள்… ரசிப்புத்தன்மையை மட்டும் ஒருபோதும் இழக்கமாட்டார்கள்…

‘கிஷோர் தா’ என அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்ட கிஷோர்குமாரை அவரது எந்த ரசிகனோ, ரசிகையோ ஒருபோதும் மறக்கமாட்டார்கள்…

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 04, 1929) இன்று…

– லாரன்ஸ் விஜயன்

You might also like