தோல்வியடைந்த ஜெமினி நிறுவனத்தின் கடைசி படம்!

ஜெமினி நிறுவனம் சார்பில் 1975ம் ஆண்டு வெளி வந்த படம் ’எல்லோரும் நல்லவரே.’

கன்னடத்தில் வெளி வந்த படத்தின் ரீமேக். இது தமிழ் சினிமாவின் பிரமாண்ட நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பு படமாகும்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த கதை தயாரானது.

தமிழ் படத்தில் முத்துராமன், மஞ்சுளா, ஜெயந்தி, மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், கன்னட நடிகர் லோகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தை எஸ்.எஸ். பாலன் அவர்கள் இயக்கியிருந்தார்.

ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை உள்ளடக்கி படம் எடுக்கப்பட்டிருந்தது. அதற்காக கல்சாபுரா என்கிற ஒரு சிறு கிராமத்தில் புதிதாக வீடுகள் கட்டி ஒரு ஊரே உருவாக்கப்பட்டிருந்தது.

கிராம மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவர்களிடமிருந்து சொத்துக்களை புடுங்குவதற்காக கடன் பத்திரங்களில் மிரட்டி கையெழுத்து வாங்கும் பணத்தாசை பிடித்த ஒரு மனிதர் தான் படத்தின் மைய கதாபாத்திரம்.

இந்த பாத்திரத்தை மேஜர் சுந்தர்ராஜன் ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். இந்த கிராமத்தில் உலா வரும் காதல் ஜோடிகளாக முத்துராமன் – மஞ்சுளா நடித்திருந்தனர்.

பெரிய மழை பெய்து, ஏரியின் அணைக்கட்டு உடைந்து ஊரே வெள்ளக்காடாக திகழும் காட்சி படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரின் திறமையில் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும்.

ஜெமினி நிறுவனத்தின் கடைசி படமான இந்த வண்ணப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் நிறுவனமே மூடும் சூழ்நிலை ஏற்பட்டது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி தான்.

வி. குமாரின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக அமைந்தன என்பது தான் இந்த படத்தின் விசேஷம்.

டிஎம்எஸ் – பி.சுசீலா இணையில் அமைந்த சிவப்புக்கல்லு மூக்குத்தி, கே.ஜே. யேசுதாஸ் குரலில் பகை கொண்ட உள்ளம், எஸ்.பி.பி. குரலில் ஒலித்த படைத்தானே பிரம்மதேவன் என பாடல்கள் எல்லாம் ஹிட் பாடல்களாக மாறின.

You might also like