‘கருப்புப் புத்தகம்’ நூல் விமர்சனம்
ஊரடங்கு காலத்தில் வாசித்த பல நீண்ட இலக்கியப் படைப்புகளில் கருப்புப் புத்தகம் (Black Book) முற்றிலும் புதுமையான அனுபவத்தை தந்தது.
இங்கு எழுதப்படுகின்ற பல நாவல்கள் சுயசரிதையாக அல்லது குடும்ப கதைகளாக அல்லது ஊரின் கதைகளாக எழுதப்படுகின்றன.
கருப்புப் புத்தகம் நாவல் செறிவான கற்பனை வளத்துடன் அமைந்த படைப்பு என்பது இதன் தனித்தன்மை. ஓரான் பாமுக் படைப்புகளுள் விரிந்த வாசகப் பரப்பில் கொண்டாடப்பட்ட நாவல் இது. My Name is Red பாமுக் அவர்களுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்தது. என்றாலும் அமெரிக்காவில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்டது கருப்புப் புத்தகம்.
ஜி.குப்புசாமி ஓரான் பாமுக் மீது மாபெரும் Obsession கொண்டவராகவும் பாமுக்கின் தமிழ் இதயமாக துடித்துக் கொண்டிருப்பவர் என்ற போதிலும், அவர் அருந்ததி ராயின் படைப்பை மொழிபெயர்ப்பதால், Black Book-ஐ மொழிபெயர்க்கும் வாய்ப்பு எத்திராஜ் அகிலனுக்கு கிடைத்தது. அவரும் அதை மிகவும் செம்மையாக செய்திருக்கிறார்.
கருப்புப் புத்தகம் துப்பறியும் கதை போல அமைந்த நாவல் என்றாலும், இதன் தேடல் வெளிநோக்கியதல்ல. அகம் சார்ந்தது. காலிப், ரூயா, ஜெலால் இந்த மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் கதை, வாசகனை உளவியல் நுண் பகுப்பாய்வு செய்கிறது.
தனி மனிதனோ அல்லது சமூகமோ அதன் உண்மைத் தன்மையிலிருந்து பிறழ்ந்து வேறொன்றாக திரிபடைந்து கொண்டிருப்பதையே எல்லா அத்தியாயங்களும் உள்ளடக்கமாக கொண்டு இயங்குவதால் வாசிப்பு நகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஒரே மையத்தில் அசைவற்று நிலைகொண்டிருப்பது போலவும் ஒரு அதிசயம் நிகழ்ந்தபடியிருக்கிறது.
ரயில் பயணத்தில் நகர்வது சாலையோர மரங்களா அல்லது அமர்ந்திருக்கும் ரயில் பெட்டியா? என்ற பிரமை உண்டாவது போல.
எத்திராஜ் அகிலன் அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கும் இந்த நாவலின் சாரம் இந்திய ஞான மரபை ஒட்டி அமைந்தது.
எண்ணங்களை ஒன்று விடாமல் அழித்தால் இறுதியில் எஞ்சுவது நம் தூய்மையான சுயம் என்னும் புத்தரின் தாத்பரியம் இந்த நாவலின் அடிநாதம்.
‘காலச்சுவடு’ கண்ணன் மொழிபெயர்ப்பாளர்களுக்கு போதுமான கால அவகாசம் தருபவர் என்பதால், காலச்சுவடு மொழிபெயர்ப்பாளர்கள் பதட்டம் இல்லாமல் பணியை செம்மையாகவும் தூய்மையாகவும் உருவாக்குகிறார்கள்.
இந்த நாவலின் எந்த ஒரு அத்தியாயத்தையும் இடையில் புகுந்து வாசித்தால் ஒரு சிறந்த சிறுகதையை வாசித்த அனுபவம் உண்டாகிறது. தொடர்ச்சி இல்லாமலும் வெவ்வேறு அத்தியாயங்களில் உள் நுழைந்து இந்த நாவலை வாசித்துப் பார்க்க முடியும்.
அல்லாதீனின் அங்காடி, பேடி ஊஸ்தாவின் குழந்தைகள், முத்தம், பனிவிழும் மாலைப் பொழுதில் காதல் கதைகள், இருண்ட வாயுச் சுரங்க வாயில், வதனங்களின் புதிர்கள், முகம் பார்க்கும் கண்ணாடி வழியாகச் செல்லும் கதை,
புதிர் ஓவியங்கள், பட்டத்து இளவரசன் கதை ஆகிய அத்தியாயங்களை வாசித்து முடித்ததும் அவற்றை திரும்ப வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலெழுகிறது.
அத்தகைய கலை மேன்மையும் கற்பனைச் செறிவும் கொண்ட அழகிய புனைவுடன் படைக்கப்பட்டிருக்கிறது இந்த கருப்புப் புத்தகம் நாவல்.
எத்திராஜ் அகிலனின் செம்மையான, தூய்மையான மொழிபெயர்ப்பு பணிக்கு வாழ்த்துகள்.
– கே.பி.கூத்தலிங்கம்.