இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் ‘தேவதா’, ‘கைதி எண் 786’ மற்றும் பெடராயுடு போன்ற பிரபலமான திரைப்படங்களை எழுதியுள்ளார்,
தேவி ஸ்ரீ பிரசாத் 1997-ம் ஆண்டில் தனது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில், அவர் மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரணுடன் இணைந்து பணியாற்றினார்.
பின்னர் 1999-ல் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘தேவி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு சினிமா படங்களுக்கு இசையமைத்து வந்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு 2001-ல் வெளிவந்த ‘ஆனந்தம்’ திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தெலுங்கில் தனக்கான முத்திரையை பதித்த தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் ‘இனிது இனிது காதல் இனிது’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
விஜய்யுடன் தேவி ஸ்ரீ பிரசாத் ‘திருப்பாச்சி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தன்னுடைய துள்ளான இசையின் மூலம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தமிழில் திருப்புமுனைகள் கிடைத்தன.
ஹரி இயக்கிய ‘ஆறு’ படத்தில் சூர்யாவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாவது முறையாக இணைந்து இருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி சண்டைக் காட்சிகள் என பரபரப்பான படங்கள் தேவி ஸ்ரீ பிரசாத் இசையால் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறியது.
அவரது பாடல்களும் பின்னணி இசைகளும் படத்தை அதிக பார்வையாளர்களிடம் சென்றடைய உதவியது.
தமிழில் மன்மதன் அம்பு, மழை, மாஸ், மாயாவி, சந்தோஷ் சுப்பிரமணியம், வில்லு, சிங்கம், சிங்கம் 2, உனக்கும் எனக்கும், குட்டி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார்.
காதல், மெல்லிசை, குத்துப் பாடல், உணர்ச்சிகரமான பாடல் என அழகாக இசைகளை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் அவரை அன்போடு ராக்ஸ்டார் டிஎஸ்பி எனவும் அன்போடு அழைக்கின்றனர்.
தமிழை விட தெலுங்கில் அதிக படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
அவரது இசையில் வெளியான ‘புஷ்பா’, ‘தி வாரியர்’ பட பாடல்கள் மிகவும் புகழ்பெற்றது. டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவராக உள்ளார்.