டி.ராஜேந்தர் படங்களின் பாடல் காட்சிகளில் காட்டப்படும் பிரமாண்டம், 80 மற்றும் 90 களில் ரசிகர்களை வாய் பிளக்கச் செய்தது.
கோடிகளை கொட்டி ஒவ்வொரு பாடலுக்கும் பல அரங்குகளை நிர்மானித்திருப்பார்.
ஆனால் அவரது முதல்படமான ’ஒரு தலை ராகம்’ படம் – சிதலமடைந்த ரயில் நிலையம், கிராம சாயலில் உள்ள கல்லூரி, சிற்றாறு, அக்ஹார தெருக்கள் என ஒப்பனை ஏதுமின்றி உருவாகி இருந்தது.
குன்றுமணி அளவில் கூட அதில் அரங்கம் எனப்படும் ஷெட்டிங்ஸ் இருக்காது. நாலைந்து படங்கள் ஹிட் கொடுத்த பிறகே, பிரமாண்டம் பக்கம் போனார் டி.ஆர்.
ஆனால், முதல் படத்திலேயே, பிரமாண்ட இயக்குநர் எனும் அடைமொழியை, தனது பெயருக்கு பின்னால் செருகிக் கொண்டவர் ஷங்கர்.
எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஷங்கர். அதற்கு முன் நாடகக் குழுவில் இருந்தார். நாடகக்குழுவில் அவருக்கு சீனியர் ஓமக்குச்சி நரசிம்மன்.
நடிகராவது கனவாக இருந்ததால், சினிமாவுக்கு வந்தார்.
பவித்ரனின் ஆரம்பகால படங்களின் வெற்றிக்கெல்லாம், அவரது உதவியாளர் ஷங்கரே காரணம் என தெரிந்து கொண்ட கே.டி.குஞ்சுமோன், தான் தயாரிக்கும் படத்தில் அவரை, இயக்குநராக அறிமுகம் செய்ய தீர்மானித்தார்.
நினைத்ததை செய்து முடித்தார்.
அந்தப்படம் தான் – ஜென்டில்மேன்.
ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’. 1993ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் தேதி வெளியானது. ஆம். ஷங்கர், தமிழில் இயக்குநராக அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஓடி விட்டன.
ஜென்டில்மேனில் ஹீரோவாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும்,. அவருக்கு ஜோடியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் ராஜன்.பி.தேவ் நடித்திருந்தார்.
முக்கிய வேடங்களில் சரண்ராஜ், சுபஸ்ரீ, வினித், மனோரமா, நம்பியார், அஜய் ரத்னம் நடித்திருந்தனர்.
கவுண்டமணி – செந்தில் ’காம்பினேஷன்’- படத்துக்கு பெரிய ’பூஸ்ட்’.
‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் – ஷங்கர் கூட்டணி இணைந்த முதல்படம்.
என் வீட்டுத் தோட்டத்தில்…., சிக்கு புக்கு ரயிலே…, பார்க்காதே, பார்க்காதே…. உசிலம்பட்டி பெண்குட்டி…., ஒட்டகத்த கட்டிக்கோ…. ஆகிய ஐந்து பாடல்களும், படத்தின் வியாபாரத்துக்கு உதவியாக இருந்து. அதன்பின் படம் வெள்ளிவிழா கொண்டாட அடித்தளமாக இருந்தது.
பாலகுமாரன் வசனம், படத்தின் இன்னொரு பலம்.
தமிழ் சினிமா எனும் ராஜபாட்டையில், தனது காலடிச் சுவடுகளை அழுத்தமாக பதித்திருக்கும் ’ஜென்டில்மேன்’ உருவாக்கம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை சொல்லியாக வேண்டும்.
முதலில் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமல்ஹாசனைத்தான் அணுகினார் ஷங்கர். அவர் நடிக்க விரும்பவில்லை.
சரத்குமார் நடித்த வசந்தகால பறவைகள், சூரியன் ஆகிய படங்களில், உதவி இயக்குநராக ஷங்கர் பணியாற்றி இருந்தார்.
அவரிடம் கதை சொன்னார் ஷங்கர். சரத்தும் ஓகே சொல்லி விட்டார். பூஜைக்கான அழைப்பிதழும் ரெடி.
சரத்தின் கெட்டநேரமா அல்லது அர்ஜுனின் நல்ல நேரமா என தெரியவில்லை. கடைசி நேரத்தில் சரத்குமார் நடிக்க மறுத்து விட்டார்.
பவித்ரன் இயக்கும் ’ஐ லவ் இந்தியா’ படத்துக்கு பல மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதால், ஷங்கர் படத்தை நிராகரித்தார் சரத்.
துண்டு துக்கடா படங்களில் நடித்துக்கொண்டிருந்த அர்ஜுனை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார் ஷங்கர்.
175 நாட்களை தாண்டி ஓடிய ஜென்டில்மேன், அர்ஜுனுக்கு புதிய பாதையை திறந்தது. சினிமா வாழ்க்கையில் பெரிய பிரேக் கிடைத்தது. அதே நேரத்தில் ஐ லவ் இந்தியா வெளியாகி அட்டர் பிளாப் ஆனது.
சூரியனில் தொட்ட உயரத்தை மீண்டும் எட்ட சரத்துக்கு பல ஆண்டுகள் ஆனது.
ஷங்கர் இயக்கிய காதலனும் வெள்ளிவிழா கண்டதால், அவரது மூன்றாவது படமான இந்தியனுக்கு வலிந்து கால்ஷீட் கொடுத்தார் உலகநாயகன்.
முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி, பின்னர் ஷங்கரின், மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்துக்கொடுக்கும் சூழல் உருவானது. ஒரே நேரத்தில் ஷங்கர் இரண்டு படங்களை இயக்கியதில்லை.
முதன் முறையாக கமல் ஹீரோவாக நடிக்கும் ‘இந்தியன்-2’, தெலுங்கு நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
ஒரே நேரத்தில் அவை வெளியாக உள்ளன.
ஷங்கருக்கு இந்த ஆண்டு இரட்டை பிரசவம்.
வாழ்த்துகள்.
– பி.எம்.எம்