மாமன்னன் பேசும் அரசியலும் குறியீடுகளும்!

– முனைவர் க.செந்தில்ராஜா

தமிழ்த் திரைப்படம் என்றாலே காதல், கல்யாணம், காமடி, பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என்னும் வழக்கமான தன்மைகள் சற்றே மாறி வந்துகொண்டிருக்கின்றன.

வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களும் எளிய மனிதர்களின் வாழ்வியலும் காட்சிப்படுத்தும் வகையில் திரைக்கதைகள் கட்டமைக்கப்படுகின்றன.

அப்படியான ஒரு திரைப்படம் தான் சமீபத்தில் வெளியான மாமன்னன். மாமன்னன் திரைப்படத்தை மறுப்பார்வைக்கு உட்படுத்துகின்ற பொழுது கீழ்க்கண்ட சில விடயங்கள் தென்படுகின்றன.

பெயர் குறியீட்டு அரசியல்:

மாமன்னன் படத்தில் பெயர்களை மையமாக வைத்து பல்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சேலம் மாவட்டத்தை மையமாகக் கொண்ட இந்த படம் அம்மாவட்டத்தின் அரசியல் தொடர்புடைய பல்வேறு ஆளுமைகளின் பெயர்கள் கதாபாத்திரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.

1957, 1962 என இரண்டு முறை சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரத்தினவேல். அவரது பெயர் எதிர்நிலை கதாபாத்திரமான பகத் பாசிலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

அருந்ததிய சமூகத்தின் முன்னோடிகளாக இருந்த மதுரை வீரன், ஒண்டிவீரன் போன்றவர்களின் குறியீடாக நாயகனின் பெயர் அதிவீரன் என்று வைக்கப்பட்டுள்ளது.

கதை நாயகி கீர்த்தி சுரேஷின் பெயர் லீலா என வைக்கப்பட்டுள்ளது.

இது சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரின் குடும்பத்தோடு தொடர்புடைய பெயர்.

மாமன்னனின் ஓட்டு எண்ணிக்கை தள்ளி வைத்தபோது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இழுபறியாக இருந்த நிலையை நினைவூட்டுகிறது.

மாமன்னனின் மனைவி வீராயி எனும் பெயர் வரலாற்றில் தன் கணவனைக் கொன்றவன் தலையைக் கொய்து பழி தீர்த்த வீரப் பெண்மணியின் பெயர்.

மாமன்னனை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் மதி என்பது கூட தற்போது (2021) ராசிபுரம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மதிவேந்தன் என்ற பெயரோடு தொடர்புடையது.

படத்தில் வாக்குச்சாவடி உள்ள தொகுதி எண் 92 காசிபுரம் என்று வருகிறது.  ஆனால் தொகுதி குறியீடு 92 ராசிபுரம். இந்தத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகராக ஆனவர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்னொரு வாக்குச்சாவடி எண் குறிப்பிடப்பட்டுள்ள 88 சேலம் மேற்குத் தொகுதியைக் குறிக்கிறது.

நிற அரசியல்:

மாற்று சினிமாக்களின் மிக முக்கியமானது நிறம். அவை உடை அணிதல் போன்ற காட்சிப் பின்புலம் போன்றவற்றில் குறியீடாகப் பயன்பயன்படுத்தப்படும். அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்தில் சில நிற அரசியலை இயக்குனர் முன்னெடுத்துள்ளார்.

மாமன்னன் போட்டியிடும் கட்சியின் கொடி இரண்டு வண்ணத்தில் திமுகவின் குறியீடாகவும் எதிர்த்து நிற்கும் ரத்தினவேலுவின் கட்சி கொடி மூன்று வண்ணத்தை மையமாகக் கொண்டு அதிமுகவாக மேலோட்டமாக தெரிந்தாலும் பல இடங்களில் பாமகவின் கொடியை நினைவூட்டுவதாகவும் உள்ளது.

மாமன்னனின் கார் சீட் கருப்பு சிவப்பு நிறத்தில் உள்ளது. பெரும்பான்மை திமுக உடன் பிறப்புகளின் வாகனங்களில் இந்த நிறத்தை பார்க்க முடியும்.

திரைப்படத்தின் வலிமிகுந்த எல்லா காட்சிகளும் கருப்பு வெள்ளை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகி லீலா அரசியல் பேசும் இடங்கள் யாவும் கம்யூனிஸ்டின் சிவப்பு நிறம் பின்னணியாகக் காட்டப்பட்டிருக்கும். 

அடிமுறை பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்குள் வரும் சண்டையில் அடிவாங்கிய சிறுவன் கருப்பாகவும் அடித்த சிறுவன் சிவப்பாகவும் இருப்பதும், பின் நாயகனின் வார்த்தையைக் கேட்டு சிவப்பு சிறுவனை கருப்பு சிறுவன் அடிக்க முற்படுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராக காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் பன்றிகள் அனைத்தும் கருப்பு பன்றியாகவும் நாய்கள் பெரும்பான்மை வெள்ளையின் குறியீடாகும் நிற பேதத்தைக் காட்டப்பட்டுள்ளது. பன்றி அமைதியின் குறியீடாகவும் நாய் அதிகார ஏவலின் குறியீடாகவும் குதிரை அதிகாரத்தின் குறியீடாகவும் காட்டப்பட்டுள்ளது.

புத்தகக் குறியீடு:

ஒரு காட்சியில் நாயகி லீலாவின் கையில் ‘கம்யூனிசம்: நேற்று இன்று நாளை’ என்னும் ஜவஹர் நூலும் அதே காட்சியில் நாயகன் அதிவீரன் கையில் ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ என்னும் மாற்கு-வின் நூலும் காட்டப்பட்டிருக்கும்.

ஒரு காட்சியில் நாயகி வாசிக்கும் கவிதையும் நாயகன் நாயகியின் புகைப்படத்தை வைத்திருக்கும் புத்தகமும் கவிஞர் வெய்யிலின் கவிதை நூலான ‘மகிழ்ச்சியான பன்றிக் குட்டி’ என்பது கவனிக்கத்தக்கது.

உருவக் காட்சிகள்:

படத்தின் தொடக்கம் அம்பேத்கரில் தொடங்கி முடிவும் அம்பேத்கரில் இருக்கும். பல்வேறு இடங்களில் பெரியாரும் சில இடங்களில் காந்தியும் காயிதே மில்லத்தும் காட்டப்பட்டிருக்கும்.

படத்தின் இடையிலேயும் பல்வேறு இடத்தில் அம்பேத்கர் படமும் புத்தரின் சிலையும் வந்துவந்து போகும்.

குறிப்பாக மாமன்னனும் அவர் மகனும் உடைந்துபோன இடத்தில் நிதானத்தை கையாளும் மாமன்னனுக்கு பின்னால் புத்தர் சிலையும் சமூக அவலத்தைக் கண்டு கோவப்படும் அதிவீரன் பக்கத்தில் அம்பேத்கர் படமும் காட்டப்பட்டிருக்கும்.

நாயகியைக் காட்டுகின்ற பொழுதெல்லாம் சேகுவாரா போன்ற புரட்சியாளர்களின் படங்கள் காண்பிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

மேற்கோள்கள்:

நீயே ஒளி நீயே வழி – புத்தர்

சமத்துவம் கண்டு சமூக நீதி காப்போம் – அம்பேத்கர்.

கல்வியே மாற்றத்திற்கான பேராயுதம்.

ரத்தினவேலுவின் தந்தை நினைவிடத்தில் எங்கள் இதயத்தில் துயிலும் அரசியல் கம்பீரம் என்றும் பதிவிடப்பட்டிருக்கும்.

அரசியல் பின்புலம்:

அம்பேத்கர் சௌகர் குளத்தில் தொடங்கிய போராட்டம் போலவே கோவில் குளத்திலிருந்து இந்த படத்தின் கதை தொடங்குகிறது.

பின்னோட்டமாக காட்டப்படும் காட்சியில் நாலு பேர், நான்கு சிறுவர்களை கோயிலின் குளத்தில் குளித்ததற்காக கல்லால் அடிப்பதுபோல் காட்டப்பட்டிருக்கும். இது சமூக அவலத்தின் வெளிப்பாடு.

குறிப்பாக அந்த நான்கு பேர் பிராமண, சத்திரிய, வைஷ்ணவ, சூத்திரர் என்பவர்களாகவும் பள்ளர், பறையர், அருந்ததியர், பழங்குடியினர் என்னும் நால்வர் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் உணர முடிகிறது.

மதுரை வீரனுக்கு பன்றி பலியிடுதலும் அதிவீரனுக்கு பன்றியின் மீதான காதலும் நேர்கோடான விடயம்.

மாமன்னனின் தனி வீடு என்பது ஊர் சேரி என்கின்ற பாகுபாட்டை சமூக அவலமாக சுட்டிக்காட்டுகிறது. தொடக்கத்தில் மாமன்னன் வசிக்கும் பகுதியை பன்றிமேடு என்று படத்தின் காட்சிப் பின்புலம் காட்டுகிறது

மாமன்னன், இறப்பு வீட்டில் பட்ட அவமானம் சபாநாயகராக இருந்த தனபால் (2017) பட்ட அவமானத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

சாதிப் பெருமையை முந்தைய படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய விஜயகுமாரை படம் முழுக்க ஒரு வார்த்தைகூட பேச வைக்காமல், கையெடுத்துக் கும்பிட வைத்தது இயக்குனரின் தந்திரம்.

நாயகன் அடங்க மறுப்பவனாகவும் முதல்வர் அறையில்கூட அத்துமீறி நுழைபவனாகவும் எதிரி நிலைகுலைய செய்து இருந்தாலும் திமிரி எழுபவனாகவும் தக்க தருணம் வரும்போது திருப்பி அடிப்பவனாகவும் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ்.

இந்தத் திரைப்படத்தை  உதயநிதி அல்லாமல் வேறு யாரேனும் நடித்திருந்தால் இந்தப் படத்தை ஓடவிடாமல் செய்திருக்க வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வகையான சொல்லாடல் மற்றும் வட்டார வழக்கு உண்டு அதே போல் சேலம் பகுதியில் கொங்கு மொழி சாயல் இருக்கும். அதனைக் கிஞ்சித்தும் படம் முழுக்க பயன்படுத்தவே இல்லை.

இசையில் ஆஸ்கர் நாயகன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் கடந்து மாமன்னன் – வீராயி மற்றும் ரத்தினவேலு அவருடைய மனைவி இவர்களின் காதல் படத்தின் உயிரோட்டமான பகுதி.

தற்போது OTT-யில் படம் வெளியிட்ட பின்பு எதிர்நிலை கதாபாத்திரமாக இருக்கும் ரத்தினவேலுவை கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் இயக்குனர் மாரி செல்வராஜின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

You might also like