பாசில் – கேரள மண் தந்த இயக்குனர். அந்த மண்ணுக்கே உரிய கதையம்சங்களை சுவை பட தொகுத்து, படங்களை தந்தவர்.
கேரளாவில் இன்றும் அதிகம் காணப்படும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, மரத்தால் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீடுகள், அங்கு நிலவும் சகோதர சகோதரி பாசம், அன்புக்கு அடிமையாதல் போன்ற அம்சங்களை கதை களங்களாக வைத்து அழகான படங்களை தந்தவர்
பூவே பூச்சுடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிபேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒருநாள் ஒரு கனவு போன்றவை மட்டுமே இவர் இயக்கத்தில் வந்த தமிழ் படங்கள்.
பூவே பூச்சூடவாவில் பாட்டிக்கும் பேத்திக்கும் இடையிலான பாச போராட்டத்தை அழகுற விளக்கியிருப்பார் அது அந்த காலத்தில் தமிழுக்கு ரொம்ப புதுசு.
நதியாவின் அலட்டல் இல்லாத நடிப்பு பத்மினியின் பக்குவப்பட்ட நடிப்புடன் எண்பதுகளின் பின் பாதியில் வந்த படம் ஒரு புதிய ட்ரெண்ட்டை தோற்றுவித்தது.
கதாநாயகியை வெறும் பொம்மையாக காட்டாமல் அவரை சுற்றி கதை ஓடுவது போல் காட்டி அவருக்கு நடிக்க வாய்ப்பளிக்கும் கதையம்சம் இவரது படங்களில் இருக்கும். இந்த ஆரோக்கியமான கதையமைப்பு பின்னர் சற்று காலம் தமிழிலும் தொடர்ந்தது
(பின்னர் வழக்கமான பாணிக்கு மாறியது வேறு சோக கதை)
கேரளத்தின் எழில் கொஞ்சும் இடங்களை இவர் நல்ல ஒளிப்பதிவுடன் அரங்கேற்றி இருப்பார்.
பொம்மு குட்டி அம்மாவிற்கு படத்தில் குழந்தையை பிரிந்த தாய், இழந்த தாய் இடையே நடக்கும் பாசப்போரட்டம் பற்றி சினிமாத்தனம் இன்றி விளக்கியிருப்பார்.
பூவிழி வாசலிலே ஒரு திரில்லர் மற்றும் தாயை இழந்த குழந்தைக் கதை, அரங்கேற்ற வேளை, வேலையில்லா திண்டாட்டத்தை நகைச்சுவையாக சொன்ன கதை, என கதைகளில் வேறுபாடு காட்டி இருப்பார்.
காதலுக்காக , காதலை மேன்மை படுத்த காதலை விட்டு கொடுக்கும் புதிய கோணத்தை இவர் தன் காதலுக்கு மரியாதையில் வெளிப்படுத்தினார். அது தமிழில் காதல் கதைகளில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.
காதலில் ஆரம்பித்து அரிவாள் வெட்டு, தற்கொலை என ரணகளத்தில் இருந்த கதை களத்தை, விட்டு கொடுத்தும் வெல்லலாம் என்ற புதிய பார்முலாவால் அதிகம் பேசப்பட்ட படம்
இசைக்கு அதிக முக்கியத்துவம் படங்களில் காணப்படும் வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதை, ஒருநாள் ஒரு கனவு ஆகியவை அதற்கு சிறந்த உதாரணங்கள்.
குடும்பம் பற்றிய கதைகள் அதிகம் என்பதால் கவர்ச்சி ஆபாசத்திற்கு இடம் இல்லை வன்முறை காட்சிகளும் கூட ஒரு எல்லையில் இருக்கும்.
தமிழில் பத்து படங்கள், மலையாளத்தில் இருபது படம், தெலுங்கில் ஒரு படம் (கில்லர் – நக்மாவை அறிமுகபடுத்திய படம்) என இவர் இயக்கிய படங்களின் எண்ணிகை 31.
மோகன்லால், பூர்ணிமா ஜெயராம், நதியா, குஷ்பு , நக்மா, ஷாலினி என்ற பெரிய பட்டியல் இவர் அறிமுகத்தில் இருக்கும்.
இவரது மகன் பகத் பாசில் (நடிகை நஷ்ரியாவின் கணவர்) விக்ரம்-2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து கலக்கியவர்.
பகத் மிகச்சிறந்த மிமிக்கிரி கலைஞரும் கூட.
மலையாளத்தில் மிமிக்ரி கலைஞர்கள் பின்னர் திரையில் பிரகாசிப்பது வழக்கம் இதற்கு உதாரணமாக ஜெயராம், கலா பவன் மணி, திலீப் ஆகியோரை குறிப்பிடலாம்.
இதையொட்டியே தமிழில் தாமு, சின்னி ஜெயந்த், மயில்சாமி, ரோபோ சங்கர், சிவகார்த்திகேயன் ஆகியோரை திரை உலகம் அரவணைத்துக் கொண்டது.
மிகச் சிறந்த இயக்குனரான பாசில், தமிழில் பெரிய அளவில் காலூன்ற முடியாவிட்டலும் கூட, அவர் எடுத்த படங்கள் அனைத்தையும் நல்ல படங்களாக தந்தவர் என்ற வகையில் அவர் மீது நன்மதிப்பு தமிழ் திரையுலகில் உண்டு.