ஜூலை 29- உலக புலிகள் தினம்
’புலி அடிச்சு பார்த்திருப்பே, இந்த பூபதி அடிச்சு பார்த்திருக்கிறியா’ என்று தவசி படத்தில் விஜயகாந்த் வசனம் பேசுவார். அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் நாயகர்கள் பலரும் திரையில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சர்வசாதாரணம்.
சினிமா உள்ளிட்ட கலையம்சங்களில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும், குழந்தைகளைக் கொஞ்ச புலி போன்ற கானுயிர்களை உதாரணம் காட்டுவது நம்மூர் தாய்மார்களின் இயல்பு. காரணம், புலியின் உக்கிரமும் வேகமும் ஈடு செய்ய முடியாதது.
புலியைவிட உத்வேகம் அதிகம் என்று ஒப்பிட்டுக்கொள்வதையும், அதனைக் கேட்டு கைத்தட்டல்கள் அள்ளுவதையும் மட்டுமே கண்டவர்கள் கூட, அவ்விலங்கு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வார். காட்டு ராஜாவாக சிங்கம் கொண்டாடப்பட்டாலும், சுறுசுறுப்புக்கு உதாரணமாகக் காட்டப்படுவது புலிதான்.
நமது தேசிய விலங்கு!
இந்தியா, சீனா, நேபாளம், பூடான், கம்போடியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் புலிகள் அதிகம் வசிக்கின்றன. குறிப்பாக, உலகம் முழுக்கவுள்ள புலிகளில் 80% இந்தியாவில் காணப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு தென்னக வனப்பகுதிகளில் இருக்கின்றன.
சுந்தரவனக் காடுகள், மத்தியப்பிரதேசத்திலுள்ள சத்புதா மைகல், தமிழ்நாட்டின் நீலகிரி வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன.
2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவிலுள்ள புலிகளின் எண்ணிக்கை 2,967. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைவிட சுமார் 750 புலிகள் அதிகமிருந்தது கானுயிர் ஆர்வலர்களிடையே உற்சாகத்தைக் கூட்டியது.
இந்தியாவில் 50 இடங்களில் புலிகள் சரணாலயங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை களக்காடு முண்டந்துறை, முதுமலை சரணாலயங்களுக்கு அடுத்தபடியாக ஆனைமலை, சத்தியமங்கலம் வனப்பகுதிகளும் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டன.
புலிகளின் கால் தடம் மற்றும் கேமிரா பதிவு வழியே அவற்றின் அடையாளங்கள் குறிக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 264 புலிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம். அடர்வனப்பகுதிகளில் கணக்கெடுப்புக்கு உள்ளாகாத புலிகள் சிலவும் இருக்கக்கூடும்.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. எனவே, அவற்றை அழிந்துவிடாமல் பாதுகாப்பது நமது கடமை.
கானுயிர் காவலன்!
ஒருவரது பயம் இன்னொருவருக்குப் பாதுகாப்பைத் தருமென்று சொல்வார்கள். அந்த வகையில், ஒருகாலத்தில் காட்டு விலங்குகள் குறித்த பயமே கானகங்களைக் காத்தது. குறிப்பாக, புலி உள்ளிட்ட கொடிய விலங்குகள் இருந்ததாலேயே காடுகளுக்குள் அத்துமீறல்களும் குறைவாக இருந்தன.
இன்று, காட்டு வளங்களைச் சுரண்டுவதற்கு ஒரு கூட்டமே காத்திருக்கிறது. வீரத்தைப் பறைசாற்ற, மருத்துவப் பயன்களுக்காக, உடல் சார்ந்த அதீத நம்பிக்கைகளுக்காக புலிகளை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. அதிநவீன வேட்டைக்கருவிகளும் கண்காணிப்பு அமைப்புகளும் அதனை எளிதாக்கியுள்ளன.
இவற்றை மீறி தங்களைத் தற்காத்துக்கொள்ளும் ஆற்றல் எல்லா உயிர்களையும் போல புலிகளுக்கும் உண்டு. அதையும் மீறி, புலிகளைக் காக்க முக்கியக் காரணங்களாக விளங்குவது ‘பல்லுயிர்ப்பெருக்கம்’. உணவுச்சங்கிலியைச் சிதைக்காமல் காத்ததிலும் புலிகளின் இருப்பு அடங்கியிருக்கிறது.
அடர்வனங்களுக்குள் மனித காலடிகள் படாதபோது எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்த இச்செயல்பாடு, தற்போது அடியோடு மாறுதலைச் சந்தித்திருக்கிறது. இது, இவ்வுலகின் இயல்புக்கு மிகப்பெரிய கேடு.
காடுகளில் இயற்கை வளம் சூறையாடப்படுவதும், ஆடம்பரமான கட்டடங்கள் கட்டப்படுவதும், புலிகள் இடம்பெயர்ந்து மக்கள் வசிக்குமிடம் தேடி வருவதற்குக் காரணமாகிறது. 1970களில் தொடங்கிய இப்பிரச்சனை, தற்காலத்தில் அதன் உச்சத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
காப்பது நம் கடமை!
நாம் வாழுமிடத்திலுள்ள பெருமைகளை தாங்கிப் பிடிக்காவிட்டாலும், அவற்றை நிலைகுலையாமல் இருக்கச் செய்வது பெருங்கடமையாகும். அந்த வகையில், இந்தியாவின் பெருமைக்குரியவற்றில் ஒன்றாக விளங்கும் புலிகளையும் நாம் காத்தாக வேண்டும்.
உலகம் முழுவதும் ஜூலை 29ஆம் தேதியன்று ‘சர்வதேச புலிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புலிகளின் சிறப்புகள் பற்றியும், அவற்றைக் காப்பது குறித்த விழிப்புணர்வைப் பற்றியும் அறிவது முக்கியம்.
குறைந்தபட்சமாக வனப்பகுதிகளுக்கும் அதனையொட்டிய பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லும்போது, முடிந்தவரை அவற்றை அசுத்தப்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், அவற்றின் அசைவுகளில் சிறு மாற்றம் ஏற்படவும் நாம் காரணமாவது பெரிய விளைவுகளை உருவாக்கக் கூடும்.
ஆதலால், கானுயிர் காக்க புலிகளைக் காப்போம். மனிதர்களைப் புலிகளாகச் சித்தரிக்கும் வீரமிக்க மரபைக் கொண்ட ஒரு நிலத்தில், அன்றாட வாழ்வில் எவ்வகையிலாவது அவற்றை நினைவுகூரும் மனிதர்கள் மத்தியில், அதனைக் காப்பதும் கொண்டாடுவதும்தானே பொருத்தமான செயல்!
– பா.உதய்