’சாமி’யில் இட்லியில் பீர் ஊற்றிப் பிசைந்தவாறே விக்ரம் அறிமுகமாவதையும், ‘திருமலை’ யில் ‘யார்றா இங்க அரசு’ என்று விஜய் கர்வத்தோடு கர்ஜிப்பதையும் பார்த்து கை தட்டிய அனுபவம் இருக்கிறதா? உங்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘டைனோசர்ஸ்’ நிச்சயம் இருக்கும்.
அப்படியானால், இது பழைய படம் பார்த்த அனுபவத்தைத் தருகிறதா? இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப இருக்குமா? இது போன்ற கேள்விகளுக்கு, இயக்குனர் எம்.ஆர்.மாதவன் மற்றும் ‘டைனோசர்ஸ்’ குழு என்ன பதில்களைத் திரையில் தந்திருக்கிறது?
வன்முறை வேண்டாமே!
வடசென்னையின் ஒரு பகுதி. அங்கு வாழும் மக்கள் சாலையார் (மானெக்ஷா) என்பவரைக் கண்டால் பயந்து நடுங்குகின்றனர். ஏனென்றால், அந்த பரப்பில் நல்லது, கெட்டதைத் தீர்மானிப்பது அவர்தான். துரை (ஸ்ரீனி) அவரிடம் வேலை செய்யும் ஒரு அடியாள். மனம் திருந்தி குடும்பம், வியாபாரம் என்று சாதாரணமாக வாழ விரும்புகிறார். அவ்வாறே அவருக்குத் திருமணமும் ஆகிறது. தீபாவளியை ஒட்டி பட்டாசுக் கடை நடத்தும் வேலைகளிலும் இறங்குகிறார்.
அந்த நேரம் பார்த்து, ஒரு கொலை வழக்கில் அவர் பெயர் இடம்பெறுகிறது. நண்பன் துரைக்காக, தனா (ரிஷி ரித்விக்) அந்தப் பழியை ஏற்கிறார். குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவராகச் சிறை செல்கிறார்.
அந்த தனாவின் தம்பி மண்ணு (உதய் கார்த்திக்). நண்பர்களோடு சேர்ந்து ஜாலி அரட்டை, கிண்டல் கேலி என்று வாழ்ந்தாலும், பொறுப்பாக உழைத்துச் சம்பாதித்து ஒரு பெரிய வீடு, தொழில் என்று செட்டில் ஆக நினைக்கிறார். கணவர் ரவுடித்தனம் செய்து வன்முறைக்குப் பலியான காரணத்தால், ‘வன்முறை வேண்டாமே’ என்று சொல்லிச் சொல்லி தனாவையும் மண்ணுவையும் வளர்க்கிறார் அவர்களது தாய் (ஜானகி சுரேஷ்).
ஒருநாள் மண்ணு, அவரது நண்பர்கள், துரை ஆகியோரை அழைத்துக்கொண்டு, கிளியாரின் வீட்டிற்குச் சென்று பணம் வாங்குமாறு தன் கையாளிடம் சொல்லி அனுப்புகிறார் சாலையார். கிளியார் என்பவர் சாலையாரின் முதல் எதிரியாகத் திகழ்பவர். அது மட்டுமல்ல, எந்த வழக்கில் துரைக்குப் பதிலாக தனா சிறை சென்றாரோ, அதில் பலியான நபரின் மைத்துனர். நண்பர்கள் என்னவென்று தெரியாமல் காரில் ஏறினாலும், மண்ணு அவர்களோடு செல்ல மறுக்கிறார். அந்த நேரம் பார்த்து, மண்ணுவின் பின்னால் தீவிரமாகச் சுற்றிவரும் தீபா (சாய் பிரியா தேவா) அங்கு வர, அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்களுடன் ஒன்றாகப் பயணிக்கிறார். மண்ணு இருக்கும் காரணத்தால், மனம் திருந்திய துரையும் காரில் ஏறச் சம்மதிக்கிறார்.
கிளியார் வீட்டில் நுழைந்தபிறகு, துரையின் வாழ்வில் விதி விளையாடுகிறது. நண்பர்களுடன் துரையுடன் சென்றாலும், மண்ணு காரில் அமர்ந்துவிடுகிறார். தன் தங்கையின் கணவரைக் கொலை செய்தவர்களில் துரையும் ஒருவர் என்று தகவல் கிடைக்க, கிளியார் கொதித்தெழுகிறார். அதனை உறுதி செய்துகொண்டு, அவரைக் கொல்வதென்று முடிவெடுக்கிறார்.
அந்த நேரம் பார்த்து, வெளியே காரில் காத்திருந்த மண்ணு வீட்டிற்குள் நுழைகிறார். துரையைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அதற்காகவே காத்திருந்த கிளியாரின் அடியாட்கள், கொலை வெறியோடு துரையைத் துரத்துகின்றனர்; சில நிமிடங்கள் கழித்து, அவர்களால் துரை வெட்டிக் கொல்லப்படுவதை நேரில் காண்கிறார் மண்ணு. அதனைத் தடுக்க முடியாமல் போனதை எண்ணி அழுது தீர்க்கிறார்.
அந்த சம்பவத்திற்குப்பின், தன் மன உறுதியை விட்டு கொலைவெறியோடு மண்ணு பழி வாங்கக் கிளம்பினாரா, இல்லையா என்று சொல்கிறது ‘டைனோசர்ஸ்’. ’இல்லை’ என்ற பதிலே இத்திரைக்கதையை நகர்த்தும் என்பது நம் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இறுதிச்சடங்கின்போது ‘டைனோசரை’ தூக்குவது போல ஆயிரம் பேர் திரளும் அளவுக்குத் தனது வாழ்வு மற்றவர்களுக்குப் பலன் அளிப்பதாக இருக்க வேண்டுமென்று நாயகன் விரும்புகிறார்; கூடவே, தன்னுடன் இருப்பவர்கள் வன்முறைக்குப் பலியாகக் கூடாது என்றும் நினைக்கிறார். அதுவே, இப்படத்தின் டைட்டிலுக்கும் டேக்லைனுக்குமான காரணம்.
என்ன பெர்பார்மென்ஸ்!
நாயகனாகத் தோன்றியிருக்கும் உதய் கார்த்திக், இதற்கு முன் நடுநிசி நாய்கள், காத்தாடி உட்படச் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த அனுபவத்தோடு காதல், நகைச்சுவை, ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒரு தேர்ந்த முன்னணி நாயகன் போன்ற உடல்மொழியையும் உத்வேகத்தையும் அவர் கேமிரா முன் காட்டியிருப்பது பாராட்டுக்குரிய அம்சம்.
நாயகி சாய் பிரியா தேவாவுக்கு இதில் அதிக காட்சிகள் இல்லை. ஆனால், திரைக்கதையோடு ஒட்டாத அளவுக்கு அவரது பாத்திற்கான இடம் பலவீனமானதாகவும் இல்லை. அதற்கேற்ப, அளவாக நடித்து நம் கவனம் ஈர்க்கிறார்.
துரையாக வரும் ஸ்ரீனிக்கு இதில் முக்கிய வேடம். ‘கெத்து’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும்விதமான நடிப்பைத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக நடித்த யாமினி சந்தரும் இரண்டொரு காட்சிகளில் வந்து கவனத்தைக் கவர்கிறார்.
சாலையாராக நடித்துள்ள மானெக்ஷா, அவரது கையாளாக வருபவர், ஜானகி சுரேஷ், கிளியாராக நடித்தவர், நாயகனின் நண்பர்களாக வருபவர்கள், இரு குழுக்களின் அடியாட்கள், ஊர் மக்களாக நடித்தவர்கள் என்று அனைவருமே ‘சிறப்பாக’ நடித்துள்ளனர். வெகுநாட்களுக்குப் பிறகு, நடிகர் செந்தில் இதில் கண்டக்டராக முகம் காட்டியிருக்கிறார். இயக்குனர் ரமணா இரண்டொரு காட்சிகளில் வந்து போயிருக்கிறார்.
‘டைனோசர்ஸ்’ படத்தின் மாபெரும் பலம் அதன் காஸ்ட்டிங் தான். அதனை லாவகமாகத் திரையில் காட்டி அசரடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த். ஆக்ஷன் காட்சிகளில் அவர் கொட்டியிருக்கும் உழைப்பு அபாரம். அதற்கேற்ப, ‘ஸ்டன்னர்’ சாம் குழுவும் தங்கள் பணியைச் செய்துள்ளது.
கலை இயக்குனர் வலம்புரிநாதன், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வைக் கண் முன்னே காட்ட உதவியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் மிகநேர்த்தியாகக் காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்; முன்பாதியின் தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் இழுவையாக இருப்பது மட்டுமே பெருங்குறை.
ஒரு இயக்குனராகத் தனது திரைக்கதையும் காட்சியாக்கமும் எந்த திசையில் செல்ல வேண்டும்? எதற்கு அழுத்தம் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் எம்.ஆர்.மாதவன். ஆனால் நாயகன் நாயகி இடையிலான காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் குழப்பியடித்திருக்கிறார்.
’பட்டாசு’அனுபவம்!
’வடசென்னை வாழ்க்கைனாலே எனக்கு அலர்ஜி’ என்பது போன்ற விமர்சனங்களோடு படம் பார்க்க வருபவர்களைப் பலமுறை கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள், இந்த படத்தின் போஸ்டரை கூட பார்க்கக் கூடாது. ஆனால், ஒரு வாழ்வை நேரில் பார்த்த அனுபவத்தை ஒரு படம் தர வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு ‘டைனோசர்ஸ்’ நிச்சயம் ‘அல்வா’ உண்ட சுகத்தைத் தரும்.
ஏனென்றால், நாயகனுக்கு ரவுடித்தனம் என்றாலே பிடிக்காது; ஆனால், அவர் தாக்குதலுக்குள்ளாகும்போது சுற்றியிருப்பவர்கள் ‘அடி, குத்து’ என்று கூக்குரலிடுகின்றனர். அந்த சத்தங்களில் இருந்து விலகி, கொலை செய்த குற்றவுணர்ச்சியைத் தொட்டுவிடக் கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வோடு, வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அவர் எதிர்கொள்வதையே முன்னிலைப்படுத்த விரும்பியிருக்கிறார் இயக்குனர். அதில் வென்றிருக்கிறார்.
ஒரு நேர்த்தியான காட்சியாக்கத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ப, இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிளியார் வீட்டுக்குள் துரை சிக்கிக்கொள்ளும் காட்சியும், இறுதிச்சடங்கு நடக்குமிடத்தில் சாலையார் ஆட்களோடு மண்ணு வம்பிழுக்கும் காட்சியும் வழக்கமான காட்சி அளவைத் தாண்டி நீள்கின்றன. அவை நம்மை ‘கூஸ்பம்ஸ்’ தருணங்களுக்கு இட்டுச் செல்கின்றன.
ஒரு முழு நீள கமர்ஷியல் ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு, கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தைப் பரிசளிக்கிறது ‘டைனோசர்ஸ்’. வாணவேடிக்கைக்கான பட்டாசுகளைக் கையில் தூக்கிக்கொண்டு நாயகன் வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி, அதற்கொரு உதாரணம்.
அதேநேரத்தில், ரவுடித்தனமே வாழ்க்கை என்றிருப்பவர்களின் தினசரிக் கணங்களை நேரில் பார்க்கும் ‘டீட்டெய்லிங்’கும் படத்தில் உண்டு. அந்தக் கலவையைச் சரியாகப் புரிந்துகொண்டு, படத்தைப் பார்க்க அமர்ந்தால் ஒரு சிறப்பான அனுபவத்தை நிச்சயம் தரும் இந்த ‘டைனோசர்ஸ்’.
- உதய் பாடகலிங்கம்