இல்லத்தரசிகளைக் கண்ணீர் விட வைக்கும் தக்காளி விலை!

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளியின் விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரியளவில் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் குடும்பம் மற்றும் ஹோட்டல்களிலும் முக்கிய பங்கு வகிப்பது தக்காளி.

சமையல் என்றாலே தக்காளி இல்லாமல் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது.

தக்காளியின் விலையேற்றத்தால் பெரும்பாலான ஓட்டல்களிலும் வீடுகளிலும் தக்காளி சட்னி, தக்காளி சாதம் போன்ற தக்காளி அதிகமாக பயன்படுத்த கூடிய உணவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் தலைநகராக விளங்கக்கூடிய சென்னை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கம்.

அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 லாரிகளில் தக்காளியின் வரத்து இருக்கும்.

ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 வண்டிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். இதுவே தக்காளியின் விலை உயர்வுக்கும் காரணமாக சொல்லப்படுகிறது.

வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் விடும் இல்லதரசிகள் தற்போது தக்காளி விலையை கேட்டதும் கண்ணீர் வடிக்கின்றனர்.

அன்றாட வேலைக்கு செல்ல கூடியவர்கள் எப்படி ஒரு கிலோ 150 ரூபாய் வரை கொடுத்து வாங்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

மனிதன் உயிர்வாழ முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்றான தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு திணறி வருகிறது.

கடந்த இரண்டு மாதமாக தக்காளியின் விலை சதம் விளாசியதே இதன் சாட்சி.

– தேஜேஷ்

You might also like